Showing posts with label கணித அறிஞர்கள். Show all posts
Showing posts with label கணித அறிஞர்கள். Show all posts

Thursday, 21 December 2023

தேசிய கணித தினம்

தேசிய கணித தினம்

தேசிய கணித தினம் எப்போது கொண்டாடப்படுகிறது தெரியுமா?

டிசம்பர் 22 அன்று தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது இன்றுதான்.

ஏன் அந்தத் தினத்தில் தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

அன்றுதான் கணித மேதையான சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள். இவர் தமிழகத்தைச் சார்ந்த கணித மேதை என்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும். இவர் கும்பகோணம் கல்லூரியில் கல்வி பயின்றவர் என்பது தஞ்சைவாசிகளுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும். அவரது மனைவியின் பெயர் ஜானகியம்மாள்.

சீனிவாச ராமானுஜம் பிறந்தது 22.12.1887 இல். இறந்தது 26.04.1920 இல். அவர் வாழ்ந்தது 33 ஆண்டுகள். அதற்குள் அவர் கணித உலகில் நிகழ்த்திய சாதனைகள் அளவிடற்கரியன.

அவரது 125வது பிறந்த தினம் 26.12.2011 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.

அந்த விழாவுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையேற்றார்.

இந்த விழாவில்தான் கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடுவது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2012 முதல் ஒவ்வொராண்டும் டிசம்பர் 22 வது நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தகவல் கணித ஆர்வமுள்ள உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

வணக்கம்!

*****

Wednesday, 12 July 2023

உலகின் முதல் கணிதப் பெண்மணி யார் தெரியுமா?

உலகின் முதல் கணிதப் பெண்மணி யார் தெரியுமா?

உலகின் முதல் கணிதப் பெண்மணியாகக் கருதப்படுபவர் ஹைபாதியா. இவர் வானியல் அறிஞரும் கூட. அத்துடன் தத்துவவாதியும் ஆவார்.

கணித ஆசிரியராக எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா அருங்காட்சியகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக இருந்தவர் ஹைபாதியா. வானியல், வடிவியல், இயற்கணிதம் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்தவர்.

இவரது புதுப்புனைவுகள் பல்துறை சார்ந்தது. வானியலில் பயன்படும் அஸ்ட்ரோலேப் கருவியை மேம்படுத்தியவர். ஹைட்ரோ மீட்டரை நவீனப்படுத்தியவர்.

இவ்வளவு பல்துறை திறமை மிக்க இந்தப் பெண் யாரென்றால், கணிதம் மற்றும் தத்துவ பேராசிரியாராக விளங்கிய தியோனின் மகள்தான் ஹைபாதியா.

ஆளுமை மிக்கப் பெண்மணியாகவும் ஹைபாதியா விளங்கியுள்ளார். அலெக்ஸாண்ட்ரியா நீதிபதிகள் ஹைபாதியாவிடம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர். ரோமானியப் பேரரசர் ஒரெஸ்டெஸ்க்கும் ஹைபாதியாவின் ஆலோசகளைப் பெற்றிருக்கிறார்.

ஹைபாதியா அழகானவர். உடலை நன்றாகப் பராமரித்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். அறிவுச் சுரண்டலையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தவர். இதை விரும்பாத பழமைவாதிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டவர்.

ஹைபாதியா இறந்த போது அவருக்கு வயது 45 லிருந்து 60க்குள் இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

இவரது காலம் நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டாகும். இவரது பிறப்பு கி.பி. 350 அல்லது 370 என வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். கி.பி. 415 இல் இவரது இறப்பு நிகழ்ந்திருக்கிறது.

ஹைபாதியாவின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘அகோரா’ என்ற திரைப்படம் வந்துள்ளது. அந்தத் திரைப்படத்தைக் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிக் காணவும்.

 https://www.youtube.com/watch?v=uxbBaZCra8k&pp=ygUQYWdvcmEgZnVsbCBtb3ZpZQ%3D%3D

*****

Tuesday, 11 July 2023

கணித உலகின் மிகப் பெரிய விருது எது தெரியுமா?

கணித உலகின் மிகப் பெரிய விருது எது தெரியுமா?

கணித உலகின் மிகப் பெரிய விருது எது தெரியுமா?

ஏபெல் விருதுதான் கணித உலகின் மிகப் பெரிய விருது.

யார் இந்த ஏபெல்?

26 வருடம் மட்டும் வாழ்ந்த கணித அறிஞர்தான் ஏபெல்.

இவரது முழுப் பெயர் நீல்ஸ் ஹென்ரிக் ஏபல். நார்வே நாட்டைச் சார்ந்த கணிதவியலாளர். 05.08.1802 இல் பிறந்தவர். 06.04.1829 இல் இறந்தவர்.

ஒரு கணிதவியலாளர் 500 ஆண்டுகள் வாழ்ந்தால் செய்யும் கணிதப் பணிகளைச் ஏபல் 26 வருட ஆயுளுக்குள் செய்திருக்கிறார். அந்தச் சிறப்பைக் கணக்கில் கொண்டே ஏபெலின் பெயரில் கணித உலகின் மிகப் பெரிய விருது வழங்கப்படுகிறது.

நார்வே நாடு இந்த விருதை வழங்குகிறது. நார்வே பாராளுமன்றத்தில் 2002 இல் ஏபெலின் 200வது பிறந்த தினத்தை முன்னிட்டு அந்நாடு கணித உலகின் மிக உயரிய விருதாக ஏபெல் விருதை வழங்குவதாக அறிவித்தது.

அதற்கடுத்த ஆண்டான 2003லிருந்து இவ்விருது ஒவ்வொராண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை முதலில் பெற்றவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஜீன் பியர் செர்ரே ஆவார். இடவியல் (டோபாலஜி), இயற்கணித வடிவியல், எண் கோட்பாடு சார்ந்த இவரது பங்களிப்புகளுக்காக ஏபல் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

2007 இல் இந்தியாவைச் சார்ந்த எஸ்.ஆர். ஸ்ரீனிவாச வரதன் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ஏபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி யார் தெரியுமா?

அமெரிக்காவைச் சார்ந்த கரென் உகெலென்பெக்தான் ஏபல் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி ஆவார். 2019 இல் இவர் இவ்விருதைப் பெற்றார். இவர் வடிவியல், அளவீட்டுக் கோட்பாடு, கணித இயற்பியல் ஆகிய துறைகளுக்குச் செய்த பங்களிப்புகளுக்காக ஏபல் விருதைப் பெற்றார்.

2022 இல் இவ்விருதைப் பெற்றவர் டென்னிஸ் பார்னெல் சல்லிவன் ஆவார். இவர் 82 வயது உடையவர். இவர் இயற்கணிதம், வடிவியல், இடவியல் (டோபாலஜி) போன்ற கணிதத் துறைகளில் ஆர்வமுடையவர். கணிதப் பிரிவுகளான ஹோமோடோபி, டைனமிக் சிஸ்டம்ஸ், கேயாஸ் தியரி ஆகிய கணிதத் துறைகளில் பங்களிப்புகளை வழங்கியவர் ஆவார்.

தற்போதைய இப்பரிசின் மதிப்பு 7.5 மில்லியன் நர்வேஜியின் குரோனாகும். இந்திய மதிப்பில் தோராயமாக ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இந்தப் பரிசானது கணிதத் துறையில் வழங்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படுகிறது.

*****