Saturday, 5 September 2026

என்பீல்ட் போல்டர்கீஸ்ட் - பயத்தின் இயற்பியல்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 75

என்பீல்ட் போல்டர்கீஸ்ட் - பயத்தின் இயற்பியல்

1977, லண்டன்.

என்பீல்டில் உள்ள கிரீன் வீதியில் ஒரு சாதாரண வீடு.

பெக்கி ஹாட்சன் என்ற ஒற்றைத் தாய், தன் நான்கு குழந்தைகளுடன் வசிக்கிறார். ஒரு நாள் இரவு, கட்டில்கள் தானாக நகர்கின்றன. சுவர்களில் யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. லண்டன் போலீஸ் வருகிறது.

ஒரு பெண் போலீஸ் அதிகாரி தன் கண்ணெதிரே நாற்காலி ஒன்று தரையில் நான்கு அங்குலம் நகர்வதைப் பார்க்கிறார். ரிப்போர்ட்டில் அதை எழுதுகிறார்.

அவ்வளவுதான்.

இங்கிலாந்து முழுவதும் ''பேய்... பேய்... ' என்று அலறத் தொடங்கியது.

குறிப்பாக, 11 வயது சிறுமி ஜேனட் காற்றில் மிதப்பதாகவும், அவளுக்குள் பில் வில்கின்ஸ் என்ற இறந்துபோன 72 வயது கிழவனின் ஆவி புகுந்து கொண்டு தொண்டை அடைத்த குரலில் பேசுவதாகவும் புகைப்படங்களும் ஆடியோக்களும் வெளியாகின. 'தி கான்ஜுரிங் – 2'  படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்தக் கதை அள்ளும்.

ஆனால், இதன் பின்னால் இருக்கும் நிஜமான இயற்பியல் மற்றும் உளவியல் என்ன என்கிறீர்களா?

போல்டர்கீஸ்ட் என்ற ஜெர்மன் வார்த்தைக்கு சத்தம் போடும் ஆவி என்று அர்த்தம். ஆனால், அமானுஷ்ய ஆராய்ச்சிகளின் வரலாற்றில் போல்டர்கீஸ்ட் சம்பவங்கள் எங்கு நடந்தாலும், அங்கே கண்டிப்பாக 11 முதல் 15 வயதுக்குட்பட்ட டீனேஜ் குழந்தைகள் இருப்பார்கள்.

ஏன்?

அது ஆவியின் சக்தி அல்ல; ஹார்மோன்களின் சக்தி.

பருவமடைதலின் போது ஏற்படும் தீவிரமான மன அழுத்தம், கவன ஈர்ப்புத் தேவை ஆகியவை குழந்தைகளை அறியாமலேயே விசித்திரமாக நடந்து கொள்ள வைக்கின்றன.

அப்புறம் ஜேனட் காற்றில் மிதப்பதாகக் காட்டும் புகைப்படங்களை உற்றுப் பார்த்தால் உண்மை விளங்கும். அவள் கட்டிலில் இருந்து மேலே குதிக்கும் போது எடுக்கும் ஹை ஸ்பீட் புகைப்படங்கள் அவை. கால்கள் மடிந்திருக்கும், கை விரிந்திருக்கும். இயற்பியலின் புவிஈர்ப்பு விதியை மீறி எந்த மனிதனும் காற்றில் மிதக்க முடியாது. அது லேவியேஷன் அல்ல; வெறும் ஹை ஜம்ப்.

அடுத்ததாக ஜேனட் பேசிய அந்தப் பயங்கரமான குரல்?

அது வென்ட்ரிலோக்விசம். தொண்டையின் பின்புற த சதைகளைப் பயன்படுத்தி குரலை மாற்றிப் பேசுவது. இதைச் சில மணிநேரப் பயிற்சியிலேயே யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும்.

இங்கிலாந்தின் எஸ்.பி.ஆர், அதாவது சொசைட்டி பார் சைக்கிக்கிள் ரிசர்ச் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்த வீட்டில் ரகசியக் கேமராக்களைப் பொறுத்தினார்கள். கேமராக்கள் ஓடாத சமயங்களில், ஜேனட்டும் அவள் சகோதரியும் ஸ்பூன்களை வளைப்பதையும், பொம்மைகளைத் தூக்கி எறிவதையும் கண்டுபிடித்தார்கள்.

பின்னாள்களில் ஜேனட்டே ஒப்புக்கொண்டார், "நாங்கள் 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை பொய் சொன்னோம். ஏனென்றால், பத்திரிகையாளர்களும் ஆய்வாளர்களும் எங்களை ஏமாற்றத்துடன் பார்க்கக் கூடாது என்பதற்காக!"

அன்னபெல்லுக்கு ஒரு துணிப் பொம்மை தேவைப்பட்டது. என்பீல்ட் போல்டர்கீஸ்ட்டிற்கு ஒரு 11 வயதுச் சிறுமியின் கவன ஈர்ப்புத் தேவைப்பட்டது. அவ்வளவுதான் விசயம்.

பயம் என்பது மனித மூளையின் மிக பலவீனமான ஒரு வேதியியல் மாற்றம். அதில் கொஞ்சம் ஊடக வெளிச்சத்தையும் சேர்த்துவிட்டால், அது மிகப்பெரிய பிசினஸாக மாறிவிடும்.

என்பீல்டில் வீசியது அமானுஷ்யக் காற்று அல்ல; மனிதக் கற்பனையின் புழுதிப் புயல்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment