Sunday, 27 September 2026

முப்பது வருட கணக்கு

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 96

முப்பது வருட கணக்கு

இரவு மணி இரண்டு.

நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் ஈ.சி.ஆர் சாலையில் கோவிந்தின் பழைய மாருதி 800 கார் தொண்டை கரகரக்க ஓடிக்கொண்டிருந்தது. கோவிந்திடம் பல கார்கள் இருந்தாலும், அந்தப் பழைய மாருதி 800 மேல் அவனுக்குத் தனிக்காதலே உண்டு.

அங்கு எங்கெங்கெல்லாம் வீட்டுமனைகள் போடலாம் என்ற திட்டத்தில் பகலெல்லாம் அலைந்து, பார்க்க வேண்டிய ஆட்களைப் பார்த்து, விவரங்களைத் திரட்டிக் கொண்டு, கோவிந்த் இப்போது வீடு திரும்பும் வழியில் இருந்தான். பகலெல்லாம் அலைந்த அலைச்சலில் கண் எரிந்தது. காதுகளில் காற்று அடிக்கும் சத்தம் மட்டும் கேட்டது.

திடீரென்று ரோட்டோர வெளிச்சத்தில் ஒரு வெள்ளை சுடிதார் உருவம் கை காட்டியது. துல்லியமாக நிழல் தெரிந்தது.

கோவிந்த் பிரேக் அடித்தான். கார் கிச்சுகிச்சு மூட்டும் சத்தத்துடன் நின்றது.

பின் கதவு திறக்கப்பட்டு யாரோ ஏறினார்கள். ஒரு சில்லென்று குளிர் காற்று உள்ளே நுழைந்தது.

"தம்பி! திருத்துறைப்பூண்டி போவணும். கொஞ்சம் டிராப் பண்றீங்களா?" மெல்லிய, அலுப்புத் தட்டிய குரல்.

கோவிந்த் கண்ணாடி வழியாகப் பின்சீட்டைப் பார்த்தான். கூந்தல் கலைந்த ஒரு பெண். முகத்தில் லேசான சோகம்.

"சரிங்கக்கா! ஏறிட்டீங்க, போயிடலாம். ஆனா ஒண்ணு, என் வண்டில ஏசி வேலை செய்யாது. இந்த விண்டோவை கீழ இறக்கி விட்டுடுங்க" என்றான் கோவிந்த் வழக்கம் போலப் பேச்சுக் கொடுக்கும் பாணியில்.

"ஏசி இல்லனா பரவாயில்லை தம்பி! சீக்கிரம் போங்க, வீட்ல அண்ணன் காத்துட்டிருப்பார்." என்றாள் அந்தப் பெண்.

காரின் இன்ஜின் முனகிக்கொண்டே நகர்ந்தது. ஐந்து நிமிடங்கள் பேச்சு மூச்சில்லை. கோவிந்துக்குத் திடீரென ஒரு சின்ன சந்தேகம் பொத்துக் கொண்டு வந்தது.

'டேய் கோவிந்த் உனக்குத் தெரியும்தானே? இதுதான் வேனிஷிங் ஹிட்ச்ஹைக்கர் கிளாசிக்! அமெரிக்கால பால்டிமோர்னா, நம்ம ஊருல ஈ.சி.ஆர். நடுவழில திடீர்னு பார்த்தா ஆளைக் காணோம்னு சொல்லுவானுங்களே. ஒருவேளை நாம மாட்டிக்கிட்டோமோ?' கோவிந்துக்கு மூளைக்குள்ளே ஒரு சின்ன அலாரம் மணி அடித்தது.

கோவிந்த் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, பின்சீட்டை நோக்கிக் கேட்டான், "அக்கா! உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா? நீங்க திருத்துறைப்பூண்டிதான் போறீங்களா? அல்லது அதைத் தாண்டி கோட்டூர் போறீங்களா? "

பின்சீட்டில் இருந்து சத்தமே இல்லை.

கோவிந்த் நடுக்கத்துடன் கண்ணாடி வழியே பார்த்தான். பின் இருக்கை காலியாக இருந்தது! கண்ணாடிகள் இறக்கப்பட்டு, சில்லென்று காற்று மட்டும் உள்ளே வீசியது.

"அம்மாடி! மாட்டுனோம்!" கோவிந்த் அலறினான். வண்டியின் வேகத்தை எண்பதில் இருந்து நூற்றி இருபதுக்கு மாற்றினான். நெஞ்சு படபடக்க, உடலெங்கும் வியர்த்தது.

அப்போது, காரின் டேஷ்போர்டில் இருந்த பழைய மியூசிக் சிஸ்டம் தானாக ஆன் ஆகி, மெலிதாக ஒரு குரல் ஒலித்தது:

"தம்பி! வண்டியை ஓரமா நிறுத்துங்க."

கோவிந்த் திகிலடைந்து வண்டியை ரோட்டோரம் கீச் என்று பிரேக் போட்டு நிறுத்தினான்.

பின்சீட்டில் அதே பெண் மீண்டும் தோன்றினாள்! அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது.

கலங்கிப்போன கோவிந்த் நடுங்கிய குரலில் கேட்டான், "அக்கா! நீங்க மனுஷிதானா? இல்ல ஆவியா? என்னை விட்டுடுங்க. நான் எந்தத் தப்பும் பண்ணல."

அந்தப் பெண் எரிச்சலுடன் சன்னலைத் தட்டினாள், "என்ன தம்பி உளறுறீங்க? நீங்க வண்டி ஓட்டிக்கிட்டே ஒரு மாதிரி குறட்டை விட்டுட்டு வந்தீங்க. நான் பயந்துபோய், அடுத்த சிக்னல்ல டிராப் பண்ணுங்கன்னு சொல்றதுக்குள்ள நூறு கிலோ மீட்டர் வேகத்துல வண்டியை இப்படிப் பறக்க விடுறீங்க! நான் என்னோட சூட்கேஸை பின்சீட்ல இருந்து முன்னாடி எடுக்கப் போனேன். அதுக்குள்ள என்னென்னவோ கற்பனை பண்ணிக்கிட்டு."

கோவிந்த் திகைத்துப் போய் விழித்தான். "அப்ப நீங்க ஆவி இல்லையா?"

"ஆவியா? அடேப்பா! நள்ளிரவுல ஈ.சி.ஆர்ல ஒரு பொண்ணு லிப்ட் கேட்டாலே பேய் படம் எடுக்க வந்துருவீங்களா? நான் நாகப்பட்டினம் துறைமுகத்துல மரைன் இன்ஜினியர். ஒரு முக்கியமான வேலை. வேலை முடிய நேரமாயிடுச்சு. வர்றப்ப வழியில் ஸ்கூட்டி காலை வாரி விட்டுடுச்சு. வேற வழியில்லாம, உங்ககிட்ட லிப்ட் கேட்டுட்டு இப்பதான்  வீடு போறேன்!"

கோவிந்த் பெருமூச்சு விட்டான். நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டே, தன் ஆண்ட்ராய்டு போனை எடுத்து கூகுள் மேப்ஸை ஆன் செய்தான்.

"அச்சச்சோ, சாரிங்க அக்கா! நான் ஏதோ பயந்துட்டேன். திருத்துறைப்பூண்டி வரைக்கும் கரெக்டா விட்டுடுறேன்." என்று கோவிந்த் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு வண்டியை நகர்த்தினான்.

வண்டி சில கிலோமீட்டர்கள் கடந்ததும், குளிர் காற்று அதிகமாக வீசியது. காரில் ஏசி இல்லை என்றாலும், கார் முழுவதும் உறைபனி போலக் குளிர்ந்தது. அப்போது மழையே இல்லை என்றாலும் கண்ணாடியில் வழியும் மழையைத் துடைப்பது போல வைப்பர் வேலை செய்தது.

கோவிந்த மீண்டும் தயக்கத்துடன் பின்சீட்டை கண்ணாடி வழியாகப் பார்த்தான். அந்தப் பெண் அமைதியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். சூழல் சற்று அமைதியானதும், கோவிந்த் பேச்சுக் கொடுத்தான், "இங்க பாருங்கக்கா! தப்பா எடுத்துக்காதீங்க. இந்த ஈ.சி.ஆர் ரோட்ல நள்ளிரவுல ரொம்ப விசித்திரமான விஷயங்களெல்லாம் நடக்கும்னு கதைகள் உண்டு. அதான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்."

இப்போது பின்சீட்டிலிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை.

"அக்கா! உங்களோட வீடு திருததுறைப்பூண்டியில எந்தத் தெரு?" என்று கோவிந்த்கேட்டுக் கொண்டே காரின் இன்டிகேட்டரைப் போட்டான்.

பதிலே இல்லை. காரின் ரேடியோ திடீரென்று சர்ரென்று சத்தத்துடன் ஸ்டாட்டிக் மோடிற்கு மாறியது. லேசானதொரு ஊமை இருமல் சத்தம் பின்சீட்டிலிருந்து கேட்டது.

கோவிந்த் அதிர்ச்சியுடன் பிரேக்கை மிதித்தான். காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டுப் படபடக்கும் நெஞ்சுடன் திரும்பிப் பார்த்தான்.

பின்சீட்டில் யாருமே இல்லை! ஆனால், அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது. அதோடு, இருக்கையின் மீது ஈரமான மண் கலந்த சில ரோஜா மலர்களும், ஒரு பழைய ரசீதும் கிடந்தன.

கோவிந்த் நடுங்கும் கைகளால் அந்த ரசீதை எடுத்துப் பார்த்தான். அதில் தேதி இருந்தது. '27 – செட்பம்பர் - 1996' சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ரசீது அது.

அப்போது, காரின் முன்பக்கக் கண்ணாடி மீது மெலிதாக யாரோ கையால் தட்டும் சத்தம் கேட்டது. கோவிந்த் மெல்லத் திரும்பிப் பார்த்தான்.

வெளியே மழையில் நனைந்தது போல, ஈரமாக உடைகளோடு அதே சுடிதார் பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் தன் முகத்தில் எந்தச் சலனமுமின்றி, மெலிதாகப் புன்னகைத்தவாறு காரின் கதவைத் திறக்க முயன்றுகொண்டிருந்தாள்!

கோவிந்தின் இதயம் ஒரு நொடி நின்று துடிப்பது போல இருந்தது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment