அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 98
வேனிஷிங் ஹிட்ச்ஹைக்கர்
காரில் தனியாகப் பயணம். இரவு நேரம். வழியில் ஒரு பெண் லிப்ட்
கேட்கிறாள். ஏற்றிச் செல்கிறீர்கள். திடீரென்று காணாமல் போய்விடுகிறாள். தேடினால்,
அவள் பல ஆண்டுகளுக்கு முன் அதே இடத்தில் விபத்தில் இறந்தவள் என்கிறார்கள். இதுதான்
வேனிஷிங் ஹிட்ச்ஹைக்கர். உலகெங்கும் பரவியிருக்கும் அமானுஷ்ய நகர்ப்புறக் கட்டக்கதை
இது. மனித மூளையின் பயமும் கற்பனையும் சேர்ந்து உருவாக்கும் மாயம்!
இப்படிப்பட்ட கட்டுக்கதைகள் வெறும் சாதாரண வதந்திகள் மட்டும்
அல்ல; அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு குளோபல்
விசித்திரம். இந்த விசித்திரப் பயணங்களில் பல சுவாரஸ்யமான பரிமாணங்கள் உண்டு.
மிகவும் பிரபலமாக பேசப்படும் கதை இதுதான். நள்ளிரவில் ஒரு பெண்
லிப்ட் கேட்பாள்; தான் செல்ல வேண்டிய முகவரியைக் கூறி அங்கே இறக்கிவிடச் சொல்வாள்.
ஆனால், அந்த குறிப்பிட்ட வீட்டின் முன் சென்று கார் கதவைத் திறந்து பார்த்தால், அவள்
அங்கே இருக்க மாட்டாள். குழப்பத்துடன் சென்று வீட்டின் கதவைத் தட்டி விசாரித்தால்,
வீட்டார் மிகவும் இயல்பாக, "அது எங்கள் மகள்தான்; ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே
இடத்தில் நடந்த விபத்தில்தான் அவள் இறந்துவிட்டாள்." என்று கூறுவார்கள். இவ்வகை
ஆவிகள் அட்ரஸ் கொடுக்கும் வகையறாவைச் சேர்ந்தவை. மனித மனதின் பயமும் சில சம்பவக் கோர்வைகளும்
எதேச்சையாக இணைந்து கொள்வதுதான் இது போன்ற அமானுஷ்ய கதைகளின் பின்னணி.
இரவு நேர விருந்து ஒன்றில் அழகிய பெண்ணைச் சந்தித்து, அவளை
வீட்டில் கொண்டு போய்விடுவதாகக் காரில் ஏற்றிச் செல்லும் இளைஞர்களுக்குக் காத்திருக்கும்
அதிர்ச்சி பயங்கரமானது. பாதியிலேயே அவள் மறைந்துவிடுவாள். அவள் அளித்த முகவரியைத் தேடிச்
சென்றால், அது ஒரு சுடுகாடாக இருக்கும். மேலும், அங்கே ஒரு கல்லறையின் மேல் அவள் அணிந்திருந்த
கோட் அல்லது செயின் கிடக்கும். பதின்வயது இளைஞர்களை அச்சுறுத்துவதற்காகவே பரப்பப்பட்ட
ஒரு நீதிபோதனை கதையாகவே இது பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் பேர்ல் ஹார்பர் அருகே ஒரு வயதான
பாட்டி லிப்ட் கேட்டதாக ஒரு வரலாறு உண்டு. காரை விட்டு இறங்கும் போது, அதற்கான கட்டணமாகப்
பணத்திற்குப் பதிலாக ஒரு ஜோசியம் கூறினார், "அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு பிணத்தைப்
பார்ப்பாய்; அடுத்த ஆறு மாதத்தில் ஹிட்லர் இறந்துவிடுவான்." என்றார். சொன்னபடியே
அதைக் கேட்டவருக்கு அனைத்தும் நடந்தன, அந்தப் பாட்டியும் மறைந்துபோனார். சில நேரங்களில்
இப்படிக் குத்துமதிப்பாக அடித்து உண்மையாகி விடுவதும் உண்டு. எதுவும் இந்த உலகில் நடக்காது
என்பதில்லை. எல்லாவற்றிற்கும் சாத்தியக்கூறுகள் உண்டு.
ஹவாய் தீவுகளில் பெலே என்ற எரிமலைக் கடவுள் இப்படித்தான் லிப்ட்
கேட்டு வருவார் என்ற ஐதீகமும் நிலவுகிறது. கதைகளை எப்படி வேண்டுமானாலும் கட்டி விடலாம்.
அதற்கு கை, கால், வாய், மூக்கு, நாக்கு வைப்பதெல்லாம் மனிதர்களின் கற்பனைகளே.
இப்போது கேள்வி இதுதான். இந்த விசித்திரக் கதைகளில் அதிகமானவை
ஏன் பெண்களையே மையமாகக் கொண்டுள்ளன? இரவில் தனியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டும்
என்ற மனிதனின் இயல்பான குணம் இதற்கு ஒரு உளவியல் காரணமாகச் சொல்லப்படுகிறது. விபத்துகளில்
அகால மரணமடைந்தவர்கள், தாங்கள் போய்சேர வேண்டிய இலக்கை நோக்கி இன்றும் முயற்சி செய்துகொண்டே
இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த நடுகாட்டு அல்லது சுடுகாட்டுப்
பயணங்கள்.
சாலையில் தனியாக நிற்பவர்களுக்கு உதவுவது நற்குணம்தான். ஆனால்,
ஜிபிஎஸ் இல்லாமலேயே சுடுகாட்டுக்குச் சரியாக
வழி காட்டும் ஒரு பயணியைச் சந்தித்தால், அது கூகுள் மேப்ஸ் கோளாறு அல்ல. மனதின் பயம்
செய்கின்ற வேலை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, அதை வைத்து அமானுஷ்ய கதைகளை
அவிழ்த்து விட்டு விடக் கூடாது!
இன்று இரவு நீங்கள் கார் ஓட்டும்போது யாராவது லிப்ட் கேட்டால்,
துணிவிருந்தால் வண்டியை நிறுத்துங்கள். துணிவில்லை என்றால் தயங்காமல் ஆக்சிலரேட்டரை
அழுத்துங்கள்! அநாவசியமாக வண்டியை நிறுத்தி ஒரு பேய்க் கதையைப் பரப்புவதில் என்ன இருக்கிறது
சொல்லுங்கள்?
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment