அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 99
இத்தனை இரவுகளுக்குப் பின்னால்…
கடிகார முட்கள் இரவு பன்னிரண்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.
அறைக்குள் ஒரே அமைதி. மேசையில் எரிந்துகொண்டிருக்கும் சிறிய விளக்கின் மஞ்சள் வெளிச்சம்
மட்டும் என் முகத்தில் விழுகிறது. மடிக்கணினியின் திரை நீல நிறத்தில் மினுமினுக்கிறது.
இந்த அமைதியை மீறி, பக்கத்து வீட்டின் ஜன்னல் கதவு காற்றுக்கு அடித்துத் திறக்கும்
சத்தம் மட்டும் அவ்வப்போது கேட்கிறது.
இவ்வளவு நாளும் நாம் தேடிய அமானுஷ்யங்கள் எங்கு இருக்கின்றன?
பழைய பங்களாக்கள், பாழடைந்த வீடுகள், கைவிடப்பட்ட கட்டிடங்கள், முட்செடிகள் மண்டிய
இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகள், மரண ஓலங்கள் கேட்ட கிராமத்து ஒதுக்குப் புறங்கள்,
விளக்கு வெளிச்சம் படாத ஊரகத்து வீடுகள், சூரிய ஒளி கூட நுழைய முடியாத அடர் வனப்பகுதிகள்,
தீவுகள் போன்றிருக்கும் தனித்த நிலப்பகுதிகள். இவையெல்லாம் வெறும் முகவரிகள்தானா? அல்லது,
நாம் தேடிய முகவரி நாமேதானா? இந்தத் கேள்விகளுக்கான பதிலைத்தான் இந்த முழுத் தொடரிலும்
அலசிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இன்றிரவு.
நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது.
இன்று மாலை ஒரு விசித்திரமான இமெயில் வந்திருந்தது.
"நீங்கள் தேடிக் கண்டுபிடித்ததாக நினைக்கும் கடைசி அமானுஷ்யத்தின்
சாவி, உங்கள் மேஜையின் வலதுபக்க டிராயருக்குள் இருக்கிறது. திறந்து பாருங்கள். ஆனால்,
திரும்ப வர முடியாது."
நானென்ன பொழுதுபோக்காக அமானுஷ்ய கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்று யாரோ நினைத்துவிட்டார்களோ என்னவோ? யாரோ என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள், அல்லது
என் வாசகர்களில் ஒருவர் இப்படிக் குறும்புத்தனம் செய்யப் பார்க்கிறார் – நான் இதை எப்படிப்
பார்ப்பது?
என் விரல்கள் என் சுயக் கட்டுப்பாட்டை மீறி, அந்த மேஜையின்
வலதுபக்க டிராயரை நோக்கி நகர்ந்தன. என் கை நடுங்கியதா? தெரியவில்லை. ஆனால் நரம்புகள்
லேசாக முறுக்கேறின. த்ரில்லர் சினிமாக்களில் வருவது போல ஒரு மெல்லிய பின்னணி இசை என்
காதுகளில் ஒலிப்பது போல் இருந்தது.
ட்ராயரை இழுத்துத் திறந்தேன்.
அங்கே, ஒரு பழைய காலத்து டேப் ரெக்கார்டர் இருந்தது. பிளாஸ்டிக்
மஞ்சள் நிறமாக மங்கிக்கிடந்தது. அதன் உள்ளே ஒரு ஆடியோ கேசட். அந்தத் டேப்பின் மேல்
ஒரு லேபிள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் என் சொந்தக் கையெழுத்திலேயே, ஆனால் நான் எப்போது,
எதற்காக அதை எழுதினேன் என்று ஞாபகமே இல்லாத ஒரு தேதியில், இப்படி எழுதியிருந்தேன்.
"இதை இன்றிரவு 12:05 மணிக்கு ஒலியேற்றுக."
அதைப் பார்த்ததும் கொஞ்சம் பயந்துவிட்டேனோ என்னவோ? வியர்வை
லேசாக நெற்றியில் துளிர்த்தது. இது என்ன சதியோ? அல்லது என் ஆழ்மனம் எனக்கு வைக்கும்
பொறியோ? மனித மனம் ஒரு விசித்திரமான மாயம். நாம் எதை நம்ப மறுக்கிறோமோ, அதை நம் ஆழ்மனம்
நம்பவைத்துவிடும்.
நான் கடிகாரத்தைப் பார்த்தேன்.
சரியாக 12:00 ஆகியிருந்தது.
இன்னும் ஐந்து நிமிடங்கள்.
இந்த ஐந்து நிமிடங்களில் என் வாழ்நாளில் நடந்த பல சம்பவங்கள்
ஒரு சினிமா ரீலைப் போல கண்முன்னே ஓடி மறைந்தன. நான் ஏன் இந்த அமானுஷ்யப் பயணத்தைத்
தொடங்கினேன்?
கடிகாரம் சரியாக 12:05 ஐக் காட்டியது.
என் இதயத் துடிப்பு எகிறியது. நான் அந்த டேப் ரெக்கார்டரின்
ப்ளே பொத்தானை அழுத்தப் போகும் அந்தத் தறுவாயில், வீட்டின் வரவேற்பறையில் யாரோ மெல்ல
நடக்கும் சத்தம் கேட்டது.
அந்தப் பழைய காலத்து லெதர் செருப்புச் சத்தம்!
அதுவரை என் அறைக் கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இப்போது
எப்படித் திறந்தது?
அந்த டேப் ரெக்கார்டரிலிருந்து ஒரு மெல்லிய ஹிஸ் சத்தத்துடன்
என் சொந்தக் குரலே ஒலிக்க ஆரம்பித்தது: "உங்களைத்தான் எதிர்பார்த்தேன். உள்ளே
வாருங்கள்!"
நான் டேப் ரெக்கார்டரை ஆப் செய்ய முயன்றேன். ஆனால், என் விரல்கள்
அந்தப் பொத்தானை அழுத்த மறுத்தன. அது தானாகவே சுழன்றுகொண்டிருந்தது.
வெளிச்சமில்லாத அந்த வரவேற்பறையின் இருளில், ஓர் உருவம் என்
அறையை நோக்கி நடந்து வந்தது. காலடிச் சத்தம் இப்போது என் வாசற்படியில் நின்றுவிட்டது.
என் கையில் இருந்த பேனா நழுவிக் கீழே விழுந்தது.
அந்த உருவம் நிழலாக என் மேஜை விளக்கின் வெளிச்சத்திற்குள் நுழைந்தது.
யாரது என்று பார்க்க நிமிர முயன்றேன். ஆனால், என் கழுத்து ஒரு இன்ச் கூட நகரவில்லை.
அப்போது, அந்த உருவம் என் காதுக்கு அருகில் குனிந்து, மிக மெல்லிய குரலில் சொன்னது,
"நீங்கள் யாருக்காக இந்தத் தொடரை எழுதினீர்கள் என்று நினைக்கிறீர்கள்? நான் உங்களை
எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது, எழுதுவதை நிறுத்துங்கள்!"
சரியாக அந்த நொடியில், என் மடிக்கணினியில் இருந்த ஸ்கிரீன்
திடீரென அணைந்தது. சிறிய விளக்கின் வெளிச்சமும் டொக். முழு இருள்.
என் கைபேசி திடீரென ரிங் ஆனது. திரையில் ஒளிரும் பெயர்,
"நானேதான்!"
***
இதைப் படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
ஆகா, அமானுஷ்ய மறுபடியும் ஆரம்பித்து விட்டது என்றுதானே? அல்லது
இதற்கான சஸ்பென்ஸை உடைத்தாக வேண்டும் என்றுதானே?
ஏன் இதை எழுதினேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அமானுஷ்யங்கள்
எப்படி எழுதப்படுகின்றன என்பதை விளக்குவதை விட, அதை எழுதியவனே இப்படி எழுதிக் காட்டினால்
அதிலுள்ள உண்மை உங்களுக்குப் புலப்பட்டு விடும் என்பதற்காகத்தான்.
உண்மையில், மேலே சொன்ன எதுவும்எனக்கு நடக்கவுமில்லை, என் நெற்றி
வியர்க்கவும் இல்லை. எல்லாம் அமானுஷ்யத்தைக் கூட்டுவதற்காக இட்டுக் கட்டி எழுதப்படுவதைதான்.
நம்மைச் சுற்றிச் சொல்லப்படும் அமானுஷ்ய கதைகளும், வதந்திகளும் கூட இப்படி இட்டுக்
கட்டி சொல்லப்படுபவைதான்; பரப்பப்படுபவைதான்.
நம்மைச் சுற்றிக் காணப்படும் அமானுஷ்யங்கள் அனைத்தும் இப்படி
சொல்லப்பட்டு அல்லது எழுதப்பட்டு அதன் மூலம் கை, கால், மூக்கு, முழி வைத்துப் பெரிதாக்கப்பட்டவைதான்.
அறிவியலின் துணை கொண்டு ஆராய்ந்து பார்த்தால் அத்தனையும் டுபாக்கூர் என்பது புலப்பட்டு
விடும்.
ஒரு வகையில், அறிவியல் எல்லாவற்றையும் அளந்துவிட்டது என்று
நினைக்கிறோம். குவாண்டம் இயற்பியல், பிரபஞ்சத்தின் விளிம்பு, வெளிக்கோள்களுக்குப் பயணம்
என்று மனிதனின் அறிவு எங்கேோ சென்றுவிட்டது. ஆனாலும், நள்ளிரவில் வீட்டின் மூலையில்
கேட்கும் விசித்திரமான காலடிச் சத்தம், காரணமின்றி மேஜையிலிருந்து கீழே விழும் பேனா,
இரவில் நெஞ்சை அடைக்கும் அந்தத் திடீர் குளிர் காற்று இவையெல்லாம் ஏதோ ஒரு விதத்தில்
பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. அறிவியல் என்னதான் விளக்க முயன்றாலும், மனதின் பயமும்
சந்தேகமும் எல்லாவற்றையும் வென்று விடுகிறது.
அறிவியல் என்பது ஓர் ஒளிவிளக்கு. அது எதை வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறதோ, அதை நாம் பார்க்கிறோம். அந்த வெளிச்சத்திற்கு வெளியே இருப்பதுதான் அமானுஷ்யம்.
ஆனாலும் அது அமானுஷ்யம் அல்ல; தற்போதைக்கு நம் கண்களுக்குப் புலப்படாத அறிவியல். அவ்வளவுதான்.
கொஞ்சம் அறிவியலின் துணையோடு ஆராய்ந்தால் அந்த அமானுஷ்யம் புட்டுக் கொள்ளும்.
கிட்டதட்ட 99 நாட்கள் நாம் அமானுஷ்யங்களோடு பயணித்திருக்கிறோம்.
நாளை நூறாவது நாள். அந்தத் தலைப்புக் கூட அமானுஷ்யமாக இருக்கிறது இல்லையா!
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment