அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் - 91
சுடுகாட்டில் ஒரு மறுஜென்மக் கொண்டாட்டம்!
ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் ஒரு விசித்திரமான
வழக்கம் இருக்கிறது. மரணத்தின் வியாழக்கிழமை என்று சொல்லிக் கொண்டு, சுடுகாட்டுக்குப்
போய், கல்லறையின் மேல் தண்ணீரை ஊற்றி, இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்துவிட்டு,
அங்கேயே ஒரு சுற்று மதுவும் உணவும் சாப்பிட்டுவிட்டு வருவார்கள். இதை அவர்கள் ரடோனிட்ஷா
என்கிறார்கள்.
ஒருவகையில் இது மனித மனங்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் மரண
பயத்தைப் போக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கலாச்சாரப் பூட்டு. செர்பியா, பல்கேரியா,
மற்றும் லெபனான் போன்ற பகுதிகளில் இது ரொம்பவே பிரபலம். இறந்துபோன முன்னோர்களின் மறைவை
வெறும் சடங்குகளோடு முடித்துக்கொள்ளாமல், அவர்களைத் தன் குடும்பத்தில் ஒருவராகவே தொடர்ந்து
தக்கவைத்துக் கொள்ளும் வருடாந்திர விழா போன்று அது இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த வழக்கத்தின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான ஆன்மீகக் கணிப்பு
இருக்கிறது. வசந்த காலத்தின் தொடக்கத்தில், ஈஸ்டர் திருநாளை ஒட்டிய நாட்களில், இறந்தவர்களின்
ஆன்மாக்கள் பூமிக்குத் திரும்புவதாக அவர்கள் நம்புகிறார்கள்.
நம்ம ஊரில் சுடுகாடு என்றாலே ஒருவிதப் பயமும் அமைதியும் கவ்விக்கொள்ளும்.
ஆனால் அங்கே, சுடுகாடு என்பது சோகத்திற்கான இடம் அல்ல; அது உறவுகளின் சந்திப்புப் புள்ளி.
கல்லறை மீது தண்ணீரைக் கொட்டுவது என்பது நீண்ட தூரம் பயணம் செய்து வரும் ஆன்மாக்களின்
தாகத்தைத் தீர்ப்பதற்காக. கூடவே ரொட்டி, ஒயின் மற்றும் பாரம்பரிய உணவுகளைக் கொண்டு
போய் கல்லறையின் மீது வைப்பது அவர்கள் பசியாறுவதற்காக.
இங்கே சாப்பாடுதான் சென்டர் ஆப் அட்ராக்சன். இறந்தவர்களுக்குப்
பிடித்தமான உணவுகளை அங்கே பார்க்கலாம். வேகவைத்த கோதுமை, சர்க்கரை மற்றும் நட்ஸ்கள்
கலந்த ரெசிபி ஆகியவை அதில் முக்கியமானவை. கோதுமை இதில் எதற்கு என்றால், கோதுமை மணி
மண்ணுக்குள் புதைந்து மீண்டும் முளைப்பது போல, மனிதனும் ஒரு நாள் உயிர்த்தெழுவான் என்கிற
தத்துவத்தின் குறியீடு அது.
அத்துடன் கல்லறையின் மீது சில துளிகள் ஒயினைத் தெளித்துவிட்டு,
மிச்சத்தை உயிருடன் இருப்பவர்கள் அருந்துவார்கள். இறந்தவர்களுக்கும் எங்களுக்கும் இடையே
காலத்தின் இடைவெளியே இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் ஓர் உணவுக் கலாச்சாரமாக அது
பார்க்கப்படுகிறது!
விருந்து முடிந்ததும், மீதமுள்ள உணவை அங்கேயே ஏழைகளுக்காகவும்
யாசகர்களுக்காகவும் விட்டுவிடுவார்கள். காரணம்? "ஏழைகள் சாப்பிடும் போது கிடைக்கும்
புண்ணியம், அந்தப் ஆன்மாக்களைச் சென்று சேரும்." என்பது அவர்களின் நம்பிக்கை.
வீட்டுக்குத் திரும்பிய பிறகும், இரவில் சாப்பாட்டு மேஜையில்
இறந்த முன்னோர்களுக்காக ஒரு தட்டு உணவை அப்படியே வைத்துவிட்டுத்தான் தூங்கப் போவார்கள்.
ஆக நாகரிகம் மாறலாம், அறிவியல் வளரலாம்; ஆனால் உறவுகள் மீதான பாசம் மட்டும் மாறுவதில்லை
என்பதற்கு இது ஒரு சாட்சி.
அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், இறந்தவர்கள் யாரும் திரும்பி
வருவதில்லை. அது அனைவருக்கும் தெரியும். ஆனால், மனித மனம் சோகத்தைத் தாங்கிக்கொள்ள
ஏதோ சில நம்பிக்கைகளைச் சமைத்துக் கொள்கிறது. அந்த நம்பிக்கையே இப்படிப்பட்ட திருவிழாக்களாக
உருவெடுக்கின்றன இதன் பின்னணியில் உள்ள உளவியல் உண்மை.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment