ஜெயிக்க வேண்டிய டெங்கு யுத்தம்!
ஜூலை
தொடங்கி டிசம்பர் வரை, வானம் மேகமூட்டத்துடன் இருக்கிறதோ
இல்லையோ, நம் ஊரில் டெங்குவின் நிழல் கார்மேகமாய்
கவிழ்ந்துவிடுகிறது. இந்த ஆண்டில் இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களைச்
சீண்டிப் பார்த்திருக்கிறது இந்த டெங்கு. சென்னை முதல் தென்காசி வரை அதன் கொடூரம்
நீள்கிறது.
சரி,
இந்த டெங்கு எதிரி பலம் வாய்ந்ததா? இல்லை,
நம் விழிப்புணர்வற்ற அலட்சியம்தான் டெங்குவுக்குப் பலம்.
வாருங்கள்,
இந்த டெங்குவிடமிருந்து நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது என்று
அலசுவோம்.
இந்த
டெங்குவை பரப்புபவை ஏடிஸ் கொசுக்கள். இவற்றின் அடையாளம் என்னவென்றால், கறுப்பு உடம்பில் வெண்புள்ளிகள் பதிக்கப்பட்டிருப்பதுதான். இவற்றின்
வேட்டை நேரம் இரவல்ல; பகலில்தான் இந்தக் கொசுக்கள் பிரதான
வேட்டையாடும்.
இந்த
டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் அழுக்குச் சாக்கடையைத் தேடிப் போவதில்லை; நம் வீட்டுக்குள் இருக்கும் சுத்தமான தேங்கிய நீர்தான் இவற்றின்
கர்ப்பப்பை மற்றும் ஸ்விம்மிங் பூல்.
டெங்குவின்
அறிகுறிகள் என்னென்ன என்கிறீர்களா?
திடீரெனத்
தாக்கும் அதிகப்படியான காய்ச்சல், தலையைப் பிளக்கும் வலி,
கண் விளிம்புகளுக்குப் பின்னால் குத்தும் வேதனை, எலும்பும் மூட்டும் கழன்று விழுவது போன்ற வலி. இவையெல்லாம் 'நான் வந்துவிட்டேன்' என்று ஏடிஸ் கொசுவின் வருகையைச்
சொல்லும் ஆரம்ப எச்சரிக்கைகள்.
ஆனால்,
உண்மையான ஆபத்து எப்போது தெரியுமா? காய்ச்சல்
குறையும்போது! பொதுவாக 3 முதல் 8 நாள்களுக்குப்
பிறகு. இதைக் மருத்துவ உலகம் 'நெருக்கடியான கட்டம்' என்கிறது. இந்தத் தருணத்தில்தான்
ரத்த நாளங்களிலிருந்து பிளாஸ்மா கசிந்து, உறுப்புச்
செயலிழப்பு வரை கொண்டு போய்விடும்.
அந்த
நெருக்கடியான கட்டம் எப்படி இருக்கும் என்றால், கடுமையான
வயிற்று வலி மற்றும் விடாமல் வாந்தி, ஈறுகள், மூக்கு அல்லது மலத்தில் ரத்தம் கசிவது, அதீதச்
சோர்வு மற்றும் மனக்குழப்பம், சுவாசிப்பதில் சிரமம் அல்லது
உடலில் வீக்கம்.
டெங்குக்
காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மட்டுமே மருந்து. ஒருபோதும் இபுப்ரோபென் அல்லது
ஆஸ்பிரின் பக்கமே செல்லாதீர்கள்; அவை ரத்தப்போக்கை
ஏற்படுத்திவிடும். ஆன்டிபயாடிக் மருந்துகளும் இதற்கு உதவாது.
டெங்குவால்
பாதிக்கப்பட்டவர்கள் ஓ.ஆர்.எஸ் கரைசல், இளநீர், சூப் என உடலின் நீர்ச்சத்தைப் பேணிக்கொண்டே இருங்கள். வாந்தி நிற்கவில்லை
என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
வீட்டில்
யாருக்கேனும் டெங்கு வந்தால், அவர்களைக் கொசுவலைக்குள்
படுக்க வையுங்கள். இல்லையெனில், அந்தக் கொசு அனைவரையும்
கடித்து மொத்தக் குடும்பத்துக்கும் டெங்குவைப் பரப்பி வடும்!
டெங்குவைத்
தடுக்க என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா?
வீட்டைச்
சுற்றியுள்ள தேங்காய் சிரட்டை, பழைய டயர்களை
அப்புறப்படுத்துங்கள். குடிநீர்த் தொட்டிகளை இறுக்கமாக மூடி வையுங்கள். நீர்
சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களைத் திறந்து வைக்காதீர்கள்.
பகல்
வேளையில் முழுக்கை ஆடைகளை அணிவது புத்திசாலித்தனம்.
நிலவேம்புக்
குடிநீர், பப்பாளி இலைச் சாறு பருகுதல் போன்ற நோய்
எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் சித்த மருத்துவ முறைகளையும் பின்பற்றுவது நலம்
பயக்கும்.
டெங்குவுக்கான
ரத்தப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசம்.
காலம்
தாழ்த்தாமல் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவதுதான் இந்த டெங்கு யுத்தத்தில் நாம்
வெல்லும் ஒரே வழி. விழிப்புணர்வுடன் இருப்போம்; விபரீதத்தைத்
தவிர்ப்போம்!
*****

No comments:
Post a Comment