Thursday, 10 September 2026

ஹலோ நான் ஆவி பேசுகிறேன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 80

ஹலோ நான் ஆவி பேசுகிறேன்!

மருதவனம் பங்களாவில் இருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடிய கோவிந்தும் தமிழரசனும், இரு சக்கர வாகனத்தில் விரைந்து, மன்னார்குடி, அய்யனார் கோயில் சந்தில் இருந்த தமிழரசன் வீட்டில் உட்கார்ந்திருந்தார்கள். கோவிந்தின் கைகள் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தன.

"தமிழரசன்! அது நிஜமான பேய்! விரல் நுனியில நெருப்பு வந்துச்சு! என் ஆன்ட்ராய்டு போனை வேற அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்," கோவிந்த் புலம்பினான்.

"நான் அப்பவே சொன்னேன்ல? தமிழ்நாட்டுல பேயைக் கூப்பிட்டா அது காராமணி சுண்டலுக்கு வராது, ஆனா குவாட்டருக்கு கண்டிப்பா வரும்னு!" தமிழரசனின் படபடப்பு இன்னும் மாறவில்லை.

திடீரென்று கோவிந்தின் ஸ்மார்ட் வாட்ச் அதிர்ந்தது. ‘இன்கம்மிங் கால் ப்ரம் கேலக்ஸி எஸ்26+’.

கோவிந்த் பயத்துடன் வாட்சைப் பார்த்தான். கால் அட்டெண்ட் ஆனது. ஸ்பீக்கரில் அதே மொக்கச்சாமி ஆவியின் குரல், "தம்பி கோவிந்த்! உன் ஆன்ட்ராய்டு போன் பேஸ் ஐடி செம ஸ்பீடுப்பா! என் மூஞ்சியைக் காட்டுன உடனே அன்லாக் ஆயிடுச்சு. ஆனா அது என்ன லைவ் போய்ட்டு இருக்கு? மூணு லட்சம் பேர் பார்த்துட்டு இருக்காங்க!"

"டேய்... டேய் மொக்கச்சாமி... என்னடா நடக்குது அங்க?" கோவிந்த் கத்தினான்.

அப்போது அவர்களுக்குப் பின்னால் ஒரு குரல் கேட்டது. "எந்தக் காலத்துல இருக்கீங்க மிஸ்டர் தமிழரசன் அன்ட் கோவிந்த்? பேய், பிசாசுன்னு இன்னும் நம்பிட்டு?"

திரும்பிப் பார்த்தால், ஜீன்ஸ், டீசர்ட்டுடன் கணேஷ்.

கணேஷ் தன் லேப்டாப்பை மேஜை மீது வைத்துத் திறந்தான். "உங்க மருதவனம் பங்களால நேத்து ராத்திரி நடந்த லைவ் ஸ்ட்ரீமிங்கை நானும் பார்த்தேன். இப்போ கொஞ்சம் இங்க பாருங்க கண்ணா!"

லேப்டாப் திரையில், நேற்றைய வீடியோ ஓடியது.

"நல்லா கவனியுங்க. அந்த மொக்கச்சாமிங்கிற உருவம் நிழலா தெரியும்போது, சுத்தி இருந்த காற்றுல ஓர் ஒளிவிலகல் நடக்குது. அது ஆவி இல்ல. தொட்டு உணரக்கூடிய முப்பரிமாண ஒளி பிம்பம்!" கணேஷ் சுட்டிக் காட்டினான்.

கோவிந்தும் தமிழரசனும் முழித்தார்கள். "முப்பரிமாண ஒளி பிம்பமா?"

"ஆமாம்டா வெண்ணெய்களா!" கணேஷ் சிரித்தான்.  " அங்க இருந்த அல்ட்ராசோனிக் சவுண்ட் வேவ்ஸ் காற்றுல இருந்த ஈரப்பதத்தை ஒரே இடத்துல அடர்த்தி ஆக்கியிருக்கு. அந்த அடர்த்தியான பனிப்படலத்துல, யாரோ தூரத்துல இருந்து லேசர் புரோஜெக்டர் மூலமா அந்த உருவத்தை காட்டியிருக்காங்க."

"அப்போ, அந்த விரல் நுனி நெருப்பு? குவாட்டர் குடிச்சது?" தமிழரசன் கேட்டான்.

"வெரி சிம்பிள்! விரல் நுனியில இருந்தது 'படைசோ எலெக்ட்ரிக் பிளாஸ்மா'  சிகரெட் லைட்டர்ல இருக்கும்ல, அதுதான். அந்த குவாட்டர் பாட்டில் அடியில ஒரு வேக்கம் பம்ப் இருந்திருக்கு. பாட்டிலைத் தொட்ட உடனே திரவம் உறிஞ்சப்பட்டிருக்கு. இட்ஸ் ஆல் பியூர் பிசிக்ஸ் அண்ட் கெமிஸ்ட்ரி!"

தமிழரசனுக்கு மெல்ல அறிவு ஒளி வீசியது. "அப்போ அந்த மொக்கச்சாமி ஆவி?"

"மொக்கச்சாமிங்றவரு நிஜமாவே 1980ல செத்துப் போனவர்தான். ஆனா நேத்து பேசினது அவரோட ஆவி இல்ல. அவர் பழைய வாய்ஸ் ரெக்கார்டிங்கை வச்சு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் உருவாக்கின வாய்ஸ்!"

"யார்டா கணேஷ் இதை பண்ணியிருப்பா?" கோவிந்தின் நரம்புகள் துடித்தன.

கணேஷ் சிரித்தான். "உங்க பங்களாவுக்கு பக்கத்து வீட்டுக்காரன் சுந்தர்தான். விஜயராமன் பேச்சைக் கேட்டுக்கிட்டு, நீங்க தினமும் ராத்திரி 12 மணிக்கு ஆவி ஆராய்ச்சின்னு பண்ணுற அலப்பறைங்க அவனுக்குப் பிடிக்கல. அதனாலத்தான் அமானுஷ்யம்ங்கிற பேர்ல அறிவியலை வச்சு உங்களைப் பங்களாவை விட்டு விரட்டியிருக்கான். இந்தா அவனோட புளூடூத் சிக்னல் ஐடி!"

கணேஷ் லேப்டாப்பில் காட்ட, கோவிந்திற்கும் தமிழரசனுக்கும் ஒரே நேரத்தில் பல்பு எரிந்தது.

"அடப்பாவி சுந்தர்! நம்மள பயமுறுத்த டெக்னாலஜியையா யூஸ் பண்ணுவான்?" கோவிந்த் தலையில் அடித்துக்கொண்டான்.

"மனிதன் பயப்படுற முக்கால்வாசி அமானுஷ்யத்துக்குப் பின்னாடி, ஏதோ ஒரு அறிவியல் விதியும், ஒரு மனிதனின் சூழ்ச்சியும்தான் இருக்கும்!" கணேஷ் லேப்டாப்பை மூடி, கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தான்.

"சரி கணேஷ்! என்னோட ஆன்ட்ராய்டு போன்?" கோவிந்த் கேட்டான்.

"அதுவா? சுந்தர் போனை கைல எடுத்த உடனே, பேஸ் ஐடி உடனடியா வேலை செய்யல. ஆளு மாட்டிட்டான்! தமிழரசனோட அண்ணன் அன்பரசன் அந்தப் போனோட இப்போ சுந்தர் வீட்லதான் இருக்காப்ல. விஷயம் தெரிஞ்சு அவரும் சேர்ந்து உங்களோட கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம்ன்னுதான் மொக்கச்சாமி குரல்ல உங்களுக்குப் போன் போட்டிருக்காப்புல!" என்று சொல்லிவிட்டு கணேஷ் சிரித்தான்.

கோவிந்தும் தமிழரசனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"டேய் தமிழரசா! பேய் இல்லைன்னு சந்தோஷப்படுறதா, இல்ல நம்ம பிரெண்ட் சுந்தரே நம்மள இப்படி வெச்சு சம்பவம் பண்ணிட்டானேன்னு அசிங்கப்படுறதா?" கோவிந்த் பொங்கினான்.

"நல்ல நேரத்துல வந்தீங்க கணேஷ் அண்ணா! விஜயராமன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இவுங்ப பண்ற ஆவி ஆராய்ச்சிகள நிறுத்தச் சொல்லுங்க. ரெண்டு பேரும் போட்டு படுத்துறாங்க. இங்க வீட்டுல இருக்குறவங்களால தாங்க முடியல!" என்றபடி ஜெயந்தி கணேஷ்க்கு டீ கோப்பையோடு வர, "இவனுங்கள திருத்த முடியாது. பேசாம அந்த ஆவிங்ககிட்டே இவனுங்க பக்கம் வராதீங்கன்னு சொல்லி, அதுகளத்தான் திருத்த முடியும்!" என்றுசொன்னபடி கணேஷ் டீ கப்பை வாங்கினான்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment