Thursday, 3 September 2026

பேய் பங்களா

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 73

பேய் பங்களா

தமிழரசன் தன் அலைபேசியை ஒரு முறை பார்த்து விட்டு சட்டைப் பையில் போட்டான்.

மருதவனத்தில் இருக்கும் அந்த எண்பது வருட பழைய பங்களாவுக்கு வெளியே மழை பிடித்துக்கொண்டது. ஜன்னல் கதவுகள் பலமாக அடித்துக் கொண்டன.

"என்ன தமிழ்! இன்னைக்கு நைட் இங்கேயே தங்கிடலாம்னு முடிவா?"  காரின் சாவியை விரலில் சுழற்றியபடி கேட்டான் கோவிந்த்.

"ஆமாம் கோவிந்த்! மருதவனத்துல இருக்கிற இந்த பங்களாவை விக்கணும்னா, முதல்ல பேய் பங்களாங்கிற இந்தப் போலி பிம்பத்தை உடைக்கணும். ஆட்கள் வர பயப்படுறாங்க. நான் ஒரு வாரம் இங்க தங்கி, எல்லாம் கட்டுக்கதைன்னு இந்த உலகத்துக்குக் காட்டப் போறேன்."

"டேய் தமிழ்! 1988ல இந்த வீட்டில் இருந்த சோமசுந்தரம் குடும்பமே ஒரே ராத்திரியில காணாம போச்சுன்னு ஊர்ல எல்லாரும் பேசிக்கிறாங்க!"

தமிழரசன் சிரித்தான். "கோவிந்த்! என்பீல்ட் போல்டர்கீஸ்ட் பத்தி படிச்சிருக்கியா? 1977ல லண்டன்ல ஒரு பொண்ணு காற்றில் மிதந்தான்னு அம்புட்டுப் பேரும் அலறினாங்க. அப்புறம் பார்த்தா அது வெறும் ஹை ஜம்ப்! மனுஷ மூளை பயத்துல தனக்குத் தானே பண்ணிக்கிற தந்திரம்தான் பேய். இங்கயும் அதேதான்."

"சரி உன் சயின்ஸ் உன்னைக் காப்பாத்தட்டும். நான் கிளம்புறேன்!"  கோவிந்த் கதவைத் திறந்து மழையில் இறங்கி மறைந்தான்.

மருதவனத்தின் அந்தப் பழைய வீட்டில் அமைதி பரவியது.

இரவு 1:40.

தமிழரசன் ஹாலில் இருந்த பழைய மர நாற்காலியில் அமர்ந்து விஜயராமனின் பிளாக்ஸ்பாட்டை தன் மொபைலில் படித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று, சமையலறையிலிருந்து 'டங்... டங்...' என்று சத்தம்.

தமிழரசன் தன் ஆப்பிள் வாட்சைப் பார்த்தான். ஹார்ட் ரேட் 72. இயல்பாக இருந்தது. மொபைல் டார்ச்சை ஆன் செய்துகொண்டு கிச்சனுக்குள் நுழைந்தான்.

அங்கே, ஒரு பழைய பித்தளைத் தட்டு தரையில் உருண்டு கொண்டிருந்தது.

"காற்றின் வேகம். ஜன்னல் இடைவெளி வழியா வர்ற காற்று அழுத்தம்." உரக்கப் தனக்குத் தானே பேசிக் கொண்டான். பயத்தை விட அறிவியல் ஜெயிக்க வேண்டும் என்று.

அப்போது, ஹாலில் இருந்த கடிகாரம் இரண்டு முறை அடித்தது. 'டாங்... டாங்...'

தமிழரசன் மீண்டும் ஹாலுக்கு வந்தான். மொபைலின் டார்ச் வெளிச்சத்தை அந்தப் பழைய சுவர் கடிகாரத்தின் மீது அடித்தான்.

அங்கே அவன் பார்த்த காட்சி, அவன் மூளையின் செல்களை அப்படியே உறைய வைத்தது.

அந்தக் கடிகாரத்தில் பேட்டரியே இல்லை! சாவி கொடுக்கும் கம்பியும் அறுத்தெறியப்பட்டிருந்தது.

"இதுக்கு வாய்ப்பே இல்லை!" தமிழரசன் முணுமுணுத்தான். "இது ஐடியா மோட்டார் விளைவு இல்லை. என் மூளை இதை உருவாக்கல. கடிகாரம் உண்மையிலேயே அடிச்சிருக்கு."

அவன் இதயத் துடிப்பு இப்போது 110ஐத் தொட்டது.

திடீரென்று அவனது மொபைல் திரை தானாக வெளிச்சமானது.

அதில் மெசேஜ் பாக்ஸ் ஓப்பனாகி தானாகவே டைப்ரைட்டர் போல எழுத்துக்கள் விழத் தொடங்கின.

"தமிழரசன்! 1988 இல் மருதவனத்தின் சோமசுந்தரம் குடும்பம் காணாமல் போகவில்லை. அவர்கள் இந்த வீட்டின் தரையின் அடியில்தான் இருக்கிறார்கள்."

தமிழரசன் நடுங்கும் விரல்களால் மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்தான். ஆனால் மொபைல் ஆப் ஆகவும் இல்லை, மொபைலில் டைப்பிங்கும் நிற்கவில்லை!

"அறிவியல் எல்லாவற்றையும் விளக்கிவிடும் என்று நினைக்கிறாயா? உன் பரேடோலியா விதியும், போல்டர்கீஸ்ட் தியரியும் சுவரில் இருக்கும் கடிகாரத்தை நிறுத்தாது."

தமிழரசன் பயத்தின் உச்சத்திற்குச் சென்று அலறினான். "யார் அது? மொபைலை ஹேக் பண்றியா? கோவிந்த் நீதானே அது?"

மொபைல் திரையில் இருந்து நீல நிற வெளிச்சம் வீச்சாக அடித்து, மருதவனப் பங்களாவின் முழு அறையையும் ஆக்கிரமித்தது.

ஹால் மூலையில் இருந்த அந்த பழைய மர நாற்காலி மெதுவாக தரையிலிருந்து 2 அடி உயரத்திற்கு காற்றில் மிதக்கத் தொடங்கியது.

தமிழரசன் தன் ஆப்பிள் வாட்சைப் பார்த்தான்.

திரையில் கண்கள் நம்ப முடியாத செய்தி வந்தது. இதயத் துடிப்பு பூஜ்ஜியம் எனக் காட்டியது.

அவன் உறைந்துபோய் நின்று கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு முன்னால், அதே நாற்காலியில், அதே மொபைலைப் பார்த்தபடி தமிழரசனின் உடல் சாய்ந்து கிடந்தது!

இப்போது மொபைல் திரையில் அடுத்த வரி டைப் ஆனது.

"வெல்கம் டு த பேமிலி, தமிழரசன்!"

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment