Showing posts with label Beyond the window. Show all posts
Showing posts with label Beyond the window. Show all posts

Tuesday, 2 June 2026

ஜன்னலுக்கு வெளியே ஒரு ஜிமிக்கி கம்மல்!

ஜன்னலுக்கு வெளியே ஒரு ஜிமிக்கி கம்மல்!

கான்க்ரீட் காடுகளுக்குள் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் திரைகளைப் பார்த்துப் பார்த்து நம் மூளை ஹேங் ஆகிவிடுகிறது.

இயற்கையோடு தொடர்பு இல்லாதது மனநலத்தைப் பாதிக்கும் என்று பல ஆய்வுகள் அலறுகின்றன.

டிப்ரஷன், ஆங்க்சைட்டி போன்ற நவீன கால பக்குகளுக்கு இயற்கைதான் சிறந்த பேட்ச்.

அதற்காக உடனே டிரெக்கிங் ஷூ மாட்டிக்கொண்டு இமயமலைக்கு ஓட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தாலே போதும். அது ஒரு ஹீலிங் ப்ராசஸ்.

நம்மில் பலருக்கு தோட்டம் இருக்காது. ஆனால், ஜன்னலுக்கு வெளியே ஒரு காக்கா உட்காரும் மரம் அல்லது சுவரில் ஊர்ந்து செல்லும் ஒரு செடி இருக்கக்கூடும்.

உங்கள் ஜன்னல் ஓரம் என்ன வளர்கிறது? எந்தப் பூச்சி எப்போது விசிட் அடிக்கிறது? இதை ஒரு துப்பறியும் நிபுணர் போலக் கவனியுங்கள். இயற்கையை நோக்கிய முதல் திருப்பம் மற்றும் திருப்புமுனை இது.

வீட்டுக்குள் அமர்ந்து லஞ்ச் சாப்பிடுவதற்குப் பதில், ஒரு பூங்காவுக்கோ அல்லது மொட்டை மாடிக்கோ ஒரு பிக்னிக் போலச் செல்லுங்கள். நண்பர்களையும் அழையுங்கள். உங்கள் வீட்டு வாசலிலேயே ஒரு நேஷனல் ஜியோகிராபிக் சேனல் ஓடிக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனிப்பீர்கள்!

ஏதாவது ஒன்றை உருவாக்குவது ஒரு சிறந்த தியானம். அதை வீட்டுக்குள் உட்கார்ந்தும் செய்யலாம். அவ்வபோது அவுட்டிங் போய் அங்கே உட்கார்ந்தும் செய்யலாம். அப்படிச் செய்யும் போது உங்கள் மூளை டாப் அப் ஆகிறது.

உங்களுக்கு ஓவியம் வரையப் பிடிக்குமா? அல்லது பின்னல் வேலை? அப்படியே அந்தப் பக்கம் ஒரு மரத்தடிக்குப் போய் உட்கார்ந்து செய்யுங்கள்.

உங்களிடம் விலையுயர்ந்த கேமரா இருக்க வேண்டிய அவசியமில்லை. கையில் இருக்கும் போனில் ஒரு பறவையையோ, மேகத்தையோ படம் எடுங்கள். ஒரு கவிதை எழுதுங்கள்.

இப்படிச் செய்து விட்டு, நான் எடுத்து போட்டோவுக்கு லைக்குகள் போதவில்லை, என் கவிதையை யாரும் படிக்கவில்லை என்று புலம்பாதீர்கள். இங்கே ரிசல்ட் முக்கியமல்ல. உங்கள் மூளை அந்த இன்ஸ்பிரேஷன் லூப்பில் சிக்குவதுதான் முக்கியம்.

இயற்கை என்பது ஒரு மிகப்பெரிய வை-பை போன்றது. நீங்கள் அதோடு கனெக்ட் ஆனால், உங்கள் மனதின் வேகம் சீராகும்.

இங்கே குணமாக வேண்டியது நீங்கள். நீங்கள் குணமானதற்கு அவர்கள் மாத்திரை சாப்பிடவில்லை என்று அடம் பிடிக்க வேண்டியதில்லை. இங்கே பாராட்டோ, வாழ்த்தோ எதுவும் முக்கியமில்லை. உங்கள் மனம் ரிப்ரெஷ் ஆகிறதா, அதுதான் முக்கியம்.

கவிதை எழுதுவதிலிருந்து, ஓவியம் வரைவதிலிருந்து, புத்தகம் படிப்பதிலிருந்து பறவைகளை வேடிக்கை பார்ப்பது வரை எது உங்களுக்கு கிக் கொடுக்கிறதோ, அதைச் செய்யுங்கள்.

இயற்கையிடம் போனால் அது உங்களைப் பேச விடாது, உங்களைக் கவனிக்க வைக்கும். அந்த நிசப்தம்தான் உங்கள் மூளைக்குத் தேவையான ரீசார்ஜ்.

இன்று மாலை உங்கள் ஸ்மார்ட்போனை டேபிளில் வைத்துவிட்டு, ஜன்னல் ஓரம் ஒரு ஐந்து நிமிடம் சும்மா நில்லுங்கள். வானத்தின் நிறம் மாறுவதையோ அல்லது ஒரு இலையின் அசைவையோ கவனியுங்கள். அந்த ஐந்து நிமிடம் உங்கள் ஆயுளில் ஒரு மணி நேரத்தைச் சேர்க்கும்!

*****