Saturday, 7 November 2026

உடலுக்கு ஏற்ற நல்லுணவு எது?

உடலுக்கு ஏற்ற நல்லுணவு எது?

இயற்கையோடு இணைந்து வாழ்வதே மனித குலத்தின் ஆகச்சிறந்த அறம். உயிரினங்கள் தங்களின் வாழ்வியலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உணவு இன்றியமையாத தேவையாக இருக்கிறது.

இயற்கையின் அற்புதப் படைப்பான உணவுச்சங்கிலி அறுபடாமல் இருக்கும் வரைதான், இவ்வுலகில் உயிர்களின் சமநிலை பேணப்படும்.

இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் உணவை வெறும் பசி தீர்க்கும் பொருளாகப் பார்க்காமல், உடலைப் பேணும் அருமருந்தாகப் போற்றினர். திருவள்ளுவரும் தன் மறைமொழியில்,

"அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து"                              (குறள், 944)

என்று மிக அழகாக எடுத்தியம்புகிறார். முன் உண்ட உணவு முழுமையாகச் செரித்த பின், உடலுக்குத் தீங்கற்ற மாறுபாடில்லாத உணவை, நன்கு பசி எடுத்த பிறகு அளவோடு உண்டு வந்தால், மனிதனுக்கு நோய் தீர்க்கும் மருந்து என்ற ஒன்றே தேவையில்லை என்பது வள்ளுவத்தின் திண்ணமான உண்மை.

ஆனால், காலத்தின் சுழற்சியில் நவீனமயமாக்கல் என்ற பெயரில் நம் உணவுப் பழக்கவழக்கங்கள் தலைகீழாக மாறிவிட்டன. உணவே மருந்து என்றிருந்த உன்னத நிலை மாறி, இன்று மருந்தே உணவு என்னும் கவலைக்கிடமான சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

குறிப்பாக, இன்றைய வேகமான உலகில் துரித உணவுகள் நம் அன்றாட வாழ்வின் உணவுக் கலாச்சாரத்தை ஆக்கிரமித்துவிட்டன. அத்தகைய உணவுகளில் தவிர்க்க முடியாத ஒர் அங்கமாக உருவெடுத்திருப்பதுதான் பனீர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பனீர் 65, பனீர் மசாலா, பனீர் பிரியாணி, பனீர் சுக்கா, பனீர் பிரை என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பாலில் இருந்து பெறப்படும் தூய்மையான பாலாடைக்கட்டி உடலுக்கு நன்மையையும், புரதச்சத்தையும் தரக்கூடியது என்பதில் ஐயமில்லை. வீடுகளிலேயே மிக எளிமையாகவும் மென்மையாகவும் இதனைத் தயாரிக்க முடியும்.

ஆனால், இன்று சந்தைகளிலும் உணவகங்களிலும் விற்கப்படும் பனீர் உண்மையிலேயே தூய்மையான பாலில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறதா என்னும் வினா ஒவ்வொருவர் மனதிலும் எழுகிறது.

பாலில் தயாரிக்கப்படும் பனீர் உடலுக்கு ஊட்டச்சத்து தருகிறது. ஆனால், அதிக லாபத்திற்காகச் சில இடங்களில் ரசாயனங்கள், தாவர எண்ணெய்கள், கொழுப்பு, ஸ்டார்ச் போன்றவற்றைச் சேர்த்துப் போலியாக உருவாக்கப்படும் செயற்கைப் பனீர் மனித உடலுக்குக் கடுமையான கேடுகளை விளைவிக்கிறது. இதில் பால் பொருட்கள் ஏதும் இல்லாததால், இது ஊட்டச்சத்திற்குப் பதிலாக நோய்களையே பரிசளிக்கிறது.

தற்போது தமிழகம் முழுவதும் பனீரின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஆழமான வினாக்கள் சில உண்டு. அவையாவன,

1. தமிழகத்தில் இருக்கும் பசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

2. அவற்றிலிருந்து நாள்தோறும் பெறப்படும் பாலின் அளவு எவ்வளவு?

3. ஆனால், சந்தையிலும் உணவகங்களிலும் தினமும் விற்பனையாகும் பனீரின் அளவு எவ்வளவு?

இந்தக் கணக்கீட்டை ஒப்பீடு செய்து பார்த்தாலே உண்மை நிலை புலப்படும். தமிழகத்தில் இயங்கும் பல்வேறு தொழிற்சாலைகளிலும், கடைகளிலும் விற்கப்படும் பனீர் இயற்கையான பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறதா அல்லது ரசாயனங்கள் கலந்த செயற்கைப் பனீரா என்பதைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்." என்பதைப் போல, ஆரோக்கியமான மக்கள் இல்லாமல் நாட்டின் உண்மையான வளர்ச்சி சாத்தியமாகாது. ஆகவே நாட்டின் மெய்யான மேன்மை என்பது அந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில்தான் அடங்கியிருக்கிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து, இயற்கை உணவுப்பாதைக்குத் திரும்புவோம்; போலி உணவுகளைப் புறக்கணிப்போம்!

*****

No comments:

Post a Comment