அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 92
ரிப்பீட் அடிக்கும் அமானுஷ்யங்கள்!
அன்று கொரடாச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் தமிழரசன் இறங்கும்போது
மணி மாலை ஐந்தரை. வெயில் சாய்ந்திருந்தாலும், காற்றில் ஈரப்பதமும் ஒரு மாதிரி புழுக்கமும்
இருந்தது.
"எதுக்கு என்னை இங்கே வரச் சொன்னே?" தமிழரசன் கணேஷைக்
கேட்டான்.
"விஜயராமன்தான் சொன்னான். இப்போ நீ பெரிய இன்வெஸ்டிகேஷன்
ஜர்னலிஸ்ட் ஆயிட்டேன்னு. உனக்குதான் இந்த மர்மம் புரியும்." என்று கணேஷ் பில்டப்பை
ஏற்றினான்.
"என்ன கணேஷ்? அது என்ன விஷயம்?" என்று தமிழரசன் கேட்டு
முடிப்பதற்குள், கணேஷ் தமிழரசனை இழுத்துக் கொண்டு போனது ஒரு பழைய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு
முன். அங்கே ஒரு கூட்டம் நின்று கொண்டு இருந்தது. போலீஸ் ஜீப் ஓரத்தில் நின்றிருந்தது.
"உள்ளே போய் பார்ப்போம். வாங்க!" என்றார் ஸ்டேஷன்
இன்ஸ்பெக்டர் ஆபத்சகாயம்.
உள்ளே போனால், ஒரு நூறு சதுர அடி ஹால். சுவரெல்லாம் எதையோ கிறுக்கி
இருந்தது. நடுவில் ஒரு வயசானவர். பெயர் மார்த்தாண்டம். வயது எழுபது இருக்கும். உட்கார்ந்த
நிலையிலேயே இறந்து கிடந்தார். உடம்பில் எந்தக் காயமும் இல்லை. ஆனால் முகம் முழுக்க
அப்படி ஒரு பயம் அல்லது ஏதோ ஓர் எதிர்பார்ப்பு!
"என்னங்க ஐயா ஆச்சு?" இன்ஸ்பெக்டர் ஆபத்சாகயத்தைக்
கேட்டான் தமிழரசன்.
"மாரடைப்பாதான் இருக்கணும். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
வந்தாதான் கன்பார்ம் பண்ண முடியும். ஆனா இவரோட டெத் ரொம்ப விசித்திரமானது" என்றார்
ஆபத்சகாயம்.
"விசித்திரமானதா?"
"ஆமா ஐயா! கடந்த ஒரு வாரமா இவர் வீட்டுல ஏதோ சடங்கு மாதிரி
பண்ணியிருக்கார். பூமெக்ஸ் வெள்ளை நிற பனியனை மாட்டிக்கிட்டு, ராத்திரி முழுக்க அறையைச்
சுற்றி வந்திருக்கார். பக்கத்து வீட்டுக்காரங்க கேட்டிருக்காங்க. செத்துப் போன என்
பொண்டாட்டியும் பையனும் வராங்க. அவங்களப் பார்க்கப் போறேன்னு கத்தியிருக்கார். நேத்து
ராத்திரி ஏதோ ஒரு பயங்கரமான கனவோ அல்லது பிரம்மையோ. ஹார்ட் அட்டாக் வந்து அப்படியே
உறைஞ்சு போயிட்டார்."
தமிழரசன் சுவரைப் பார்த்தான். அங்கே கரியால் எழுதியிருந்தது,
"வெள்ளையர்கள் போயிட்டாங்க.. செத்தவர்கள் வராங்க. பூமெக்ஸ் பனியன் காப்பாற்றும்."
தமிழரசனுக்குச் சட்டென்று அமெரிக்காவின் நெவாடா பாலைவனமும்,
அந்த லக்கோட்டா பழங்குடிகளும் ஞாபகத்துக்கு வந்தார்கள். வோவோகாவின் கோஸ்ட் ஷர்ட்!
"அந்த அமெரிக்கா. அந்த நெவாடா பாலைவனம். எங்கேயோ மிசிசிப்பி
நதிக்கரையில் நடந்த ஒரு சம்பவம், அப்படியே ஒரு செஞ்சுரி தாண்டி, கொரடாச்சேரியில் ஒரு
டபுள் பெட்ரூம் பிளாட்ல ரிப்பீட் ஆகுது! மனித மனம் ரொம்ப விசித்திரமானது. நிஜ வாழ்க்கை
நம்மைக் கொடுமைப்படுத்தும்போது, வறுமையோ, தனிமையோ, முதுமையோ நம்மை மூச்சுமுட்டச் செய்யும்போது.
இந்த நிஜத்திலிருந்து தப்பிக்க அது ஒரு மாய உலகத்தைக் கற்பிக்கிறது. அமெரிக்கப் பழங்குடிகளுக்கு
அது வட்ட நடனம் மற்றும் ஒரு பருத்தி ஆடை. இந்தத் தனிமைப்பட்ட முதியவருக்கு அது ஒரு
வட்ட நடை மற்றும் பூமெக்ஸ் பனியன்." தமிழரசன் ஒரு மூச்சில் சொல்லி முடித்தான்.
கணேஷ் சொன்னான், "தமிழரசா! இவர் உண்மையிலேயே அவங்க வந்திருப்பாங்கன்னு
நம்பியிருக்கார் போல."
"நீ சொல்றது சரிதான். அமானுஷ்யம்ங்கிறது பேயோ, ஆவியோ இல்ல.
அது எதார்த்தத்தின் கொடூரத்திலிருந்து தப்பிக்க மனித மனம் தனக்குத்தானே கட்டிக்கொள்ளும்
ஒரு பொய் மாயை. அந்த மாயை சிலருக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்; சிலருக்கு மரணத்தைக்
கொடுக்கும். அவ்ளோதான்!"
போலீசார் மார்த்தாண்டத்தின் உடலைத் தூக்கிக் கொண்டு போனார்கள்.
அந்த அறையில் மிஞ்சியது வெறும் காலியும், சுவரில் எழுதியிருந்த அந்தப் பொய் மாயையின்
வரிகளும்தான்.
இன்ஸ்பெக்டர் ஆபத்சகாயம் தமிழரசன் அருகில் வந்தார். "இருந்தாலும்,
இந்தக் கேஸை முடிக்க, அந்த அமெரிக்கச் சம்பவம் பத்தி இன்னும் கொஞ்சம் தெளிவு தேவையா
இருக்கு!"
"நாளைக்குக் காலையில ஏழரைக்கு, இந்தப் ப்ளாக்ஸ்பாட்டுல
பாருங்க. உங்களுக்குத் தேவையான எல்லா டீடெய்ல்சும் கிடைக்கும்." என்று தமிழரசன்
அதற்கான இணையதள முகவரியைச் சொல்லி விட்டு, கணேஷைப் பார்த்தான்.
"அடுத்த ட்ரெயின் ஏழரைக்கு. நீ கிளம்ப சரியாக இருக்கும்."
என்றான் கணேஷ்.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****
