Showing posts with label ஹாரர் டூரிஸம். Show all posts
Showing posts with label ஹாரர் டூரிஸம். Show all posts

Sunday, 6 September 2026

ஹாரர் டூரிஸம்

அமானுஷ்யங்கன் அட்ரஸ்

அட்ரஸ் – 76

ஹாரர் டூரிஸம்

கோட்டூக்கு கிழக்கே உள்ள திருப்பத்தூர் கிராமத்தின் அந்த 120 வருடப் பெரிய பங்களாவுக்கு வெளியே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.

கோவிந்த் தன் ஐபேடில் உள்ள 3டி மேப்பிங் ஆப்பை மூடிவிட்டு காபியை உறிஞ்சினான்.

"என்ன கோவிந்த்! இந்த பங்களாவை நிஜமாவே ஹெரிடேஜ் ரிசார்ட்டா மாத்தப் போறியா?" கேட்டான் தமிழரசன்.

"ஆமாம் தமிழ்! அமிட்டிவில் பங்களாவை வச்சு அமெரிக்காகாரன் கோடிகள்ல பிசினஸ் பண்ணான். இந்த திருப்பத்தூர் பங்களாலயும் 3:15 மணிக்கு ஓர் ஆச்சி அலறுறான்னு கிராமத்துல கட்டுக்கதை கிளப்பி விட்டிருக்காங்க. இதனால நிலத்தின் மதிப்பு கம்மி. நாம அடிமாட்டு விலைக்கு வாங்கி, நைட்ல தங்குற பாரினர்களுக்கு ஹாரர் டூரிசம்ன்னு வித்தா செம காசு!"

"டேய் கோவிந்த்! 1975ல இந்த வீட்டின் ஆச்சி கஸ்தூரி, தன் நகைக்காக சொந்தப் பையனாலேயே கொலை செய்யப்பட்டாங்கடா."

கோவிந்த் சத்தமாகச் சிரித்தான். "தமிழ்! மனித மூளை பயத்துல தனக்குத்தானே பண்ணிக்கிற கன்பர்மேஷன் பயாஸ்தான் இது. நான் இன்னைக்கு நைட் இங்க தங்கி, லைவ் ஸ்ட்ரீமிங் பண்ணப்போறேன். பேயாவது பிசாசாவது ஏதோ ஒண்ணு இங்க இருக்குன்னு சமூக வலைத்தளத்துல நிரூபிச்சா, என்னோட யூடியூப் சேனல் பிச்சுக்கிட்டுப் போகும். ஒருவேளை அப்படியொண்ணும் இங்க இல்லன்னு நிரூபிச்சா  நாளைக்கு இந்த இடத்தோட ரேட் டபுள்! எப்படிப் பார்த்தாலும் லாபம்தான் தமிழ்!"

"சரி, உன் மார்க்கெட்டிங் பிரைன் உன்னைக் காப்பாத்தட்டும்!" தமிழரசன் தன் டூவீலைரை ஸ்டார்ட் செய்து மழையில் மறைந்தான்.

இரவு 3:10.

கோவிந்த் தன் சோனி ஆல்பா கேமராவை ட்ரைபாடில் மாட்டி, யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங்கை ஆன் செய்தான். லைவில் 4,000 பேர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"ஹாய் ப்ரெண்ட்ஸ்! இப்போ மணி 3:10. இன்னும் அஞ்சு நிமிஷத்துல இந்த வீட்டின் ஆச்சி ஆவி வரும்னு சொல்றாங்க. பார்ப்போம்." கோவிந்த் கேமராவைப் பார்த்துப் புன்னகைத்தான்.

திடீரென்று, அவன் கையில் இருந்த டிஜிட்டல் தெர்மோமீட்டர் வெப்பநிலையைக் காட்டியது. 28°C இல் இருந்து சட்டென்று 4°Cக்குச் சரிந்தது.

அவன் மூச்சுக் காற்று காற்றில் பனியாக உறைந்தது.

"ஓகே! இது மைக்ரோ கிளைமேட் மாறுபாடு. பழைய கட்டிடங்கள்ல காத்து சுழலும்போது இப்படி நடக்கும். தமிழரசனுக்குக் கூட இப்படி மருதவனத்துப் பங்களாவுல நடந்திருக்கு." லைவ்வில் இருந்த பார்வையாளர்களுக்கு விளக்கினான். ஆனால் அவன் ஆப்பிள் வாட்ச் இதயம் 115 BPM என்று காட்டியது.

அப்போது, ஹாலில் இருந்த பழைய டைப்பிரேட்டிங் மிஷினின் விசைப் பலகை தன்னிச்சையாகத் தட்டச்சு செய்யத் தொடங்கியது.

'டக்... டக்... டக்...'

கேமரா திரையில் நேரலை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் கமெண்ட்டில் அலறத் தொடங்கினார்கள். "பின்னால் பிசாசு. தப்பிச்சு ஓடுங்க பாஸ்! "

கோவிந்த் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். டைப்ரைட்டரின் ரோலரில் இருந்த பழைய காகிதத்தில் எழுத்துக்கள் விழத் தொடங்கின.

"கோவிந்த்! அமிட்டிவில் கதையைப் போல இது போலி அல்ல. என் பேரன்கள் என் நகையை ஒளித்து வைத்த இடம். இந்த டைப்ரைட்டருக்கு அடியில்தான்!"

கோவிந்தின் கைகள் நடுங்கின. "யார் யார் அது? ப்ளூடூத் ஹேக்கிங்கா?"

டைப்ரைட்டர் மீண்டும் அடித்தது. "நீ ஆச்சி ஆவியைக் காட்டி டூரிஸம் பிசினஸ் செய்ய வந்தாய் அல்லவா? இப்போது பார். உன் யூடியூப் லைவில் 50,000 பேர் பார்க்கிறார்கள்!"

கோவிந்த் கேமரா திரையைப் பார்த்தான். நேரலையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. கமெண்ட்டுகள் கணினியின் வேகத்தை விட வேகமாக ஓடின.

ஆனால், கேமரா திரையில் அவன் உருவத்திற்குப் பின்னால், கம்பீரமான தோற்றத்துடன், கழுத்தில் தங்கக் காசு மாலையுடன் ஒரு முதிய பெண் உருவம் நின்று கொண்டிருந்தது!

கோவிந்த் அலறிக்கொண்டு திரும்பிப் பார்த்தான். அங்கே யாரும் இல்லை. ஆனால் கேமரா திரையில் அந்த உருவம் மெதுவாக அவன் தோளைத் தொட்டது!

அந்த நொடி.

கோவிந்தின் உடலில் ஒரு பயங்கரமான மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அவன் கண்கள் சிவந்தன.

அவன் தன் கையிலிருந்த ஐபேடை தூக்கி எறிந்தான். யூடியூப் கேமராவை நேராகப் பார்த்து, தன் சொந்தக் குரல் இல்லாமல், ஒரு 80 வயதுப் பாட்டியின் குரலில் பேசத் தொடங்கினான்:

"என் நகையைத் திருடுன பசங்களை இன்னும் நான் விடலடா. இந்த பங்களாவுக்கு வர்ற அத்தனை பேரையும் நான்தான் வரவேற்பேன்டா!"

கேமராவின் லைவ் ஸ்ட்ரீம் சடாரென சிக்னல் லாஸ்ட் என்று கட் ஆனது.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****