அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 77
பேயைக் கண்டால் லைவ் ஸ்ட்ரீம் செய்யவும்!
யூடியூப்பில்
லைவ் கட் ஆன அடுத்த பத்தாவது நிமிடத்தில், தமிழரசன் தன் நண்பரும் ஆசிரியருமான கணேசுடன்
திருப்பத்தூர் பங்களாவுக்குள் சீறிப் பாய்ந்தான்.
ஹாலில்
கோவிந்த் தரையில் முழங்கால் மூட்டுகளில் அமர்ந்து, தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
அவனது கண்கள் நிலைகுத்தி நின்றன.
தமிழரசன்
ஓடிச்சென்று அவனைப் பிடித்தான். "கோவிந்த்! என்னடா ஆச்சு உனக்கு? டேய் என்னை நல்லா
உற்றுப் பாருடா!"
கணேஷ்
உடனடியாகத் தன் மெடிக்கல் கிட்டில் இருந்த டைஸாபம் ஊசியைக் கோவிந்தின் தோள்பட்டையில்
செலுத்தினான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், கோவிந்தின் உடல் தளர்ந்து, அவன் சுயநினைவை
இழந்து தமிழரசனின் தோளில் சாய்ந்தான்.
மறுநாள்.
காலை
8:15.
திருவாரூர்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐ.சி.யூ அறைக்கு வெளியே தமிழரசனும் கணேசும்
நின்றுகொண்டிருந்தார்கள். கோவிந்திற்கு ஈ.ஈ.ஜி மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவுகள்
வந்திருந்தன.
"பேய்
இல்லை. இது சுத்தமான டெம்போரல் லோப் எபிலெப்ஸி மற்றும் மாஸ் ஹிஸ்டீரியா!" என மருத்துவக்
கல்லூரியின் முதல்வர் மாரியப்பன் ஸ்கேன் பிலிம்களை வெளிச்சத்தில் பிடித்து விளக்கினார்.
"பழைய
பாழடைந்த பங்களாக்களின் சுவர்களில் இருக்கும் பழைய பித்தளை மற்றும் இரும்பு கம்பிகள்,
காற்றில் உள்ள ஈரப்பதத்தால் மின்காந்த அலைகளை வெளியிடும். கோவிந்த் அந்த டைப்ரைட்டருக்கு
அருகில் நின்றபோது, அங்கிருந்த அதிகப்படியான மின்காந்தப் புலம் அவனது மூளையின் டெம்போரல்
லோப் பகுதியைத் தீவிரமாகத் தூண்டியிருக்கிறது. இந்த பகுதிதான் மனிதனின் நினைவாற்றலையும்
கற்பனையையும் கட்டுப்படுத்துவது. அது தூண்டப்பட்டால், இல்லாத உருவங்கள் கண்ணுக்குத்
தெரியும்; தொடாத தொடுதல் உணர்வு ஏற்படும்!" மருத்துவர் மாரியப்பன் தொடர்ந்தார்.
"அப்ப
டைப்ரைட்டர் எப்படி ஆடுச்சு? அதுக்குள்ள புளூடூத் இல்லை தமிழ். அந்த பங்களாவின் அடியில்
நிலத்தடி நீர் வீரியமாகப் பாயும் ஒரு பாதை இருக்கிறது. நள்ளிரவு 3:15 மணிக்கு மழைநீர்
உள்ளே புகும்போது ஏற்படும் ஹைட்ராலிக் பிரஷர் அந்த அறையின் மரத் தரையில் நுண்
அதிர்வுகளை உருவாக்கிறது. அந்த குறிப்பிட்ட அலைவரிசையில் டைப்ரைட்டரின் சாவி கம்பிகள்
தன்னிச்சையாக ஆடத் தொடங்கின!" கணேஷ் அந்தப் பங்களாவை இஞ்ச் பை இஞ்ச் ஆக ஆய்வு
செய்ததிலிருந்து விளக்கினான்.
"அவன்
ஆச்சி குரல்ல பேசினானே?" தமிழரசன் கேட்டான்.
"அது
டிசோசியேட்டிவ் ஸ்டேட். அளவுக்கு அதிகமான பயம் மூளையைத் தாக்கும்போது, சப் கான்ஷியஸ்
மைண்ட் தன் சுய அடையாளத்தை இழந்துவிடும். ஆச்சி கொலை செய்யப்பட்டாள்ன்னு அவனது மூளை
அந்தத் தகவலைப் பிடித்துக்கொண்டு, ஆச்சியாகவே தன்னை பாவனை செய்து கொண்டது. இதையே உளவியலில்
ஹிஸ்டீரியல் போஸஸன் என்பார்கள்!" என்றார் மருத்துவர் மாரியப்பன்.
"லைவ்
ஸ்ட்ரீம்ல தெரிஞ்ச பேய்?" என்று தமிழரசன் கேட்க,
"எவனோ
ஒருத்தன் ஹேக் பண்ணி பண்ணுன கிராபிக்ஸ்டா அது. ஹேக்கிங், மேக்னடிக் பீல்ட், ஹைட்ராலிக்
பிரசர், டெம்போரல் லோப் அன்ட் சப் கான்ஷியஸ் மைண்ட் பண்ணுன அலப்பறைன்னு எல்லாம் சேர்ந்த
டிராமாதான் நேற்று நடந்தது." என்றான் கணேஷ்.
மதியம்
2:00 மணிக்குக் கோவிந்த் மெதுவாகக் கண் விழித்தான். அவன் இதயம் இயல்பான 72 என்ற சராசர
இதய துடிப்பு அளவுக்கு வந்திருந்தது.
"தமிழ்!"
கோவிந்த் பலவீனமான குரலில் அழைத்தான். "நான் ஏதோ ஆச்சி குரல்ல பேசினேனா? கேமராவுல."
தமிழரசன்
சிரித்தான். "நீதானே அதுக்கெல்லாம் ஆசைப்பட்டே. பிறகு ஏன் மயக்கமடிச்சு விழுந்தே.
அதெல்லாம் உன் மூளை உனக்கு அடிச்ச விபூதி கோவிந்த்! அறிவியலையும் இயற்பியலையும் ஒழுங்கா
கணக்கு போடாம, ஹாரர் டூரிசம் பண்ணப்போனா மூளை இப்படித்தான் ஹேங் ஆகும்!"
கோவிந்த்
பெருமூச்சு விட்டான். "அப்போ அந்தப் பங்களால பேய் எதுவும் இல்லையா?"
"இல்ல.
ஆனா, இருக்கு! அது எப்படின்னா, அந்தப் பங்களாவோட அடியில் நிலத்தடி நீர் இருக்கிறதை
வச்சு, அதை ஒரு மினரல் வாட்டர் பிளாண்ட்டா மாத்துனா, பேயைக் காட்டி சம்பாதிக்க நினைச்ச
நீ தண்ணிய வெச்சு சம்பாதிக்கலாம்! வேணும்னா அந்தத் தண்ணிய கொதிக்க வைக்குறப்ப வர்ற
நீராவியைக் காட்டி இதுதான் ஆவின்னு பிசினஸ் பண்ணிக்கோ!"
எல்லாரும்
சத்தமாகச் சிரித்தார்கள்.
ஆக விசயம்
இதுதான். மனிதன் பயப்படும் வரைதான் அமானுஷ்யம்; அதன் பின்னணியில் இருக்கும் லாஜிக்கைக்
கண்டுபிடித்துவிட்டால், அது வெறும் இயற்பியல், வேதியியல் மற்றும் உளவியல்தான்!
-
அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment