Showing posts with label அமானுஷ்ய அடையாறு. Show all posts
Showing posts with label அமானுஷ்ய அடையாறு. Show all posts

Wednesday, 12 August 2026

அமானுஷ்யங்களின் தலைநகரமாக இருந்த அடையாறு!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 51

அமானுஷ்யங்களின் தலைநகரமாக இருந்த அடையாறு!

சென்னை அடையாறு ஆலமரத்துக்கு மட்டும் புகழ்பெற்றது அன்று, அமானுஷ்யங்களுக்கும் புகழ்பெற்றது. அந்த வரலாற்றைத்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். கருணாகரனுக்கான விளக்கமும் இதில்தான் இருக்கிறது.

1900களின் தொடக்கம்.

லண்டனிலும் நியூயார்க்கிலும் மின்சார விளக்குகளும் டெலிகிராபும் புதிதாக வரத் தொடங்கிய காலம். ஒரு பக்கம் அறிவியல் வேகமாக வளர்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் மேலைநாட்டினர் அறிவியலுக்கு அப்பாற்பட்ட ரகசியம் என்ன? என்று தேடத் தொடங்கினார்கள். அந்தத் தேடலின் உச்சகட்ட விளைவுதான் பிரம்மஞான சபை எனும் தியோசபிகல் சொசைட்டி.

இதன் பின்னணியில் இருந்தவை இரண்டு மாஸ்டர்மைண்ட்கள்.  ஒருவர் மேடம் பிளவாட்ஸ்கி மற்றொருவர் அன்னி பெசண்ட் அம்மையார். இவர்களின் மெனுபாக்சரிங்குகளில் ஒன்றுதான் கருணாகரன் தனக்கு நடந்ததாகச் சொன்ன ஆஸ்ட்ரல் டிராவல்.

மேலைநாட்டினருக்கு எப்போதும் கிழக்கத்திய தேசங்கள் மீது ஒரு மர்மமான ஈர்ப்பு உண்டு. சாதுக்கள், இமயமலை, யோகா, மறுபிறப்பு, கர்மா போன்ற இவற்றையெல்லாம் ஏதோ ஒரு பெரிய ரகசியக் குறியீடு போலப் பார்த்தார்கள்.

மேடம் பிளவாட்ஸ்கி அந்த ஈர்ப்பைச் சரியாகக் கணித்தார். "உங்களுக்குத் தெரியாத பல ரகசியங்கள் இமயமலைச் சித்தர்களிடம் இருக்கின்றன. அதை உங்களுக்கு நாங்கள் கடத்துகிறோம்" என்றபோது, ஐரோப்பாவும் அமெரிக்காவும் அப்படியே சொக்கிப்போயின.

இன்றைக்கு நம்மூர் ஐடி கம்பெனிகள் கிளவுட் நெட்வொர்க் பற்றிப் பேசுவது போல, அன்று அவர்கள் ஆஸ்ட்ரல் டிராவல், டெலிபதி மற்றும் ஆரா பற்றிப் பேசினார்கள். கர்மா என்பது ஏதோ ஒரு தண்டனைச் சட்டம் அல்ல; அது ஓர் ஆன்மீக இயற்பியல் விதி என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள்.

நியூட்டனின் மூன்றாவது விதிக்கு ஆன்மீக வடிவம் கொடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் அவர்களது கர்மா கோட்பாடு இருந்தது.

இங்குதான் ஒரு பெரிய ட்விஸ்ட். இந்த உலகளாவிய ஆன்மீக நெட்வொர்க்கின் மெயின் சர்வர் எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா? லண்டனிலோ, பாரிஸிலோ இல்லை. நம் ஊர் சென்னை அடையாற்றில்!

அடையாறு ஆற்றங்கரையில், மர அடர்த்தி நிறைந்த அந்த அமைதியான நிலப்பரப்பு, உலகளாவிய பிரம்மஞான இயக்கத்தின் தலைமையகமாக மாறியது. லண்டன் உயர்குடி பிரபுக்கள், அமெரிக்கத் தத்துவவாதிகள், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் சென்னை நோக்கி படையெடுத்தார்கள். அப்போது தபால்கள், டெலிகிராம்கள், ரகசியக் கடிதங்கள் என அனைத்தும் அடையாற்றை மையமாக வைத்தே உலகமெங்கும் சுழன்றன.

அன்னி பெசண்ட் அம்மையார் சென்னைக்கு வந்தபிறகு, இந்த இயக்கம் ஆன்மீகத்தைத் தாண்டி அரசியல் மற்றும் கல்வித் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது தனிக் கதை. ஒருவகையில், அன்றைய சென்னைதான் உலகின் ஈஸோடெரிக் தலைநகரம்.

அறிவியலின் வேகமும், ஆன்மீகத்தின் மர்மமும் ஒன்றாகச் சந்தித்த அந்த 1900களில், அடையாறு ஆலமரத்தின் நிழலில் உட்கார்ந்துகொண்டு, உலகத்தையே தங்கள் ஆன்மீகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் இந்த இரு பெண்கள்.

மனித மனம் எப்போதும் விளக்க முடியாத ரகசியங்களைத்தானே தீவிரமாகக் காதலிக்கிறது! கருணாகரன் படித்ததெல்லாம் அவர்களுடைய ஆஸ்ட்ரல் டிரவல் பற்றி எழுதப்பட்டிருந்த இணையப் பதிவுகளைத்தான். இப்போது உங்களுக்கு எல்லாம் புரிந்திருக்குமே.

அப்புறம் என்ன? நெக்ஸ்ட் அட்ரஸ்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****