Monday, 10 August 2026

உடலுக்கு வெளியே ஒருவன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 48

உடலுக்கு வெளியே ஒருவன்!

நள்ளிரவு 2:15.

மேஜையில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் எண்களை மாற்றிக் கொண்டிருந்தது. கருணாகரன் கண்களை மூடிப் படுத்திருந்தான். சுற்றிலும் ஒரே அமைதி. அவன் தூங்கவில்லை. ஆஸ்ட்ரல் டிராவல் அதாவது உடலை விட்டு ஆன்மா வெளியேறும் கலையைப் பற்றி இணையத்தில் படித்த மூன்றாம் நாள் அது.

முதுகெலும்பை நேராக வைத்து, மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து வெளிவிட்டான்.

10... 9... 8...  உடலின் ஒவ்வொரு பாகமும் தளர்வடைகிறது

... 3... 2... 1.

திடீரென்று ஒரு லேசான அதிர்வு. காதில் வண்டுகளின் ரீங்காரம் போல ஒரு சத்தம். கருணாகரனுக்குத் தலைச்சுற்றியது.

அடுத்த வினாடி. அவன் கூரையை நோக்கி மிதந்து கொண்டிருந்தான்!

கீழே பார்த்தான். கட்டிலில் கருணாகரன் படுத்திருந்தான். அதே வெளிர் நீல நிற சட்டை, அடர் நீல நிற கைலி. லேசாகத் திறந்திருந்த வாய்.

"அடேங்கப்பா, வொர்க் அவுட் ஆயிடுச்சு!" கருணாகரன் மனதுக்குள் மட்டற்ற மகிழ்ச்சி.

தான் உடலை விட்டு வெளியே வந்துவிட்டதை அவனால் நம்ப முடியவில்லை. கூரையைத் தொட்டுப் பார்த்தான். கை கூரைக்குள்ளே ஊடுருவிச் சென்றது. புவியீர்ப்பு விசை இல்லை. எடையில்லை.

"சரி, அடுத்து எங்கே போகலாம்? பிஇஓ ஆபிஸ்? சிஇஓ ஆபிஸ்? சென்சஸ் எடுக்கப் போகும் ஏரியா?"

யோசித்து முடிப்பதற்குள், மனதின் வேகத்தில் அவன் ஜன்னலைக் கடந்து காற்றில் மிதந்தான். தெரு விளக்குகளின் மஞ்சள் வெளிச்சத்தில் கொரடாச்சேரி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. கொரடாச்சேரி பாலத்தைக் கடந்து, குடவாசல் பக்கம் பறப்பது ஓர் அசாத்திய சுகத்தைக் கொடுத்தது.

திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது. ஹெட் மாஸ்டர் வீடு பக்கம் போனால் என்ன? அவர் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர். அதில் தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்து விட வேண்டும் என்று தோன்றியது.

அடுத்த நொடி ஹெட்மாஸ்டர் படுக்கையறைக்குள் மிதந்தான். அவர் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். மேஜையில் அவர் எழுதிய டைரியை மூடாமல் அப்படியே தூங்கிப் போயிருந்தார்.

அவர் எழுதியிருப்பதைக் கருணாகரன் படிக்க ஆரம்பித்தான்.

"கருணகரனுக்கு பெர்மான்ஸ் போதாது. ஆவரேஜ். நாளை டிஎன்எஸ்இடி ஸ்கூல் ஆப்பில் ஆவரேஜ் பெர்மான்ஸ்தான் போட வேண்டும்."

"என்னது? ஆவரேஜா? ராப்பகலா கஷ்டப்பட்டு நோட்ஸ் எழுதி, பக்காவா எய்ட் தயார் பண்ணி கிளாஸ் எடுத்தா ஆவரேஜா? பெர்மான்ஸ் போதாதா? இதுக்கு மேல என்னடா பெர்மான்ஸைப் பண்ணுறது?" கருணாகரனுக்குக் கோபம் தலைக்கேறியது.

அந்த நாட்குறிப்பைத் தூக்கி எறிய கையை நீட்டினான். ஆனால், அவன் கை காற்றைத்தான் துளைத்தது. நுண் உடலால் பௌதிகப் பொருட்களைத் தொட முடியாது என்ற விதி நினைவுக்கு வந்தது.

சரி, ஹெட்மாஸ்டரைப் பயமுறுத்தலாம் என்று அவர் காதருகே போய் "யோவ் ஹெச்எம் என்னய்யா எழுதி வெச்சிருக்கே என்னைப் பற்றி?" என்று கத்தினான். ஆனால் ஒலி அலைகள் வரவில்லை.

ஹெட் மாஸ்டர் லேசாக உடலைத் திருப்பிப் போட்டுவிட்டு, "ம்ம். தேங்காய் சட்னி போதும். கார சட்னியைக் கொஞ்சம் வையுடி. எல்லாமே சப்புன்னு இருக்குடி" என்று தூக்கத்திலேயே புலம்பினார்.

கருணாகரனுக்குச் சிரிப்பு வந்தது, அதே சமயம் வெறுப்பாகவும் இருந்தது. "இந்த ஆன்மா பயணத்துல ஒரு பிரயோஜனமும் இல்லை. திரும்ப உடம்புக்கே போக வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டான்.

திரும்பவும் தன் வீட்டை நோக்கி மனதால் பயணித்தான்.

அவன் அறைக்கு வந்தான். கட்டிலில் அவன் உடல் படுத்திருந்தது.

ஆனால்,

அவன் உடலின் நெஞ்சின் மீது அவனது வளர்ப்புப் பூனை டைகர் உட்கார்ந்து கொண்டு, கருணாகரனின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. பூனைகளுக்கு நுண் உருவங்கள் தெரியும் என்பார்கள். டைகர் மிதந்து கொண்டிருந்த கருணாகரனைப் பார்த்து லேசாக "மியாவ்" என்றது.

"டேய் டைகர், நகருடா. நான் உள்ள போகணும்!"

டைகர் அசையவில்லை. கருணாகரனின் மூக்கின் மீது தன் வாலை வைத்து ஆட்டியது. உடம்புக்குள் செல்ல வழி தெரியாமல் கருணாகரன் காற்றில் தவித்தான். பூனை காலை எடுத்து வைத்தால்தான் ஆன்மா உள்ளே நுழைய முடியும்.

"ஐயோ, பொண்டாட்டி காலையில வந்து காபி குடுக்கறப்போ நான் பிணமா கிடந்தா என்ன பண்றது?" கருணாகரனுக்குப் பீதி தொற்றிக்கொண்டது.

கருணாகரன் உடலுக்குள் நுழைந்து விடுவானா?

உடலுக்குள் நுழையா விட்டால் கருணாகரனின் நிலை என்னவாகும்?

நாளை பார்ப்போம்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment