அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 62
அதிர்வெண் லீலைகள்
மறுநாள் காலை பத்து மணி.
சந்தோஷ் லேப்பில் சோடா பாட்டில்கள் காலியாகியிருந்தன. கோவிந்த்
தூங்கவில்லை. அவன் கண்கள் சிவந்திருந்தன.
எதிரே தமிழரசன் உட்கார்ந்திருந்தான். கோவிந்தின் உடனடி அழைப்பின்
பேரில் இரவோடு இரவாக கிளம்பி வந்திருந்த மன்னார்குடியில் வசிக்கும் நீடாமங்கலத்து ஆசிரியன்.
நொறுங்கிப் போயிருந்த அந்த ஐந்து லட்சம் ரூபாய் ஸ்பெக்ட்ரம்
அனலைஸர் பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான் தமிழரசன்.
"கோவிந்த்! நீ ஒரு முட்டாள்!" தமிழரசன் கையில் இருந்த
அதன் பாகங்களைக் கீழே வைத்தான்.
"ஏய்! நான் பொய் சொல்ல! 48.5 மைக்ரோடெஸ்லா காந்தப் புலம்.
டெம்பரேச்சர் திடீர்னு 14 டிகிரிக்குச் சரிஞ்சது. அப்புறம் அந்த ஆடியோ! 'தேர் இஸ் நோ
ரிசீவர்'ன்னு தெளிவா மோர்ஸ் கோட்ல."
"நிறுத்து கோவிந்த்! நீயும் சுந்தரும் சேர்ந்து ஒரு சைக்கோ
அகவுஸ்டிக் மாயையில சிக்கியிருக்கீங்க."
கோவிந்த் நிமிர்ந்து உட்கார்ந்தான். "அதை தயவு பண்ணி கொஞ்சம்
விளக்குத் தமிழ்!"
தமிழரசன் நொறுங்கிய சென்சார் போர்டைச் சுட்டிக்காட்டினான்.
"முதல் விஷயம் இன்ப்ரா சவுண்ட். அந்த வீட்டின் இரண்டாவது
மாடி அறையில் நீ அளந்த 7 ஹெர்ட்ஸ் அதிர்வெண். மனிதக் காதுகளுக்கு 20 ஹெர்ட்ஸ்க்குக்
கீழே கேட்காது. ஆனா, 7லிருந்து 19 ஹெர்ட்ஸ் அதிர்வெண் காற்றில் உருவானால், அது மனித
உடலில் என்ன பண்ணும் தெரியுமா? நம் கண்ணின் விழித்திரையில் ஒரு குறிப்பிட்ட சுய அதிர்வெண்
இருக்கு. அது 18 ஹெர்ட்ஸ். காற்றில் 18 ஹெர்ட்ஸ் இன்ப்ரா சவுண்ட் வரும்போது, உன் கண்
விழித்திரை அதிர்ந்து, மூளைக்குத் தவறான பிம்பங்களை அனுப்பும். அதைத்தான் ஹாலுசினேஷன்
அதாவது, பார்வை மாயைன்னு சொல்வாங்க. நீ திரையில பார்த்த அந்த முகம், வேற எதுவும் இல்லை.
உன் கண்ணின் அதிர்வால் உருவான ஒளியியல் பிழை!"
"சரி, அப்ப அந்த 14 டிகிரி குளிர்? அதுக்கு என்ன சொல்ற?"
கோவிந்த் குறுக்கிட்டான்.
"ரொம்ப எளிமையான விசயம். அது வென்ச்சுரி எபெக்ட். பழைய
வீட்டின் அந்தச் சிறிய ஸ்டோர் ரூம் ஜன்னல் இடுக்கில், வெளியே இருந்து வந்த காற்று மிகச்
சிறிய துளை வழியா வேகமாக ஊடுருவும்போது, காற்றின் அழுத்தம் திடீரெனக் குறையும். இயற்பியல்
விதிப்படி, அழுத்தம் குறையும்போது வெப்பநிலையும் சட்டெனச் சரியும். இதைத்தான் தெர்மோடைனமிக்ஸ்ல
ஜூல் தாம்சன் விளைவு என்பார்கள். அது பேய் வந்ததால் வந்த குளிரில்லை. வெறும் காற்றின்
அழுத்தம் மாறுபட்டதால் வந்த இயற்பியல் குளுமை! இதுக்குதான்டா பனிரெண்டாவதோட படிப்பை
முடிக்காதே. இன்ஜினியரிங் போய் படின்னு சொன்னேன். நீ கேட்காமே நானே சுயமா படிச்சு இன்ஜினியரிங்கைத்
தாண்டி விஞ்ஞானி ஆவேன்னு சவடால் விட்டேல்ல. இப்போ மாட்டிக்கிட்டே பார்த்தியா?"
கோவிந்த் யோசித்தான். "அதை விடு. அந்த வயசு அப்படி. இப்போ
விசயத்துக்கு வா. அப்போ அந்த தந்தி தட்டுற சத்தம்? மோர்ஸ் கோட்?"
"அங்கேதான் உன் கருவி உன்னை ஏமாற்றியிருக்கிறது!"
தமிழரசன் சிரித்தான்.
தமிழரசன் அந்தச் சிதைந்த சர்க்யூட் போர்டில் இருந்த ஒரு சிறிய
கருப்புச் சிப்பைக் காட்டினான்.
"நீ இந்த அனலைஸர்ல பயன்படுத்தியிருக்கிறது ஒரு மலிவான
அனலாக் டு டிஜிட்டல் கன்வெர்ட்டர். எம்எம்டிஏ சந்திரமுகித் தெருவில் பக்கத்து வீட்டிலோ
அல்லது தெருவிலோ யாரோ ஒருத்தர் பழைய சீலிங் பேனையோ, அல்லது கம்ப்ரஸரையோ ஆன் பண்ணியிருக்காங்க.
அது உருவாக்கின ஸ்பார்க் மிஷின் அலைகள், இந்த அனலைஸரின் ஷீல்ட் செய்யப்படாத ஒயர்கள்
வழியா உள்ளே நுழைஞ்சிருக்கு. தந்தி தட்டுவது போலக் கேட்ட அந்த டிக் டிக் சத்தம் பக்கத்து
வீட்டு மின்சாரக் கசிவால் உருவான ரேடியோ பிரீக்வென்சி இன்டர்பெரன்ஸ்!"
"அப்போ அந்த ஆடியோ? 'உன்னோட மெஷின் நல்ல ரிசீவரா வேலை
செய்யுதே'ன்னு குரல் கேட்டதே?"
தமிழரசன் சோடாவை எடுத்து ஒரு மடக்கு குடித்துவிட்டுச் சொன்னான்.
"அது பரோடிலியா அப்புறம் ஆம்ப்ளிடியூட் மாடுலேஷன். காற்றில்
ஆயிரக்கணக்கான ஏ.எம். ரேடியோ அலைகள், வாக்கி டாக்கி அலைகள் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
உன் நொறுங்கிய மெஷினில் இருந்த நான் லீனியர் ஜங்ஷன் ஒரு சாதாரண டியூனர் போலச் செயல்பட்டு,
காற்றில் சுற்றிய ஏதோ ஒரு லோக்கல் ஏ.எம். அலைவரிசையைப் பிடித்துவிட்டது. காற்றில் கேட்ட
இரைச்சலையும், ரேடியோ சிக்னலையும் உன் பயந்த மூளை, உனக்குப் பிடித்த ஆவி கதையோடு இணைத்து,
மொழிபெயர்த்துக்கொண்டது! அவ்வளவுதான்!"
கோவிந்த் அமைதியானான்.
தமிழரசன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் அசைக்க முடியாத அறிவியல்
தர்க்கம் இருந்தது. அந்த அறிவியல் மிகத் தெளிவாக விளக்கிவிட்டது. பயம் விலகி, கோவிந்தின்
மூளைக்கு மீண்டும் புத்துணர்ச்சி வந்தது.
"நிஜமா நீ சொன்னபடி, நான் எவ்வளவு பெரிய முட்டாள்!"
கோவிந்த் தலையில் அடித்துக் கொண்டான்.
"விடு கோவிந்த். 1895ல எக்ஸ்ரே வந்தப்போ உலகமே இப்படித்தான்
பயந்துச்சு. அறிவியல் விளக்கம் தெரியாத வரைக்கும் எல்லாமே அமானுஷ்யம்தான்! உன்னாலே
ஒரு நாள் விடுப்பு காலி. இப்பவே கிளம்புனாத்தான் நாளைக்காவது பள்ளிக்கூடம் போகலாம்.
" தமிழரசன் சிரித்துக்கொண்டே மன்னார்குடி கிளம்ப தயாரானான்.
"அப்புறம் தமிழ்! இதெப் பத்தி விஜயராமன்கிட்டெ சொல்லி
இதோட ஹிஸ்டாரிக்கல் நோட்டைக் கொஞ்சம் எழுதச் சொல்றீயா?"
"ஏன்டா உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா? ஆவி, அமானுஷ்யம்ன்னு
என்னவோ பாம்பு பிடிக்க அலையுற மாதிரி ஆவி பிடிக்க அலைஞ்சுகிட்டு இருக்கீங்க! நாட்டுல
எவ்வளவோ வேலை இருக்கு. அதெப் போயிப் பாருங்கடா முதல்ல." என்றபடி தமிழரசன் உடைந்து
கிடந்த அந்த ஸ்பெக்ட்ரம் அனலைஸரை எரிச்சலில் எட்டி உதைக்க, அது காயலான் கடைக்கு டிக்கெட்
எடுக்க தயாரானது.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment