Tuesday, 4 August 2026

மிஸ்டர் பேயே கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 42

மிஸ்டர் பேயே கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ்!

ஜனார்த்தனன் ஓடிச் சென்ற பிறகு, அந்த அறையின் மேஜை மீது இருந்த மடிக்கணினியில் ஒரு மென்பொருள் தானாக ஆப் ஆனது.

அது ஒரு முப்பரிமாண லேசர் படவீழ்த்தி. சுப்பையா தாத்தா என்பவர் நிஜ மனிதரும் அல்ல, பேயும் அல்ல! அது பக்கத்து வீட்டு ஏஐ மாணவன் பரமேஷ் சுடலைமுத்து உருவாக்கிய ஓர் ஆப்டிகல் இமேஜ்.

நவீன கேமராக்கள் அகச்சிவப்புக் கதிர்களை மட்டுமே கணிக்கும். ஆனால், லேசர் ஒளியால் உருவாக்கப்பட்ட பிம்பங்களுக்கு வெப்பம் இருக்காது. அதனால்தான் தெர்மல் கேமராவில் தாத்தாவின் உருவம் வெற்றிடமாகத் தோன்றியது. மைனஸ் 5 டிகிரி வெப்பநிலை என்பது அந்த பிராஜெக்டர் கருவி வெப்பமடையாமல் இருக்கப் பயன்படுத்தப்பட்ட லிக்விட் நைட்ரஜன் குளிரூட்டி உருவாக்கிய விளைவு!

மொத்தத்தில் அது ஜனார்த்தனின் பேய் பிடிக்கும் கிரஷைப் பயன்படுத்திக் கொண்டு பரமேஷ் சுடலைமுத்து விளையாடிய ஒரு ஜாலி விளையாட்டுதான் அந்தச் சம்பவம்.

இனி விசயத்திற்கு வருவோம்.

தொண்ணூறுகளில் பேய் என்றால் ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம், அல்லது மங்கலான ஒரு நிழல் படம். "இதோ பாருங்கள், மரத்தின் பின்னால் ஏதோ ஆவி தெரிகிறது!" என்று யாராவது ஒரு பிலிம் புகைப்படத்தைக் காட்டுவார்கள். மக்கள் பயந்து நடுங்குவார்கள்.

இப்போது காலம் மாறிவிட்டது. பேய் பிடிப்பவர்கள் இப்போது கையில் வேப்பிலை பிடிப்பதில்லை; கோஸ்ட் ஹண்டிங் கிட் வைத்திருக்கிறார்கள்.

இன்ப்ராரெட் கேமரா, எலக்ட்ரோ மேக்னடிக் பீல்டு சென்சார், எலெக்ட்ரானிக் வாய்ஸ் ரெக்கார்டர் என கையில் ஏந்திக்கொண்டு அவர்கள் நடமாடும்போது, பார்க்க உண்மையிலேயே நாசா விஞ்ஞானி செவ்வாய் கிரகத்தில் இறங்குவது போல் இருக்கிறது.

அமைதியான அறையில் எலெக்ட்ரானிக் வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்துவிட்டு, "இங்கே யாராவது இருக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு அமைதியாக இருப்பார்கள். அப்புறம் ரெக்கார்டிங்கை ரீப்ளே செய்து, பின்னணியில் கேட்கும் லேசான ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்தைக் கேட்டு, "இதோ பாருங்கள், 'வெளியே போ' என்று ஆவி சொல்கிறது!" என்பார்கள். நமக்குத்தான் அது பக்கத்து வீட்டு ஏசி கம்ப்ரசரின் சத்தமாகவோ அல்லது பேன் சத்தமாகவோ தோன்றும்! அவர்களுக்கு அது ஆவியின் குரலாகவே தோன்றும். இது வெறும் தோற்ற மயக்கம்தான்.

தொழில்நுட்பம் வளர வளர, கேமராக்களின் ரெசல்யூஷன் கூடிக்கொண்டே போனது. விஜிஏ கேமராவில் தொடங்கி 12 மெகாபிக்சல், 50 மெகாபிக்சல், இப்போது 200 மெகாபிக்சல் வரை வந்துவிட்டோம். ஆச்சரியம் என்னவென்றால், கேமராக்கள் தெளிவடையத் தெளிவடைய, புகைப்படங்களில் இருந்த பேய்கள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கி, இறுதியில் மறைந்தே விட்டன!

முன்பெல்லாம் ஆவி என்று சொல்லப்பட்ட அந்த வெளிச்சப் புள்ளிகளை விஞ்ஞானிகள் இப்போது சிம்பிளாக தூசு அல்லது கேமரா லென்ஸின் பிரதிபலிப்பு  என்கிறார்கள். இருட்டில் ப்ளாஷ் லைட் அடிக்கும்போது லென்ஸுக்கு மிக அருகில் பறக்கும் குட்டித் தூசு, அவுட் ஆப் போகஸில் பெரிதாக ஒளிரும்.

இந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் ஆவி நம்பிக்கையாளர்கள், அது தூசு இல்லை, என் கொள்ளுத் தாத்தாவின் ஆவியேதான் என்று அலறுகிறார்கள்.

இங்கே பிரச்சனை கேமராவில் இல்லை; மனித மூளையில். அறிவியலில் இதற்கு பேரிடோலியா என்று பெயர். தெளிவில்லாத வடிவங்களில் நமக்குத் தெரிந்த உருவங்களைத் தேடும் மூளையின் தந்திரம் இது. நிலவில் பாட்டியைப் பார்ப்பதும், மேகத்தில் யானையைப் பார்ப்பதும், மங்கலான போட்டோவில் பேயைப் பார்ப்பதும் ஒரே ரகம்தான்.

உண்மையில், பேய்களுக்கு இந்த நவீனக் கேமராக்களைப் பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஹை டெபனிஷன் கேமராக்கள் வந்தவுடன் அவை அனைத்தும் அவுட் ஆப் போகஸ் ஆகிவிட்டன.

அறிவியல் எல்லாவற்றையும் விளக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், மனிதனுக்கு எப்போதும் கொஞ்சம் மர்மம் தேவைப்படுகிறது. ஏனென்றால், அது வெறும் தூசு என்று ஒப்புக்கொள்வதை விட, ஆவி என்று நம்புவதில்தான் கொஞ்சம் திரில் இருக்கிறது அல்லவா!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment