மரணப் பட்டறைகள்!
பெற்றோர்கள்
உயிரைக் கொடுத்துப் பிள்ளைகளைப் படிக்க வைத்தால், பிள்ளைகள் அந்தப் படிப்பிற்காகத்
தங்கள் உயிரை விட்டுவிட்டுப் போகிறார்கள்.
இதுதான்
நம் கல்விப் புரட்சியா?
இந்தக்
கேள்வி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், உயர்கல்வி குறித்த புள்ளிவிவரங்கள் அப்படித்தான் சொல்கின்றன.
புது
தில்லியிலிருந்து வந்திருக்கும் புதிய புள்ளிவிவரம் என்ன சொல்கிறது தெரியுமா? கடந்த
ஓராண்டில் வெறும் 9 சதவீத உயர்கல்வி மாணவர்களுக்கு மட்டும்தான் தற்கொலை எண்ணம் வந்ததாம்!
அடேங்கப்பா, என்ன ஓர் ஆறுதலான செய்தி! இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் நூறு சதவீதத்தை
எட்டியிருக்கலாமோ என்னவோ!
நம்
உச்சநீதிமன்றம் ஒரு தேசிய பணிக்குழுவை அமைத்து ஆய்வு செய்ததில்தான் இந்த அதிசய உண்மைகள்
வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 2 லட்சத்து 43 ஆயிரம் உயர்கல்வி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில்,
15 சதவீதம் பேர் எப்போதும் சோகத்திலேயே மூழ்கிக் கிடக்கிறார்களாம். பள்ளிகளும் கல்லூரிகளும்
என்னவோ கல்விக்கூடங்கள் என்று நினைத்தோம்; பார்த்தால் அது என்னவோ மன அழுத்தத் தொழிற்சாலைகள்
போலிருக்கிறது!
வகுப்பறையில்
உட்கார்ந்திருக்கும்போதே, 34 சதவீதம் மாணவர்கள் தங்களை ஏதோ வேற்றுக்கிரகவாசி போலவும்,
சக மனிதர்களுடன் ஒன்ற முடியாமல் ஏதோ பாழுங்கிணற்றுக்குள் தள்ளப்பட்டதைப் போலவும் உணர்கிறார்களாம்.
நல்லவேளையாக, மாணவர்களின் கல்விக்காக விண்ணை முட்டும் கட்டணம் வாங்கும் கல்வி நிறுவனங்கள்
மாணவர்களின் இந்த வேதனைக்குத் தனிக் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை போல!
பல கல்வி
நிறுவனங்களில் மாணவர்கள் மனம் உடைந்து அழுதால் ஆறுதல் சொல்லக் கூட ஆள் கிடையாதாம்.
அப்படி அழும் அவர்களின் சதவீதம் 32. மாணவர்களின் உயிர் போனால் கூட பரவாயில்லை, பணம்
போய் விடக் கூடாது என்பதில் கல்வி நிறுவனங்கள் கவனமாக இருக்கின்றன. அப்படியா என்றால்
அப்படித்தான். கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசனை மையங்களை வைத்தால் செலவு அதிகமாகிவிடாதா
பின்னே?
அரைக்
கிணறு தாண்டிய கதை போல, 50 சதவீத மாணவர்கள் தங்கள் கல்லூரிகள் தங்களைக் காப்பாற்றும்
என்ற நம்பிக்கையே இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில்
மருத்துவ மாணவர்களின் மன அழுத்தம் சொல்லி மாளாது. அவர்களின் கல்வி நேரம் ஒரு சாதாரண
மனிதன் தாங்கக்கூடிய எல்லையைக் தாண்டி, எந்திரங்களை விடக் கேவலமாக வேலை வாங்குவதுதாக
இருக்கிறது. அந்த வகையில், மருத்துவ மாணவர்களின் பணி நேரம், ஒருவர் இயல்பாகத் தாங்கக்
கூடிய அளவை மீறி நீள்கிறது. கடுமையான வருகைப் பதிவு விதிமுறைகள் மாணவர்களின் மூச்சை
அடைக்கின்றன.
பொறியியல்
கதையும் இதே ரகம்தான். ஒருவர் வாங்கிய மதிப்பெண்களை விட இன்னொருவரும் கூடுதலாக வாங்க
வேண்டும் என்ற அழுத்தம் அங்கு சாசுவதம். இந்த எலிப் பந்தயத்தில் ஓடி ஓடி, மாணவர்களின்
மூளை பழுதாகிப் போவது கல்வி நிறுவனங்களுக்குப் பெருமையாக இருக்கலாம்; பெற்றோருக்கு
அது பேரிடி! ஆம், பொறியியல் கல்லூரிகளில் உள்ள தீவிரமான போட்டி மற்றும் கடுமையான தகுதி
மதிப்பீடுகள், மாணவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி விடுகின்றன.
தேசிய
குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, உயர்கல்வி மாணவர்களின் தற்கொலை விகிதம் 26
சதவீதத்திலிருந்து இப்போது 30 சதவீதமாக எகிறிக் குதித்திருக்கிறது.
மதிப்பெண்
இயந்திரங்களை விடுத்து, மனிதர்களை உருவாக்கும் கல்வி எப்போது இந்த நாட்டில் மலரப் போகிறது?
அதுவரை நமது உயரகல்வி நிறுவனங்கள் கல்வித் கோயில்கள் அல்ல; மதிப்பெண்களுக்காக மனிதர்களைப்
பலியிடும் மரணப் பட்டறைகள்தான்!
மதிப்பெண்களுக்காக
மடியும் மாணவர்களின் உயிர்களைக் காப்பாற்ற, கல்வி நிலையங்களை மன அழுத்தமில்லாத மனித
நேயமிக்க இடங்களாக மாற்றுவதே காலத்தின் கட்டாயம்!
*****
