Showing posts with label நினைவுகளில் மீதமுள்ள இட்டிலி. Show all posts
Showing posts with label நினைவுகளில் மீதமுள்ள இட்டிலி. Show all posts

Sunday, 20 September 2026

நினைவுகளில் மீதமுள்ள இட்டிலி!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 90

நினைவுகளில் மீதமுள்ள இட்டிலி

மறுநாள் காலை.

சரியாக ஆறு மணி.

தமிழரசன் தூக்கக் கலக்கத்துடனும், மனதில் கொஞ்சம் நடுக்கத்துடனும் எழுந்து டைனிங் டேபிளுக்கு வந்தான். நேற்றிரவு நடந்த அந்த மிரட்சியான சம்பவம் அவன் மூளையை இன்னும் சுழல விட்டிருந்தது. நிஜமாகவே இறந்து போன அப்பாவின் ஆன்மா வந்து விட்டதா அல்லது தனக்குப் பித்துப்பிடித்துவிட்டதா? என்று யோசித்தபடியே டேபிளைப் பார்த்தான்.

அங்கே, இட்லி ஒன்று காலியாகத்தான் இருந்தது! சட்னியும் குழைந்திருந்தது.

அப்போது கபிலன் டீயோடு அங்கே வந்தான். அவன் முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு. லேப்டாப்பைத் திறந்து டேபிளில் வைத்தான்.

"என்னப்பா! நேத்து நைட் நம்ம வீட்டுல ஏதோ வித்தியாசமா நடந்த மாதிரி இருக்கு?" என்றான் கபிலன் நமுட்டுச் சிரிப்புடன்.

தமிழரசன் அதிர்ச்சியோடு மகனைப் பார்த்தான். "உனக்குத் தெரியுமா?"

கபிலன் தன் லேப்டாப்பைத் திருப்பிப் பிடித்துக் காட்டியதுடன், ஒரு சிறிய கருப்புச் சாதனத்தைக் காட்டினான். "இதுக்குப் பேரு நியூரோ வாய்ஸ் சின்தசிஸ் அன்ட் ஹோலோகிராபிக் ப்ரொஜெக்சன். தாத்தாவோட பழைய வீடியோக்கள், ஆடியோக்கள் எல்லாவற்றையும் என் ஏ.ஐ சாப்ட்வேரில் பீட் பண்ணினேன். அவர் எப்படிப் பேசுவார், எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார், ஒரு விசயத்தை எப்படிக் கேட்பார் என்கிற அத்தனைக் டேட்டாவையும் அல்காரிதம் மூலம் செட் பண்ணிவிட்டேன்."

"அப்படியானால் நேத்து வந்தது?"

"பேய் இல்லைப்பா! இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் சென்சார் டெக்னாலஜி. அங்க வைச்ச இட்லிகளை ஒரு மைக்ரோ வெயிட் சென்சார் மூலமாக டிராக் பண்ணி, அதுல ஒண்ணு காணாமல் போனா, இந்த ஏ.ஐ புரோகிராம் வேலை செய்யுற மாதிரி செட்டிங் பண்ணி வெச்சேன். தாத்தாவின் குரல், அந்த நீல நிற லேசர் வெளிச்சம் எல்லாமே என் லேப்டாப் மூலமாக புரோகிராம் செய்யப்பட்ட ப்ராஜெக்ட்தான். அப்புறம் அந்த ஒரு இட்டிலியை எடுத்தது நான்தான். சட்டினியைக் குழைச்சு வெச்சதும் நான்தான்."

தமிழரசன் சில கணங்கள் அமைதியாக இருந்தான். பிறகு, மெலிதாகச் சிரித்தான். "டேய்! டெக்னாலஜி மூலம் செத்த தாத்தாவை உயிர்ப்பிக்கப் பார்க்கிறாயா?"

"இல்லைப்பா! நீங்கள் சொன்னீங்க இல்ல, மனசுக்கு ஒரு ரீசார்ஜ் தேவைன்னு. ரஷ்யாவில் கல்லறையில் போய் ஒயின் ஊத்துறது ஒரு சம்பிரதாயம் என்றால், நம்ம வீட்டில் எது சமைச்சாலும் அதை தாத்தாவுக்கு வைக்குறதும் ஒரு சம்பிரதாயம்தான். அந்தத் தாத்தாவின் ஞாபகங்களை அப்படியே லைவ்வாக மாற்றுவது மாடர்ன் டெக்னாலஜி! ஆன்மாக்கள் திரும்பி வருவதில்லைதான், ஆனால் நாம் உருவாக்கும் தொழில்நுட்பம் அவற்றை ஒருபோதும் சாகவிடுவதில்லை."

ஜெயந்தி சமையலறையில் இருந்து தமிழரசனுக்கு டீ டம்பளருடன் வந்துகொண்டே சொன்னாள், "ஏங்க, டெக்னாலஜியோ, மிளகாய் பஜ்ஜியோ, எதுவானாலும் சரி, இன்னைக்கு மதியம் கபிலனோட தாத்தாவுக்கு என்ன சமைக்கணும்னு சீக்கிரம் சொல்லுங்க! இன்னைக்குக் காரத்தைக் கொஞ்சம் கம்மி பண்ணித்தான் சமைக்கணும்."

தமிழரசன் பெருமூச்சுடன் டீ டம்பளரை வாங்கியபடி மகனைப் பார்த்தான். "சரிதான். தாத்தாவை வெச்சு, அம்மாவைக் காரம் குறைச்சுச் சமைக்க வைக்கப் பார்க்கிறீயே கபிலா! இது என்னடா அல்காரிதம்?" என்றான்.

கபிலன் மடிக்கணினியை மூடிக் கொண்டே சிரித்தபடிச் சொன்னான். "இதுக்குப்பேரு மாம் கண்ட்ரோல் ஏ.ஐப்பா! டாக்டர் எத்தனை தடவை சொல்லிட்டாங்க, காரத்தைக் குறைச்சு சாப்பிடுங்கன்னு, கேட்கிறீங்களா? அதான், தாத்தாவின் குரல் மூலமா காரத்தைக் குறைச்சாதான் நீங்க கேட்பீங்கன்னு சாப்ட்வேர்ல ஆட்டோ டியூன் பண்ணி வெச்சேன்."

தமிழரசன் தலையில் அடித்துக்கொண்டான். "பேயைக் கூட நம்பிடலாம் போலிருக்கு. இந்த ஏ.ஜயை நம்பக் கூடாதுடா. தட்டுல காரம் குறைஞ்சா, இந்தத் தமிழரசன் அதை நாக்குல வைக்க மாட்டான்னு தாத்தாவுக்கே தெரியும்டா. இப்போ அவரை வெச்சே என்னைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறீங்க இல்லே?"

சமையலறையிலிருந்து இப்போது ஜெயந்தியின் குரல் ஓங்கி ஒலித்தது, "ஏங்க நீங்க சண்டையை அப்புறம் வச்சுக்கலாம்; சீக்கிரம் தாத்தா சாப்பாட்டு மெனுவைச் சொல்லுங்க. எனக்குச் சமைக்க நேரமாச்சு."

"அப்படியா! இன்னிக்குத் தாத்தாவுக்குப் பிடிச்ச மிளகு சாதம், மிளகு குழம்பு, மிளகு ரசம், மிளகுப்பொடி, மிளகு  துவையல். தயார் பண்ணிடு."

"ஏன், மிளகுத் தண்ணி, மிளகு மோர், மிளகாய் சட்டினி அதெல்லாம் வேண்டாமா?"

"நல்ல வேளை. ஞாபகப்படுத்தினே. மறந்துட்டேன். அதையும் பண்ணிடு." என்று தமிழரசன் சொல்ல, "இதுகள எல்லாம் அவங்களோட அப்பாவோட அப்பா, பாட்டனோட பாட்டனே வந்தாலும் திருத்த முடியாது!" என்றபடி ஜெயந்தி சமையலைத் துவக்கினாள்.

ஆக விசயம் இதுதான். அறிவியல் வளரலாம், மென்பொருள்கள் மாறலாம்; ஆனால் மனிதனின் நினைவுகளுக்கு முன்னோர்களை நினைவில் கொள்ளும் அந்த உளவியலில் மட்டும் எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் கிடையாது! அதே போல மகனை வைத்து அப்பாவைத் திருத்த நினைக்கும் அம்மாக்களின் உளவியலிலும் இனி வரும் காலங்களிலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவது கிடையாது!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****