தேசியப் பணிக்குக் கூலி கேட்பது தேசத் துரோகமா என்ன?
நம்
ஊரில் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடம் எடுப்பதைத் தவிர வேறு
எல்லா வேலைகளையும் கொடுப்பார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். குடும்ப
கட்டுபாட்டுக்கு ஆள் பிடிப்பதில் ஆரம்பித்து, தேர்தல்
பணி வரை சகலமும் அவர்கள் தலையில்தான். இப்போது புதிய வரவு, 2027க்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி.
போன
ஆகஸ்ட் மாதம் முழுவதும், கொளுத்தும்
வெயிலில் ஊர் ஊராகச் சென்று, "உங்க வீட்டில் எத்தனை பேர், தொலைக்காட்சி இருக்கிறதா, அலைபேசி
இருக்கிறதா, இன்னும் வானொலியில்தான் செய்தி கேட்கிறீர்களா?" என்று
நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு கணக்கெடுத்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,
இப்போது ஒரு சின்னஞ்சிறு கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.
"ஐயா, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணி பார்த்தோமே,
அதற்கான மதிப்பூதியத்தைக் கொஞ்சம் தாருங்கள்!"
ஆனால், நமது அதிகார வர்க்கம் எப்படிப்பட்ட பதிலைச் சொல்கிறது தெரியுமா?
"பொறுமையாக இருங்கப்பா. அக்கவுண்ட் டீடெயில்ஸ் எல்லாம் பலமுறை செக்
பண்ணிட்டு இருக்கோம்."
கேட்கவே
புல்லரிக்கிறது! மாதா மாதம் அரசாங்க சம்பளம் எந்த வங்கிக் கணக்குக்குப் போகிறதோ,
அதே வங்கிக் கணக்குக்குத்தான் இந்தப் பணமும் வரப்போகிறது. இதற்கு எதற்குப் 'பலமுறை'
செக்கிங்? என்ன செக் செய்கிறார்கள்? அக்கவுண்ட்டில் ஓட்டை விழுந்து பணம் கீழே ஒழுகி விடும் என்றா? அல்லது டிஜிட்டல் இந்தியாவில், கூகுள் பேயில் டீ குடிக்கிற காலத்தில், பணம் வேறு எங்காவது பயணம்
செய்து விடும் என்றா?
இதில்
ஆசிரியர்கள் தரப்பில் சொல்லப்படும் ஒரு தர்க்கம், நெஞ்சை
உலுக்குகிறது. "ஐயா, இதுவே தேர்தல் பணி என்றால், ஓட்டுப்பதிவு
இயந்திரங்களைத் தூக்கும் போதே பணத்தைக் கையில் கொடுத்து விடுவார்கள். இதில் மட்டும
ஏன் இந்த இழுத்தடிப்பு?" என்று
பரிதாபமாகக் கேட்கிறார்கள்.
அட
பெருமூச்சு விடுகிற ஆசிரியப் பெருமக்களே! உங்களுக்கு உலக
நடப்பே புரியவில்லையே! தேர்தல் என்றால் அங்கே பதிவாகப்போவது அரசியல்வாதிகளின்
தலையெழுத்து. எனவே, அங்கே பட்டுவாடா படுவேகமாக நடக்கும்.
ஆனால், சென்சஸ் என்பது வெறும் தலைகளை எண்ணும் வேலை.
இந்தியாவில் தலைகளுக்கு என்ன மரியாதை இருக்கிறது?
பயிற்சிப்
படியாக ஒரு நாளைக்கு 600 ரூபாய் என்று
அறிவித்துவிட்டு, அதில் 200 ரூபாயைச் செலவினம் என்று அவர்களே கழித்துக்கொண்டு, மிச்சமிருக்கும்
பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது.
மொத்தம் ஒரு லட்சம் பேருக்குச் தர வேண்டிய தொகை சுமார் 102 கோடி
ரூபாய். இந்த 102 கோடியும் இப்போது எந்த வட்டிக்
கணக்கில், என்ன வட்டி விகிதத்தில், யாருடைய
கண்காணிப்பில் பத்திரமாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது என்பது
அந்தப் பரமசிவனுக்குத்தான் வெளிச்சம்.
ஆசிரியர்களைப்
படுத்தும் பாடு இதோடு முடியவில்லை. உள்ளூரில் இருக்கும் ஆசிரியரை உள்ளூரிலேயே
கணக்கெடுக்க விட்டால் அவர் பாட்டுக்கு வேலையை முடித்துவிடுவார் அல்லவா? அது நிர்வாக இயந்திரத்துக்குப் பிடிக்காது. தஞ்சாவூரில்
இருக்கும் ஆசிரியரைத்
திருவாரூருக்குப் போய் கணக்கெடுக்கச் சொல்வார்கள். இது ஒருவகை மன
உறுதி வளர்க்கும் பயிற்சிக் களம். பெண்கள் படும் அவஸ்தையைப் பற்றிச் சொல்லவே
வேண்டாம். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தேசியக் கடமை
என்று கணக்கெடுத்து முடித்தால், கடைசியில் 'உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை நாங்கள் இன்னும் செக் பண்ணி முடிக்கல' என்று பதில்கொடுக்கிறார்கள்.
கணக்கெடுப்பு எடுத்த ஆசிரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ரூபாய் விரைவில்
கிடைத்துவிட்டால் சரி. இல்லையென்றால், 2027 மக்கள்தொகை
கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணியின்போது, வீட்டுக்காரர்கள்
ஆசிரியர்களைப் பார்த்து, "ஐயா! போன முறை
வந்தீர்களே! அதற்கான பணம் கிடைத்து விட்டதா?" என்று கேட்கும்
நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இதுதான் இந்தியா!
*****

No comments:
Post a Comment