Wednesday, 9 September 2026

பேய்களுக்கு டால்டா ஊற்றக் கூடாது!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 79

பேய்களுக்கு டால்டா ஊற்றக் கூடாது!

இரவு பதினொரு மணி.

மருதவனத்தில் இருந்த அந்தப் பேய் பங்களாவில் வழக்கத்திற்கு மாறாக ஒரே வெளிச்சம்.

கோவிந்த், தற்போது ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கும் பிசினஸ் மேக்னெட்டாக ஆகியிருந்தான்.

கூகுளில் ஹங்கிரி கோஸ்ட் பெஸ்டிவல் பற்றிப் படித்துவிட்டு, அவனுக்குள் இருந்த கிரியேட்டிவ் மூலையில் தீப்பற்றிக்கொண்டது.

"தமிழரசன்! சீனக்காரன், மெக்சிகோகாரன்லாம் பேய்க்குத் திருவிழா எடுக்கும்போது, நாம ஏண்டா எடுக்கக் கூடாது? தமிழ்நாட்டு ஸ்டைல்ல ஓர் ஆவி திருவிழா. செம கான்செப்ட்ல?"

"டேய், எவனாவது நான்தான் பேய் மாமன், பிசாசு மச்சான்னு வந்து நிப்பான், வேணாம்டா!" என்று பயந்தான் தமிழரசன்.

ஆனால் கோவிந்த் கேட்கவில்லை. வீட்டின் பின் தோட்டத்தில் பந்தல் போட்டான். வாழையிலை விரித்தான். ஆவிகளுக்குப் பிடித்த உணவுகள் என்று மெனு ரெடியானது. காரசார மசாலா தூக்கலாகக் காரசாரமான நாட்டுக்கோழி வறுவல், நல்லெண்ணெய் ஊற்றிய பொடி தோசை, ஒரு குவாட்டர் கட்டிங், இரண்டு பாக்கெட் சிகரெட், நான்கு கலயம் நிறைய கள், பீடி மற்றும் சுருட்டு தலா ஒரு பாக்கெட் என எல்லாம் தயாரானது.

"பேய்களுக்கு வழிகாட்ட சீனாவுல ஆத்துல விளக்கு மிதக்க விடுவாங்க. நாம நம்ம பங்களா குளத்துல காகிதக் கப்பல்ல மெழுகுவர்த்தி ஏத்தி மிதக்க விடுவோம்."  கோவிந்த் ரூல்ஸ் போட்டான்.

நள்ளிரவு 12:00 மணி.

"வாருங்கள் ஆவிகளே! வந்து அருந்துங்கள்!" என்று கோவிந்த் ஆவிகளின் ஸ்டைலில் குரல் கொடுத்துவிட்டு, லைட்டை அணைத்தான்.

பூசணிக்காயைக் குடைந்து லைட் போட்டு வைத்திருந்தார்கள்.

வளிமண்டலத்தில் ஒருவித சலசலப்பு.

திடீரென்று, அந்த இடத்தின் வெப்பநிலை பாதியாகக் குறைந்தது. ஏசி 16 இல் இருந்தால் கூட அவ்வளவு குளிராது.

குளத்தில் மிதந்த காகிதக் கப்பல்கள் திடீரென சுழன்று ஒரே இடத்தில் நின்றன.

இலை முன்னால் ஒரு நிழல் உருவம் தென்பட்டது. தமிழரசனுக்கு வியர்த்துக் கொட்டியது. கோவிந்த் தன் ஆன்ட்ராய்டு போனை எடுத்து லைவ் போட ரெடியானான்.

நிழல் உருவம் வாழையிலையின் முன்னால் உட்கார்ந்தது. சிகரெட் பாக்கெட்டை எடுத்தது. ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தது. தீப்பெட்டி இல்லாமல், அதனுடைய விரல் நுனியிலேயே நெருப்பு பற்றி சிகரெட் புகையத் தொடங்கியது!

"கோவிந்த்! அது நிஜ பேய்டா!" தமிழரசனின் குரல் நடுங்கியது.

அந்த உருவம் குவாட்டர் பாட்டிலைத் திறந்து, சோடா கூட ஊற்றாமல் ஒரே மூச்சில் அடியோடு குடித்தது. பிறகு நாட்டுக்கோழி வறுவலை எடுத்து மொறுமொறுவென்று மென்றது.

சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவாமலே தமிழரசனின் தோளைத் தொட்டது. பனிக்கட்டியை எடுத்து முதுகில் வைத்தது போல தமிழரசனுக்கு உடல் நடுங்கியது.

அந்த ஆவி, பேசத் தொடங்கியது. "தம்பிகளா! கான்செப்ட் நல்லாத்தான் இருக்கு. ஆனா, இந்த பொடி தோசையில நல்லெண்ணெய்க்கு பதிலா டால்டா ஊத்திருக்கீங்க. செத்த பிறகும் எனக்கு கொலஸ்ட்ரால் ஏத்தப் போறீங்களா?"

கோவிந்திற்குத் தொண்டை அடைத்தது. "நீங்க யாரு?"

"நான் 1980ல களப்பால் ரோட்டுடுல பைக் ஆக்சிடென்ட்ல மண்டையை உடைச்சுக்கிட்டு மண்டையைப் போட்ட மொக்கச்சாமி. வருஷ வருஷம் எங்க வீட்ல காராமணி சுண்டலும், பச்சைத் தண்ணியும்தான் வைப்பானுங்க. நீங்க கோழி வறுவலும் குவாட்டரும் வச்சிருக்கீங்கன்னு கூகுள் மேப் காட்டவே ஓடி வந்தேன்."

சொல்லிவிட்டு அந்த ஆவி நக்கலாகச் சிரித்தது. அந்தச் சிரிப்பு நாலா பக்கமும் எதிரொலித்தது.

"சரி, திருவிழான்னா படையல் மட்டும் போதாதே. ஆவி உங்க கூடவே கொஞ்ச நாள் இருக்கணும்ல? அதுதானே தமிழன் விருந்தோம்பல்!"

ஆவி மெல்ல கோவிந்தை நோக்கி நகரத் தொடங்கியது. அதன் கண்கள் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தன. பூசணிக்காயில் இருந்த மெழுகுவர்த்தி வெளிச்சம் திடீரென நீல நிறமாக மாறியது.

வெளியே பயங்கரமான காற்று வீச, பங்களாவின் கதவுகள் டப் டப் என அடித்துக் கொண்டன.

"டேய் கோவிந்த்! ஹாலோவீன், பூசணிக்காய்னு வெஸ்டர்ன் கல்ச்சர் பண்ணது போதும்டா. ஆவி வீட்டுக்குள்ளேயே செட்டில் ஆகப் போகுது, ஓடுடா!" என்று கத்தியபடி தமிழரசன் கேட்டை நோக்கி ஓடினான்.

கோவிந்த் தன் ஆன்ட்ராய்டு போனைக் கீழே போட்டுவிட்டு, வாழ்க்கையிலேயே அவ்வளவு வேகமாக ஓடியதே இல்லை எனும் அளவிற்கு வீட்டை விட்டு வெளியே ஓடினான்.

பின்னாலிருந்து மொக்கச்சாமி ஆவியின் உரத்த சிரிப்பு ஒலித்துக்கொண்டே இருந்தது: "அட இருங்கப்பா! ஸ்வீட் சாப்பிடாமலே போறீங்களே!"

அடுத்த நாள் காலை.

மருதவனம் பங்களா காலியாகக் கிடந்தது. வாசலில் ஒரு போர்டு தொங்கியது. ‘To Let  பேய்களுக்கு மட்டும் அனுமதி இல்லை!’

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment