அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 78
பயத்தின் பேலன்ஸ் ஷீட்
1974,
நவம்பர் 13.
நியூயார்க்கின்
லாங் ஐலேண்டில் உள்ள அமிட்டிவில் நகரம்.
இரவு
3:15 மணி.
112
பெருங்கடல் அவென்யூவில் உள்ள வீட்டில் ரொனால்ட் டிபேவோ ஜூனியர் என்ற 23 வயது இளைஞன்,
தூங்கிக் கொண்டிருந்த தன் தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் என குடும்பத்தில்
உள்ள ஆறு பேரையுமே மார்லின் 35 ரைபிளால் சுட்டுப் படுகொலை செய்தான்.
போலீசிடம்
அவன் சொன்ன காரணம், "என் காதுக்குள் கேட்ட ஏதோ ஒரு குரல்தான் என்னை இதைச் செய்யச்
சொன்னது!"
வழக்கு
முடிந்தது. அவன் சிறைக்குச் சென்றான். ஆனால் அமிட்டிவில் கதை அங்கே முடியவில்லை. அங்கேதான்
நிஜமான பிசினஸ் தொடங்கியது.
1975
டிசம்பரில், ஜார்ஜ் லூட்ஸ் மற்றும் கேத்தி லூட்ஸ் தம்பதியினர் தங்கள் மூன்று குழந்தைகளுடன்
அந்த வீட்டை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார்கள். படுகொலை நடந்த 13 மாதங்களுக்குப்
பிறகு குடியேறியவர்கள், வெறும் 28 நாட்களில் அலறி அடித்துக் கொண்டு அரைகுறை ஆடையுடன்
வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
அவர்கள்
சொன்ன அமானுஷ்யப் பட்டியல் நீளமானது. அவை என்னவென்றால், தினமும் அதிகாலை 3:15 மணிக்கு
அதாவது, அந்தக் கொலை நடந்த நேரம் ஜார்ஜுக்குத் திடீரென விழிப்பு வரும். சுவர்களில்
இருந்து பச்சை நிறத்தில் சேறு போன்று ஒழுகும். குளிர்காலத்திலும் வீட்டின் கதவு அருகில்
ஈக்கள் மொய்க்கும். கேத்தி காற்றில் மிதந்தார்; அவரது உடலில் காயங்கள் தோன்றின.
உடனே
மீடியாக்கள் மொய்த்தன. எட் மற்றும் லோரேன் வாரன் தம்பதியினர் அங்கே லேண்ட் ஆனார்கள்.
"இங்கே அமானுஷ்ய பிசாசுகள் இருக்கின்றன!" என்று சான்றிதழ் வேறு கொடுத்தார்கள்.
அமிட்டிவில்
அமானுஷ்யத்தின் பின்னணியை உற்றுப் பார்த்தால், அங்கே அமானுஷ்ய சக்தி இல்லை; அங்கே இருந்தது
டாலர்களின் பவர்.
பழைய
டச்சு பாணி வீடான அதில், கடலோரக் காற்று வீசும்போது கதவுகளும் ஜன்னல்களும் 'டங் டங்'
என அடிப்பது இயற்பியல் விதி. ஆனால் பயத்தில் இருந்த லூட்ஸ் குடும்பத்திற்கு அது பேயின்
தட்டுதலாகத் தெரிந்தது.
பின்னாளில்
வீட்டை ஆய்வு செய்த காவல் துறை அதிகாரிகள், அது கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட கசிவால்
உண்டான பூஞ்சை என்று நிரூபித்தனர்.
படுகொலை
நடந்த நேரம் பற்றிய பயம் மனதின் ஆழத்தில் இருந்ததால், சிர்காடியன் ரிதம் காரணமாக ஜார்ஜின்
மூளை தினமும் அதே நேரத்திற்கு அவனுக்கு விழிப்பை ஏற்படுத்தியது.
ஆனால்,
இவ்வளவு உண்மைகளும் எப்போது வெளிவந்தன தெரியுமா?
கொலைகாரன்
ரொனால்ட் டிபேவோவின் வழக்கறிஞர் வில்லியம் வெபர் நீதிமன்றத்திற்கு வெளியே உண்மையை உடைத்தா
போதுதான்.
லூட்ஸ்
தம்பதியினரும், வழக்கறிஞர் வெபரும் சேர்ந்து பல பாட்டில் ஒயின்களைக் குடித்துக்கொண்டே,
கற்பனையாக உருவாக்கிய த்ரில்லர் கதைதான் இந்த அமிட்டிவில் பேய்!
அவர்கள்
இதை உருவாக்கக் காரணம் என்ன என்கிறீர்களா?
ரொனால்ட்
டிபேவோவை "மனநோயாளி, பேய் பிடித்தவன்" என்று நிரூபித்து தண்டனையிலிருந்து
காப்பாற்ற வழக்கறிஞருக்கு ஒரு கதை தேவைப்பட்டது. லூட்ஸ் தம்பதியினருக்கு வீட்டை வாங்கிய
கடனை அடைக்கப் பணம் தேவைப்பட்டது!
விளைவு?
'தி
அமிட்டிவில் ஹாரர்' என்ற புத்தகம் மில்லியன் கணக்கில் விற்றது. படங்கள் வரிசையாக வந்து
கோடிகளைக் குவித்தன.
அன்னபெல்
பொம்மை, என்பீல்ட் போல்டர்கீஸ்ட் வரிசையில் அமிட்டிவில்லும் ஒரு மாபெரும் மார்க்கெட்டிங்
ஜாலம். பிசினஸ் பிய்த்துக் கொண்டு போனது.
பயம்
என்பது மனிதனின் மிக பலவீனமான உணர்ச்சி. அதைச் சரியாகப் பேக் செய்து விற்றால், கொலையாளியின்
வீடு கூட கோடிகளில் லாபம் தரும் சுற்றுலாத் தலமாக மாறிவிடும் என்பதற்கு அமிட்டிவில்
சரியான உதாரணம்!
சுருக்கமாகச்
சொன்னால், அமிட்டிவில்லில் வாழ்ந்தது பேய் அல்ல; மனிதர்களின் பேராசை!
-
அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment