Showing posts with label ஆவிகளின் ஒளிவிலகல். Show all posts
Showing posts with label ஆவிகளின் ஒளிவிலகல். Show all posts

Saturday, 29 August 2026

ஆவிகளின் ஒளிவிலகல்

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் - 68

ஆவிகளின் ஒளிவிலகல்

காரின் கதவுகள் தாழ்ப்பாளிட்டுக்கொள்ள, பின்புறக் கண்ணாடியில் நெடுமாறனின் முகம் புன்னகைக்க, இளவழகனின் இதயத் துடிப்பு 140ஐத் தொட்டது.

மூளை 'பயம்' என்ற ரசாயனத்தை ரத்தத்தில் பாய்ச்சியது. ஆனால், இளவழகனின் இயற்பியல் பயிற்சி பெற்ற மூளை, பயத்தையும் தாண்டி யோசிக்கத் தொடங்கியது.

"இளவழகன்! என் டிரிக்ஸைக் கண்டுபிடி பாப்போம்!" குரல் மீண்டும் கேட்டது.

இளவழகன் மூச்சை ஆழ்ந்து இழுத்துவிட்டான். அவனது கை மெதுவாகத் தன் சட்டைப் பையில் இருந்த சிறிய லேசர் பாயிண்டரை நோக்கியும், லேப்டாப்பின் விசைப்பலகையை நோக்கியும் நகர்ந்தது.

அவன் கண்ணாடியை நேரடியாகப் பார்க்காமல், அதன் ஒளியியல் பிம்பத்தைக் கவனித்தான்.

''நெடுமாறனின் முகம். ஆனால் அதன் விளிம்புகளில் லேசான சிவப்பு மற்றும் நீல நிற விளிம்புப் பிறழ்ச்சி தெரிகிறது. நிஜ ஆவி என்றால் ஒளிவிலகல் எப்படி நிகழும்?''

இளவழகன் உரக்கச் சிரித்தான்.

"பிரமாதமான டிரிக் சுவாமிஜி! அல்லது சுவாமிஜியின் ஆட்களா?"

பின் சீட்டில் இருந்த உருவம் லேசாக அசைந்தது.

"நான் நெடுமாறன்டா!" குரல் கரகரத்தது.

"இல்லை!" இளவழகன் சட்டென்று லேசர் பாயிண்டரை ஆன் செய்து, பின் சீட்டை நோக்கி அடித்தான்.

லேசர் ஒளி பின் சீட்டின் குளிர் காற்றில் இருந்த பனிப்புகையின் மீது பட்டு, ஒரு முப்பரிமாணக் கூம்பாக விரிந்தது. அது சீட்டின் மீது படாமல், நடுவானில் மிதந்த ஒரு மெல்லிய, ஒளிப்புகும் ஹோலோகிராமிக் திரை மீது விழுந்தது.

"பிசிக்ஸ் டிரிக்!" இளவழகன் வேகமாகக் கத்தினான்.

"மிஸ்டர் சுவாமிஜி! நீங்கள் போகும்போது என் காரின் பின் சீட் தலைப்பகுதியில் ஒரு சிறிய மினியேச்சர் புரஜெக்டர் அப்புறம் ஒரு ஸ்பீக்கரைப் பொருத்திவிட்டுப் போயிருக்கிறீர்கள்தானே? காரின் ஏசியை புளூடூத் மூலம் ஹேக் செய்து, குளிர்ச்சியை அதிகப்படுத்தி, பெப்சி பாட்டிலில் அடைக்கப்பட்ட உலர் பனிக்கட்டியை காரின் பின் சீட்டின் அடியில் உருக வைத்திருக்கிறீர்கள்தானே? அது உருவாக்கிய புகையில்தான் இந்த முப்பரிமாண பிம்பம் தெரிகிறது இல்லையா?"

காரின் கதவுகள் இன்னும் பூட்டியே இருந்தன.

"சரி இளவழகன்! பிம்பத்தையும் ஒலியையும் கண்டுபிடிச்சிட்ட. ஆனா கார் கதவு எப்படிப் பூட்டுச்சு? எஞ்சின் ஏன் ஆப் ஆச்சு? அதுக்கும் பிசிக்ஸ் இருக்கா?" குரல் இப்போது பிராஜெக்டர் ஸ்பீக்கரில் இருந்து தெளிவாகக் கேட்டது.

"ஓ அதுவா?" இளவழகன் லேப்டாப்பில் ஒரு கமாண்டை டைப் செய்தான்.

"ஓ மை மிஸ்டர் சுவாமிஜி! என் கார் சாதாரண கார் இல்லை. இது டெஸ்லா பாணி ஸ்மார்ட் கார்! காரின் கம்ப்யூட்டரை யாரோ வெளியில் இருந்து மொபைல் ஆப் மூலமாக ஹேக் பண்ணியிருக்கீங்க. அதான் எஞ்சின் ஆப் ஆகி கதவு பூட்டிருச்சு. ஆனா நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க!"

"என்ன?"

"என் லேப்டாப் என் காரின் மெயின்பிரேமுடன் வைபை மூலம் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கு. நீங்க அனுப்பிய ஹேக்கிங் சிக்னலை என் லேப்டாப் பயர்வால் மூலம் பிளாக் பண்ணிடுச்சு. நான் இப்போ மெனுவல் ஓவர்ரைடு தர்றேன்!"

இளவழகன் லேப்டாப்பில் என்டரைத் தட்டினான்.

'கிளிக்!'

காரின் கதவுகள் திறந்துகொண்டன. எஞ்சின் மீண்டும் 'கர்ர்ர்' என்று கர்ஜித்துக்கொண்டு உயிர்பெற்றது. காரின் உள்புற விளக்குகள் பளிச்சென்று எறிந்தன.

பின் சீட்டில் இருந்த ஹோலோகிராம் பிம்பம் மறைந்தது. உலர்பனிப் புகை காரின் ஜன்னல் வழியே வெளியேறியது.

பின் சீட்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய பிராஜெக்டரும், ஸ்பீக்கரும், சுவாமிஜியின் ஆள் அதை இயக்கப் பயன்படுத்திய டிரான்ஸ்மிட்டரும் இளவழகனின் கைக்கு வந்தன.

இளவழகன் காரை மீண்டும் ஸ்டார்ட் செய்து, கியரை மாற்றி பெரியகொத்தூர் சாலையைக் கடந்து, இடது புறம் திரும்பி, கோட்டூர் சாலையில் எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்ட ஆரம்பித்தான்.

அமானுஷ்யம் என்பது நம் மூளைக்குள் இருக்கும் அறியாமையேயன்றி வேறில்லை. அறிவியலைச் சரியாகப் புரிந்து கொண்டால், அவை அனைத்தும் அறிவியல் ட்ரிக்தான் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

இளவழகனின் கார் இப்போது இருட்டைக் கிழித்துக் கொண்டு ஆவி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****