அமானுஷ்யத்தின் அட்ரஸ்
அட்ரஸ் - 67
கணினி காலத்துப் பேய்கள்
மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த ஒரு வெள்ளிக்கிழமை நள்ளிரவு.
பெரியகொத்தூரில் இருந்த அந்தப் பழைய பங்களாவின் முதல் தளத்தில்,
மெழுகுவர்த்தி வெளிச்சம் நடுங்கிக்கொண்டிருந்தது.
அறையின் நடுவே ஒரு பெரிய டேபிள். அதைச் சுற்றி மூவர்.
முதலாவதாக, கதிரேசன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். ஆறு மாதத்திற்கு
முன் விபத்தில் இறந்த தன் ஒரே மகன் நெடுமாறனின் ஆவியோடு பேசத் துடித்துக் கொண்டிருந்தார்.
இரண்டாவதாக, சுவாமிஜி அக்னீஸ்வரர். கழுத்து நிறைய ருத்ராட்சம்,
தாடி, கைகளில் பெரிய பெரிய மோதிரங்கள்.
மூன்றாவதாக, இளவழகன். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவன்,
ஆனால் கையில் எப்போதும் ஒரு லேப்டாப்பும், நக்கலும் இருக்கும். கதிரேசனின் அண்ணன் மகன்.
"சுவாமிஜி! நிஜமாவே என் பையன் வருவானா?" கதிரேசன்
குரல் நடுங்கியது.
"சந்தேகப்படாதீர்கள் கதிரேசன் அவர்களே! பிரபஞ்ச சக்திகளை
இந்த மெழுகுவர்த்திச் சுடரில் ஆவாஹனம் செய்திருக்கிறேன். நெடுமாறனின் ஆவி இந்த அறையில்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறது." சுவாமிஜி கண்ணை மூடி முணுமுணுத்தார்.
இளவழகன் தன் லேப்டாப்பைப் பார்த்தபடியே சிரித்தான். "சுவாமிஜி,
நீங்க கத்துவதைக் கொஞ்சம் மெதுவா கத்துனா நல்லா இருக்கும். ஏன்னா, உங்க ஷூவுக்கு அடியில
இருக்கிற அந்த புளூடூத் பிரஷர் பேடை நீங்க மிதிக்கும்போதுதான், டேபிளுக்கு அடியில இருக்கிற
மினியேச்சர் மோட்டார் அதிர்ந்து சத்தம் உண்டாக்குது. சவுண்ட் கொஞ்சம் அதிகமா வருது!"
சுவாமிஜியின் கண் சட்டென்று திறந்தது.
லேசான அதிர்ச்சி.
"என்னடா தம்பி விளையாடுறியா?" என்றார் கதிரேசன்.
"விளையாட்டு இல்ல சித்தப்பா!" இளவழகன் தன் பாக்கெட்டில்
இருந்து ஒரு சிறிய ஸ்பெக்ட்ரம் அனலைசரைக் காட்டினான்.
"அமைதியா இருங்க. இந்த சுவாமிஜி பண்ணுறது எல்லாமே பிசிக்ஸ்
டிரிக். அறையில திடீர்னு குளிர்ற மாதிரி இருக்கிறதுக்குக் காரணம், அவர் பின்னாடி மறைச்சு
வச்சிருக்கிற திரவ நைட்ரஜன் ஸ்ப்ரே. டேபிள் தானா ஆடுறதுக்குக் காரணம், மேஜை கால்களில்
பொருத்தப்பட்டிருக்கும் மின்காந்தச் சுருள்கள். அந்தச் சுவரில் தெரியுற நிழல். அது
வெறும் போர்ட்டபிள் புரொஜெக்டர் லேசர்!"
இளவழகன் லேப்டாப்பில் ஒரு பொத்தானை அழுத்த, அறையின் விளக்குகள்
பளிச்சென்று எரிந்தன.
சுவாமிஜியின் முகத்தில் வியர்வை அரும்பியது. இளவழகன் எழுந்து
போய், மேஜையின் அடியில் இருந்த கம்பிகளையும், சுவாமிஜியின் பாக்கெட்டில் இருந்த ரிமோட்டையும்
வெளியே எடுத்து மேஜை மேல் போட்டான்.
"சுவாமிஜி, ஆவி உலகத்தோடு பேசுறது இருக்கட்டும். முதல்ல
இந்த போர் டொன்ட்டி டிரிக்ஸை நிறுத்துங்க. சித்தப்பா, இவருக்கு நீங்க கொடுத்த ஐம்பதாயிரம்
ரூபாயை வாங்கிட்டு இவரை வெளியே அனுப்புங்க. ஆவியாவது, ஒண்ணாவது. எல்லாமே வெறும் மூடநம்பிக்கை!"
என்றான் இளவழகன் அலட்சியமாக.
சுவாமிஜி அமைதியாகத் தன் பையை எடுத்துக்கொண்டார். போகும்போது
இளவழகனைப் பார்த்து ஒரு மாதிரி சிரித்தார். "தம்பி! அறிவியல் எல்லாத்தையும் விளக்கிடும்னு
நினைக்கிறீங்க. நல்லது. ஆனா, சில கேள்விகளுக்குப் பதிலை அறிவியல் சொல்லாம இருக்குறதுதான்
மனித குலத்துக்கு நல்லது" என்று சொல்லிவிட்டுப் படியேறி இறங்கி மறைந்தார்.
கதிரேசன் ஏமாற்றத்துடன் தலைகுனிந்தார். இளவழகன் தன் லேப்டாப்பை
மூடிப் பையில் வைத்தான்.
"சரி சித்தப்பா! நான் கிளம்புறேன். மழை விட்டுருச்சு."
என்று சொல்லிவிட்டு, தன் காரை நோக்கி நடந்தான்.
அப்போது மணி நள்ளிரவு 1:15.
பெரியகொத்தூர் கிராமமே ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது.
கார் அமைதியாகக் கப்பி பெயர்ந்து, படுபாதாள பள்ளங்கள் நிறைந்த சாலையில் ஓடிக்கொண்டிருக்க,
இளவழகன் மியூசிக் பிளேயரைப் போட்டான். பாட்டுக்குப் பதிலாக வெறும் ஹிஸ்ஸ்ஸ் என்ற எலக்ட்ரானிக்
இரைச்சல் மட்டுமே வந்தது.
"ச்சைய் இது வேற!" என்று ப்ளேயரை ஆப் செய்யப் போனான்.
திடீரென்று காரின் ஏசி வெப்பநிலை தானாகக் குறையத் தொடங்கியது.
24°C... 18°C... 10°C... 0°C.
காருக்குள் இளவழகனின் மூச்சுக்காற்று பனியாக உறைந்து வெளியே
வந்தது.
இளவழகன் திடுக்கிட்டான். "என்ன இது? ஏசி கம்ப்ரஸர் கோளாறா?"
அவன் டேஷ்போர்டைத் தொடுவதற்குள், காரின் ஸ்டீயரிங் வீல் தானாக
இடப்பக்கம் திரும்பியது. கார் சாலையின் ஓரத்தில் சட்டென்று நின்று, எஞ்சின் ஆப் ஆனது.
இளவழகனுக்குள் முதன்முறையாக லேசான பயம் ஊடுருவியது. பாக்கெட்டில்
இருந்த ஸ்பெக்ட்ரம் அனலைசரை எடுத்தான். அதன் டிஜிட்டல் திரையில் மின்காந்த அலைகளின்
அளவு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டு எர்ரர் என்று காட்டியது.
"இட்ஸ் இம்பாசிபிள்! எந்தச் சாதனமும் இல்லாம இவ்வளவு பெரிய
மின்காந்தப் புலம் உருவாக முடியாது!" இளவழகன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
அப்போது, காரின் ரிவர் வியூ மிர்ரர் மெதுவாக இறங்கியது.
பின் சீட்டில் ஏதோ ஓர் உருவம் உட்கார்ந்திருப்பது போன்ற பாரம்.
கார் பின்னால் லேசாகத் தாழ்ந்தது.
இளவழகனின் முதுகுத்தண்டில் ஒரு குளிர்ந்த காற்று உரசிச் சென்றது.
காரின் பக்கவாட்டு அமைதிக்கு நடுவே, அவன் காதுக்கு மிக அருகில் ஒரு குரல் கேட்டது.
மிகவும் மெல்லிய, பனி படர்ந்த குரல்.
"இளவழகா! சுவாமிஜி சொன்ன டிரிக்ஸ் எல்லாம் கண்டுபிடிச்சியே.
இப்போ என் டிரிக்ஸைக் கண்டுபிடி பாப்போம்!"
இளவழகன் மெதுவாகத் தலையைத் திருப்பி பின் சீட்டைப் பார்த்தான்.
அங்கே...
ஆறு மாதங்களுக்கு முன் விபத்தில் சிதைந்து போன நெடுமாறனின்
முகம், மிகத் தெளிவாக, வெளிச்சத்தைக் கக்கியபடி புன்னகைத்துக் கொண்டிருந்தது.
காரின் நான்கு கதவுகளும் வெளியே இருந்து பூட்டிக்கொண்டன.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment