Monday, 24 August 2026

அறிவியலையே அமானுஷ்யங்களுக்குக் கேடயமாக்கிய வரலாறு!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 63

அறிவியலையே அமானுஷ்யங்களுக்குக் கேடயமாக்கிய வரலாறு!

அறிவியல் ரொம்பச் சுவாரஸ்யமானது. அதைவிடச் சுவாரஸ்யமானது, மனிதர்கள் அறிவியலைத் தங்கள் பயங்களுக்கும், ஆசைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எப்படிப் பயன்படக்கூடிய வாதங்களாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி என்பது, உலகம் அதுவரை கண்டிராத ஒரு மாபெரும் தொழில்நுட்பப் பாய்ச்சலுக்குள் மெல்லக் காலெடுத்து வைத்த காலம். மனித குலத்திற்குத் திடீரென்று பார்வை விரிவடைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுவரை மனிதன் தன் அறிவின் எல்லையாக எதை நினைத்துக் கொண்டிருந்தான் தெரியுமா?

"நான் கண்ணால் பார்ப்பதுதான் உலகம். என் காதால் கேட்பதுதான் உண்மை."

ஆனால், அந்தப் பெருமிதத்தை மிக அசாத்தியமாக உடைத்து நொறுக்கின அந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்!

1895 ஆம் ஆண்டு. ஜெர்மனியில் தன் ஆய்வகத்தில் உட்கார்ந்துகொண்டு, கேதோடு கதிர்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார் வில்ஹெல்ம் ராண்ட்ஜன். தற்செயலாக ஓர் அதிசயத்தைக் கண்டார். இருட்டறையில், ஒரு தடிமனான அட்டையைக் கூட ஊடுருவிச் சென்று, அங்கே இருந்த திரையில் ஒளி வீசியதுது ஒரு கதிர்!

அதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் எக்ஸ் கதிர் என்று பெயரிட்டார். தன் மனைவியின் கையை அந்தச் சோதனையில் வைத்தார். அடுத்த சில நிமிடங்களில், சதைகள் எல்லாம் மறைந்து, எலும்பும் கல்யாண மோதிரமும் மட்டும் அச்சு பிசகாமல் படமாக விழுந்தன. உலகமே ஸ்தம்பித்துப் போனது.

அதே காலகட்டம். 1890களின் மத்தியில் இத்தாலியில் மார்க்கோனியும், ஜெர்மனியில் ஹெர்ட்ஸும் ரேடியோ அலைகளைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். கம்பியே இல்லாமல், காற்றில் செய்திகள் பறந்தன. ஒரு பக்கத்தில் இருக்கும் பொத்தானை அழுத்தினால், நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் மணி அடித்தது!

அதுவரை மனிதனின் மூளைக்குப் பழகியிருந்த "தொட்டுப் பார்க்கும்" இயற்பியல் விதிகள் எல்லாம் தலைகீழாக மாறின.

மனிதனுக்கு ஒரே ஆச்சரியம்! அதைவிடப் பெரிய குழப்பம்!

திடீரென்று தன் கண்கள் தங்களுக்குப் பொய் சொல்கின்றன என்பதை உணர்ந்தவுடன், மனித மூளை சும்மா இருக்குமா? தனக்குச் சாதகமாக யோசிக்கத் தொடங்கியது.

"அடடா! கண்ணுக்குத் தெரியாத அலைகள் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, ஏன் கண்ணுக்குத் தெரியாத பேய்களும் ஆவிகளும் அதே காற்றில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது?"

அவ்வளவுதான்! ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஸ்பிரிச்சுவலிசம் எனும் ஆவி இயக்கம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 1880களில் சிறு தீயாக இருந்த இந்த இயக்கம், எக்ஸ்ரே மற்றும் ரேடியோ அலைகளின் வருகைக்குப் பின் ஒரு காட்டுத்தீயாக மாறியது.

அன்றைய மனிதர்களின் அப்போதைய லாஜிக்குகள் ரொம்பவே எளிமையானவை, ஆனால் ஆபத்தானவை.

எக்ஸ்ரே சுவரை ஊடுருவிப் பார்க்கிறது அல்லவா? அப்படியானால் ஆவிகளும் சுவரை ஊடுருவி வரும் என்பதில் என்ன சந்தேகம்? இது முதல் லாஜிக்.

ரேடியோ அலைகள் மூலம் கம்பியில்லாமல் தூரத்தில் இருப்பவருடன் பேச முடிகிறதே? அப்படியானால் தந்தி மிஷின் போல ஒரு கருவியைச் செய்து, செத்துப் போன தாத்தாவிடம் பேச முடியாதா என்ன? இது இரண்டாவது லாஜிக்.

காற்றில் அலைகள் செல்லும்போது நமக்குத் தெரியவில்லை, ஆனால் ரிசீவர் வைத்தவுடன் சத்தம் கேட்கிறது. அதேபோலத்தான் ஆவிகளும் காற்றில் இருக்கின்றன; ஒரு மீடியம் கிடைக்கும் போது ஆவிகள் பேசாதா என்ன? இது மூன்றாவது லாஜிக்.

கேட்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன இந்த லாஜிக்குகள்?

இப்படித்தான் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளைத் தங்களின் பழைய பயங்களுக்குச் சான்றாக மாற்றிக் கொண்டார்கள் அன்றைய மனிதர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஏதோ விவரமறியாத பொதுமக்கள் மட்டும் இதை நம்பவில்லை. அன்றைய தலைசிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், ஏன் சில அறிவியலாளர்கள் கூட இந்த மாயையில் விழுந்தார்கள்.

புகழ்பெற்ற எழுத்தாளர் சர் ஆர்தர் கோனன் டாய்ல் உலகிலேயே மிகச் சிறந்த தர்க்க அறிவும், பகுத்தறிவும் கொண்ட 'ஷெர்லாக் ஹோம்ஸ்' என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவர்! அவர் ஆவிகள் உலகத்தைப் பைத்தியக்காரத்தனமாக நம்பத் தொடங்கினார். தன் மகனும் சகோதரனும் போரில் இறந்த பிறகு, அவர்களின் ஆவியுடன் பேசுவதற்காகக் கூட்டங்கள் நடத்தினார். "எக்ஸ்ரே இருக்கும் போது ஆவிகள் இருக்க சாத்தியமுண்டு" என்பதுதான் அவரது பிரதான வாதமாக இருந்தது.

இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றவர் சர் வில்லியம் க்ரூக்ஸ். இவர் தான் எக்ஸ்ரே கண்டுபிடிப்புக்கு மூல காரணமான க்ரூக்ஸ் டியூபைக் கண்டுபிடித்தவர்! அவரே ஆவிகளுடன் பேசும் மீடியம் கூட்டங்களில் கலந்து கொண்டு, ஆவிகள் உண்மையிலேயே இருக்கின்றன என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.

திசைகாட்டி காந்த ஊசியை கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு புலம் திருப்புகிறது என்றால், அறையில் இருக்கும் ஆவியும் அதைத் திருப்பலாம்தானே? என்பதுதான் அன்றைய அறிஞர்களின் சயின்டிபிக் லாஜிக்.

தந்தி மிஷினில் சில மேம்பாடுகளைச் செய்த தாமஸ் ஆல்வா எடிசன் கூடத் தனது வாழ்நாளின் இறுதியில் "இறந்தவர்களுடன் பேசுவதற்கான ஒரு மின்னணு சாதனத்தை உருவாக்க முயல்கிறேன்." என்று பேட்டி கொடுத்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

ஆனால், இதில் ஒரு சிறிய, மிக நுட்பமான வித்தியாசம் இருந்தது. அன்றைய மக்கள் அதை வேண்டுமென்றே கவனிக்கத் தவறினார்கள் அல்லது கவனிக்க விரும்பவில்லை.

அது என்னவென்றால், எக்ஸ்ரே கண்ணுக்குத் தெரியாதுதான். ஆனால், அதன் விளைவு துல்லியமானது. நீங்கள் எத்தனை முறை எக்ஸ்ரே எடுத்தாலும், அது ஒரே மாதிரி எலும்பைத்தான் காட்டும். அதை புகைப்படத் தகடில் பதிவு செய்ய முடியும். எந்த ஆய்வகத்திலும் அதைத் திரும்பச் செய்து நிரூபிக்க முடியும்.

ரேடியோ அலைகளும் அப்படியே. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் சிக்னல் அனுப்பினால், உலகத்தில் எந்தக் மூலையில் இருக்கும் ரிசீவரும் அந்தச் சிக்னலைப் பிடிக்கும்.

ஆனால் ஆவிகள்?

அது மூட் இருக்கும்போது மட்டும் வரும்! வெளிச்சம் போட்டால் ஓடிவிடும்! கேமரா வைத்தல் வேலை செய்யாது! சந்தேகப்பட்டால் ஆவி கோபித்துக் கொண்டு பேசாது!

அறிவியல் என்பது தெரியாததைச் சோதித்து, நிரூபித்து, தெரிந்துகொள்ளும் பாதை. மனித மனமோ தெரியாத வெற்றிடத்தில் தனக்கு விருப்பமான பயங்களையும் ஆசைகளையும் நிரப்பும் பாத்திரம்.

ரேடியோ அலைகளும் எக்ஸ்ரேக்களும் மின் காந்த ஸ்பெக்ட்ரமின் இயற்பியல் பகுதிகள்.

ஆவிகள் என்பவை மனித விருப்பங்களின், மன மாயைகளின் மனோவியல் ஸ்பெக்ட்ரம்!

சரி, இதெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுடன் முடிந்துவிட்டதா என்றால், நிச்சயமாக இல்லை!

இன்றைக்கும் நாம் புதுப் புது தொழில்நுட்பங்கள் வரும்போதெல்லாம், நமது பழைய மூடநம்பிக்கைகளுக்குப் புதிய அறிவியல் சாயத்தைப் பூசிக் கொண்டுதானே இருக்கிறோம்?

தொழில்நுட்பங்கள் மாறுகின்றன. ஆனால் மனிதனின் அடிப்படை மனநிலை மாறவே இல்லை.

மனிதன் எப்போதும் தன் அஞ்ஞானத்தை மறைக்க, அன்றைய அதிநவீன அறிவியலையே அமானுஷ்யங்களுக்கு ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், எக்ஸ்ரேயும் ரேடியோ அலைகளும் மனிதனின் உடலையும் தொடர்பையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன. ஆனால் மனித மனமோ, அந்த அலைகளின் மீதேறித் தன் பழங்கால பேய்களுடனும் ஆவிகளுடனும் பயணம் செய்யவே ஆசைப்பட்டது.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment