அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 70
பேய் பொம்மை
ஆவணி மாதத்து வெயிலின் வெக்கையும், மழையை எதிர்பார்த்துப் புழுங்கிக்
கொண்டிருக்கும் ஏமாற்றமும் கலந்த இரவு நேரம். மின்விசிறி காற்றுக்குப் பதில் அனலை ஹால்
எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.
தமிழரசன் தன் மடிக்கணினியை மூட முயன்றபோது, கோவிந்த் கையில்
ஒரு பழைய துணிப் பொம்மையை வைத்து உருட்டிக்கொண்டிருந்தான். அது பிளாஸ்டிக் பொம்மையல்ல;
தையல்கள் பிரிந்த, செம்பட்டை தலைமுடி கொண்ட, கண்கள் மட்டும் சற்று விசித்திரமாகத் தைக்கப்பட்ட
ஒரு அமானுஷ்ய தன்மை கொண்ட பேய் பொம்மை.
"என்ன இது கோவிந்த்?" என்றான் தமிழரசன்.
"அன்னபெல், தமிழரசன். போன வாரம் மன்னார்குடி, அரிசிகடைச்
சந்தில் இருக்குற பழைய பேப்பர் கடையில் அஞ்சு ரூபாய்க்கு வாங்குனேன். ஆனா, இது சும்மா
பொம்மை இல்ல." கோவிந்த் குரலைத் தாழ்த்தினான். "இதுக்குள்ள ஓர் ஆவி இருக்கு!"
தமிழரசன் சலிப்புடன் கோவிந்தைப் பார்த்தான். "விஜயராமனோட
சேர்ந்து இந்த ஆவி பிடிக்கிற பழக்கம் உனக்கும் வந்துட்டு. கோவிந்த், 1970கள்ல அமெரிக்காவில்
எட், லோரேன் வாரன் தம்பதி பண்ணின அதே ஏமாற்று வேலை. ஆவி, பேய் எல்லாமே மனித மூளையோட
ஐடியாமோட்டார் விளைவுதான். இது ஒரு வெறும் பஞ்சு அடைச்ச துணி."
"அப்படியில்லை தமிழரசன்! நேத்து நைட் இதை டேபிள் மேல வச்சுட்டுத்
தூங்கினேன். காலையில பாத்தா என் கட்டிலுக்கு அடியில கிடக்கு. பக்கத்துல 'எனக்கு பசிக்குது'ன்னு தமிழ்ல ஒரு பேப்பர்
குறிப்பு!" கோவிந்தின் முகத்தில் லேசான வேர்வை.
தமிழரசன் புன்னகைத்தான். "நியூட்டனின் முதல் விதிப்படி
புறவிசை இல்லாமல் ஒரு பொருள் நகர முடியாது. நீ தூக்கத்துல நடக்குற ஆள் கோவிந்த். சரி,
உன் திருப்திக்கு ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணுவோம்."
தமிழரசன் அந்தப் பொம்மையை ஹாலில் இருந்த ஒரு மர நாற்காலியில்
அமர வைத்தான். அதைக் சுற்றி மெல்லிய லேசர் டிடெக்டர் அலாரத்தைப் பொருத்தினான்.
"இனி இந்த பொம்மை ஒரு மைக்ரோ மீட்டர் நகர்ந்தாலும் அலாரம் அடிக்கும். அறிவியல்
பொய் சொல்லாது."
இரவு 1:15.
திடீரென வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஹாலில் இருந்து
மெல்லிய அலாரம் ஒலி எழுப்பியது.
கோவிந்த் பாய்ந்து எழுந்து தமிழரசனின் தோளைப் பிடித்தான்.
"தமிழரசன்! அலாரம் அடிக்குது!"
இருவரும் எமர்ஜென்ஸி லைட்டுடன் ஹாலுக்கு வந்தார்கள். லேசர்
அலைவரிசை துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாற்காலியில் பொம்மை இல்லை!
"பாத்தியா! நான் சொன்னேன்ல!" கோவிந்த் நடுங்கினான்.
தமிழரசன் எமர்ஜென்ஸி லைட்டின் வெளிச்சத்தை நாற்காலியின் கீழே
அடித்தான். பொம்மை அங்கே தலைகீழாகக் கிடந்தது. தமிழரசன் அதை உற்றுப் பார்த்தான். பொம்மையின்
துணி தையலில் ஒரு சிறிய இரும்பு அதிர்வுச் சில்லு மற்றும் ரிமோட் கண்ட்ரோல் ரிசீவர்
ஒளித்து வைக்கப்பட்டிருந்தது!
"கோவிந்த், இது ஆவியும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை.
5ஜி ரிமோட் சிப் வச்சு உன்னை யாரோ ஏமாத்துறாங்க." என்று தமிழரசன் சொல்லி முடிப்பதற்குள்,
அவர்களது மொபைல் போன்கள் இரண்டிலும் ஒரே நேரத்தில் ஒரு மெசேஜ் வந்தது.
அனுப்பியவர் அன்னபெல்.
மெசேஜைப் படித்தான் தமிழரசன். "சிப் இருப்பது உண்மைதான்
தமிழரசன். ஆனால், அந்தச் சிப்பை அங்கே வைத்த ஆள் போன வாரமே ஒரு கார் விபத்தில் இறந்து
விட்டான்!"
அடுத்த நொடி. வீட்டின் மின்சாரம் மீண்டும் வந்தது. நாற்காலியில்
கிடந்த பொம்மை, மெதுவாகத் தன் தலையை 180 டிகிரி திருப்பி, தமிழரசனைப் பார்த்து பகபகவெனச்
சிரித்தது!
தமிழரசனின் கையில் இருந்த எமர்ஜென்ஸி லைட் கீழே விழுந்து நொறுங்கியது.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment