அமானுஷ்யத்தின் அட்ரஸ்
அட்ரஸ் – 69
இறந்த பிறகும் ஏமாற்றாத ஒரே மனிதன்
பேய்கள்
இருக்கிறதா இல்லையா என்பது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்ட இன்று கூட விவாதத்திற்குரிய
விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால், இருக்கிறது என்று சொல்லி கல்லா கட்டிய கூட்டத்தை
1920களில் ஒரு மனிதர் புரட்டி எடுத்தார்.
அந்த
மனிதரின் பெயர் ஹாரி ஹூடினி.
உலகப்
புகழ்பெற்ற மாயாஜாலக்காரர்.
கைகளில்
விலங்கு மாட்டி, பூட்டிய இரும்புப் பெட்டிக்குள் போட்டு, சமுத்திரத்தின் அடியில் தூக்கிப்
போட்டாலும், அடுத்த ஐந்தாவது நிமிடம் கம்பீரமாக வெளியே வந்து சிரிக்கும் மேஜிக் சூப்பர்
ஸ்டார்.
ஹூடினிக்கு
அறிவியல் மீது பெரிய பித்து இருந்தது. ஆனால் அதைவிட பெரிய ரணம் ஒன்று அவருக்குள் இருந்தது.
அது என்னவென்றால், அவர் தாய் சிசிலியாவின் மறைவு.
அக்காலத்தில்
லண்டனிலும் நியூயார்க்கிலும் ஸ்பிரிச்சுவாலிசம் கொடிகட்டிப் பறந்தது.
"உங்கள்
செத்துப் போன தாத்தாவிடம் பேச வேண்டுமா? 5 டாலர் கொடுங்கள், கூப்பிடுகிறேன்" என்று
மூலைக்கு மூலை போலி மீடியம்கள் கடை விரித்திருந்தார்கள்.
தாயின்
பிரிவால் துயருற்ற ஹூடினியும், "உண்மையிலேயே ஆவிகளோடு பேச முடியுமா?" என்ற
ஏக்கத்தில் இந்த மீடியம்களைத் தேடிப் போனார்.
போன
இடத்தில் அவருக்குக் கிடைத்ததெல்லாம் ஏமாற்றம்.
இருட்டு
அறையில் டேபிள் ஆடுவது, காற்றில் மிதக்கும் மணி, சுவரில் தட்டும் ஓசை என இவை அனைத்துமே
மிகச் சாதாரணமான, அவர் மேடையில் செய்யும் மேஜிக் டிரிக்ஸ்கள்தான் என்பதை ஒரு நொடியில்
கண்டுபிடித்தார்.
தாயின்
துயரத்தை வியாபாரமாக்கிய அந்தப் போலி கும்பல் மீது ஹூடினிக்கு அளவுகடந்த கோபம் வந்தது.
விளைவு?
ஹூடினி
டிரான்ஸ்பார்ம் ஆனார். மேஜிக் ஷோக்களைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு, போலி ஆவி நிபுணர்களை
அம்பலப்படுத்தும் புதிய வேட்டையில் இறங்கினார்.
அவரது
வேட்டை ஸ்டைலே தனி.
தாடி
வைத்து, வேற்று உடையில், சாதாரண ஆளாக உருமாறிக் கொண்டு ஆவி அழைக்கும் இருட்டு அறைகளுக்குள்
நுழைவார். அவர்கள் டேபிளைத் தட்டும் போது, "லைட்டைப் போடு!" என்று கத்துவார்.
பிறகு
அங்கே என்ன நடக்கும்?
மீடியம்கள்
காலின் கட்டைவிரலால் டேபிளைத் தட்டுவது, ரப்பர் பூட்ஸ் வைத்து மேசையை உயர்த்துவது,
மெல்லிய நூலில் மணிகளைக் கட்டுவது என அவர்களின் அனைத்து தில்லுமுல்லுகளையும் அணுவணுவாகப்
பிடித்து, செய்தியாளர்களை வைத்து அம்பலப்படுத்துவார்.
இதில்
உச்சக்கட்ட காமெடி என்னவென்றால், ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிய பிரபல எழுத்தாளர் சர்
ஆர்தர் கோனன் டாய்ல், ஹூடினியின் நெருங்கிய நண்பர். டாய்ல் ஆவி உலகத்தை தீவிரமாக நம்பியவர்.
டாய்ல்
ஹூடினியிடம், "ஹூடினி, நீ மேடையில் செய்யும் தப்பியோடும் வித்தைகள் சாதாரண மேஜிக்
இல்லை. உனக்கு உண்மையிலேயே ஏதோ ஆவி உலகம் தந்த சக்தி இருக்கிறது. அதை மறைக்கத்தான்
நீ மற்ற மீடியம்களைப் போலி என்கிறாய்!" என்று சீரியஸாக வாதித்தார்.
ஹூடினி
தலையில் அடித்துக் கொண்டார். "யோவ் டாய்ல்! நான் செய்வதெல்லாம் வெறும் கைச்சலக்கம்,
அறிவியல், பிஸிக்ஸ்! எந்த ஆவியும் எனக்கு உதவவில்லை!" என்று கத்தியும் டாய்ல்
நம்பவே இல்லை.
அறிவியலை
எழுதும் எழுத்தாளர் மூடநம்பிக்கையில் மூழ்கிப்போக, மேஜிக் செய்யும் மாயாஜாலக்காரர்
அறிவியலின் பக்கம் நின்ற விசித்திர நாடகம் அது!
அமெரிக்க
நாடாளுமன்றம் வரை சென்று, இந்த போலி மீடியம்களைத் தடை செய்ய வேண்டும் என்று சட்டம்
இயற்றப் போராடினார் ஹூடினி.
அது
மட்டுமல்ல, அவர் இறந்தபோதும் ஓர் இறுதிப் பரிசோதனையைச் செய்து விட்டுப்போனார். தன்
மனைவி பெஸ்ஸிடம் ஒர் இரகசியக் குறியீட்டு வார்த்தையைச் சொல்லிவிட்டு, "நான் இறந்த
பிறகு எவனாவது என் ஆவியைக் கூப்பிடுவதாகச் சொன்னால், அவனிடம் இந்த வார்த்தையைச் சொல்லச்
சொல். அப்படிச் சொன்னால் மட்டுமே அது என் ஆவி. இல்லையென்றால், அவன் ஏமாற்றுக்காரன்!"
என்றார்.
ஹூடினி
இறந்து பல ஆண்டுகள் வரை பல மீடியம்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் ஒருவராலும் அந்த
இரகசிய வார்த்தையைச் சொல்ல முடியவில்லை.
இறந்த
பிறகும் கூட, போலி ஆவி உலகத்தின் முகத்திரையைக் கிழித்து ஜெயித்துக் காட்டினார் ஹூடினி!
செத்தும்
கொடுத்தான் சீதக்காதி என்பது போல, செத்தும் நிரூபித்தார் ஹூடினி!
ஆக,
இனி உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம், ஆவி இருக்கிறதா இல்லையா என்று.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment