அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் - 64
கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸ்
"நீங்கதான் விஜயராமன் சொல்லி வந்திருக்கிற…"
ஆம் என்பது போல அவன் தலையசைத்தான்.
"சார், இது கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸ். இதோட வரலாறு…"
"வரலாறு வேணாம் கணேசன். ஆவி, பிசாசு, தலை இல்லாத பொண்ணு.
இதெல்லாம் நான் ஆசிரியர் பயிற்சி படிக்கிற காலத்திலேயே பாக்கெட் நாவல்கள்ல படிச்சுட்டேன்.
பண்ணை வீட்டோட சாவி கொடு."
கணேசன் நடுங்கும் கையால் சாவியைக் கொடுத்தான். "சார்,
இதுவரைக்கும் யாரும் இந்த கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு ராத்திரி முழுசா இருந்தது இல்ல. ராத்திரிக்கு
உள்ளே போனா காலையில பொணம்தான்."
"நாளைக்கு எல்லாமே மாறி இருக்கும். நான்தான் ஆசிரியர்
தமிழரசன். பேய், பிசாசையெல்லாம் என் வீட்டுல சோதனைக் குழாய்ல அடைச்சு வச்சிருக்கேன்,"
என்று சொல்லி சிரித்தான். அந்த சிரிப்பு இருட்டில் பயங்கரமாக எதிரொலித்தது.
தமிழரசன் உள்ளே சென்றான். பழைய பர்னிச்சர், ஒட்டடை படிந்த சுவர்கள்,
காற்றில் ஆடும் ஜன்னல்கள். எல்லாம் ஒரு த்ரில்லர் படத்துக்கான செட்டிங் போல இருந்தன.
தமிழரசன் பையைக் கீழே வைத்தான். உள்ளிருந்து கேமராக்கள், வெப்பநிலையை அளக்கும் கருவிகள்,
இன்னும் பல விசித்திரமான எலக்ட்ரானிக் சாதனங்கள் வெளியே வந்தன.
"இனி ஆரம்பிக்கட்டும் அந்தப் பேய் படம்!" என்று தனக்குத்தானே
சொல்லிக் கொண்டு கருவிகளை செட் செய்தான். வேலை முடிந்ததும் பயணக் களைப்பில் லேசாகக்
கண்ணயர்ந்தான்.
மணி பன்னிரண்டை நெருங்கியது.
திடீரென, அறையின் வெப்பநிலை குறையத் தொடங்கியது. கருவிகள் பீப்
என்று ஒலியெழுப்பின. தமிழரசன் டக்கென்று விழித்துக் கொண்டு கேமராவைப் பார்த்தான். "ஆவி,
பிசாசுன்னு ஆராய்ச்சி பண்ற இந்த விஜயராமனால ராத்திரி முழுக்க தூங்க முடியாம வேலை பார்க்க
வேண்டியிருக்கே! இவனோடு ஆராய்ச்சி என்றைக்கு முடியுறதோ? நான் என்றைக்கு நிம்மதியா தூங்குறதோ?"
என்று முணுமுணுத்துக் கொண்டான்.
ஒரு மூலையில், மங்கலான உருவம் தெரிந்தது.
ஒரு பெண் உருவம்.
பழைய பாணி பேய்களுக்கே உரிய அக்மார்க் வெள்ளைப் புடவை அணிந்திருந்தது.
தமிழரசன் சிரித்தான். "ஆகா அருமை! நல்ல செய்நேர்த்தி.
ஆனா என் கருவிகள ஏமாத்த முடியாது."
அவன் ஒரு லேசர் பாயிண்டரை எடுத்தான். அந்த உருவத்தின் மேல்
அடித்தான். லேசர் ஒளி அந்த உருவத்தின் வழியாக ஊடுருவிச் சென்றது.
தமிழரசனின் சிரிப்பு சட்டென்று நின்றது.
"இது ஏமாத்து வேலை மாதிரி தெரியல." என்று முணுமுணுத்தான்.
அடுத்த நிமிடம், அறையின் விளக்குகள் அணைந்தன.
இருள் சூழ்ந்தது.
தமிழரசனின் கருவிகள் அனைத்தும் செயலிழந்தன.
"யார்? யார் அங்கே?" தமிழரசனின் குரலில் பயம் தெரிந்தது.
இருளில் ஒரு கை அவன் தோளைத் தொட்டது. அது ஜில்லிட்டு இருந்தது.
"என் கதையக் கேளு!" ஒரு குரல் கேட்டது.
அது பெண்ணின் குரல். தீனமாக, ஆனால் தெளிவாக இருந்தது.
தமிழரசன் திரும்பினான். அந்தப் பெண் உருவம் இப்போது அவன் முன்னால்
நின்றது. அதன் கண்கள் இருட்டில் மின்னின.
"நான் குப்பாயி. இந்த கெஸ்ட் ஹவுஸ்ல வேலை செஞ்சேன். இந்த
ஊர் பெரிய மனுஷன்..." அவள் பேசப் பேச, அறைக்குள் குளிர்ந்த காற்று வீசியது.
தமிழரசனின் உடல் நடுங்கியது.
அவள் தன் கதையைச் சொன்னாள். துரோகம், பழிவாங்கல், மரணம் என
எல்லாமே அந்த பண்ணை வீட்டின் அவனிருந்த அறையில் நடந்திருந்தது.
"எனக்கு நீதி வேணும். என் ஆவி இங்கேயே அலைஞ்சுட்டு இருக்கு."
தமிழரசன் அப்படியே உறைந்து போயிருந்தான். அவனால் பேச முடியவில்லை.
நகர முடியவில்லை.
காலை வெளிச்சம் வந்தது.
கணேசன் அறைக் கதவைத் திறந்தான்.
தமிழரசன் தரையில் மயங்கிக் கிடந்தான். அவனது கருவிகள் சிதறிக்
கிடந்தன.
கணேசன் அவனை எழுப்பினான். "சார், என்ன ஆச்சு? பேய் ஏதாவது
வந்துச்சா?"
தமிழரசன் மெதுவாகக் கண் திறந்தான். "பேய்... குப்பாயி..."
என்று முணுமுணுத்தான்.
கணேசன் குழப்பத்துடன் பார்த்தான். "நான்தான் சொன்னேன்ல
சார்!"
தமிழரசன் குப்பாயியின் கதையைச் சொன்னான். கணேசன் அதிர்ச்சியுடன்
கேட்டான்.
"ஆனா, நீங்க உசுரோட இருக்குறதுதான் ஆச்சரியமா இருக்கு.
வெளியே போஸ்ட் மார்டம் பண்றதுக்கு போலீஸ் கூட ரெடியா இருக்கு!"
தமிழரசன் அதிர்ந்தான். "அடப் பாவிகளா? ஒரு மனுஷனை உள்ளே
அனுப்பிச்சிட்டு மறுநாள் பாடை கட்டுற வரைக்குமாடா தயாரா இருப்பீங்க?"
கணேசன் சிரித்தான். "சார், நீங்களாத்தான் விருப்பப்பட்டு
ஏதோ ரிசர்ச் பண்றேன்னு உள்ளே வந்தீங்க. சரி நீங்களாவது ஏதாச்சும் கண்டுபிடிப்பீங்கன்னு
பார்த்தா, நைட்டு பூரா நாலு புல்லை ஏத்துனவன் மயங்கிக் கிடக்குறாப்புல மயங்கிக் கிடக்குறீங்க."
அதற்கு மேல் கணேசன் பேசுவதைக் கேட்கப் பொறுமையில்லாமல், தமிழரசன்
தன் கருவிகளைப் பார்த்தான். கேமரா பதிவுகள் அனைத்திலும், அந்த உருவம் தெளிவாகத் தெரிந்தது.
"கனவா?" தமிழரசன் நினைத்துக் கொண்டான். "ஆனால்,
இந்தக் கருவிகள் பொய் சொல்லாதே!"
"சார்! இந்த உண்மையை வெளியே சொல்லுங்க. உலகத்துக்குத்
தெரியட்டும்." என்றான் கணேசன்.
அவன் கள்ளிக்காடு கெஸ்ட் ஹவுஸை விட்டு வெளியேறினான். அவனது
மனதிற்குள் அந்தப் பெண் உருவத்தின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
பேய் அதுவாக வந்து கேமராவுக்குள் அகப்பட்டுக் கொண்டது அவனுக்கு
ஆச்சரியமாக இருந்தது. இப்படி எந்தப் பேய் வந்து அதுவாக வாண்டட் ஆக மாட்டிக் கொள்ளும்
என்று யோசனையாக இருந்தது. இதை அப்படியோ ஷார்ட்ஸாகவோ, ரீல்ஸாகவோ போட்டால் வியூஸ் மில்லியனில்
அல்ல பில்லியன் டிரில்லயனில் பிய்த்துக் கொள்ளும்.
ஒருவேளை ஓவர் நைட்டில் பாப்புலர் ஆக ஆசைப்படும் பேயாக அது இருக்குமோ
என்ற சந்தேகம் வேறு அவனை வாட்டியது.
அதுமட்டுமில்லாமல், இதை வெளியே சொன்னால் சுந்தர் சியோ ராகவா
லாரன்ஸோ அடுத்த படத்திற்கான ஸ்கிரீன் ப்ளே பண்ணி விடுவார்களோ என்ற பயமும் இருந்தது.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment