Tuesday, 18 August 2026

உலகின் மிகக் கெட்ட மனிதன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 56

உலகின் மிகக் கெட்ட மனிதன்!

அலெஸ்டர் குரோலி  1900களின் தொடக்கத்தில் உலகம் கண்ட மிக விசித்திரமான, சர்ச்சைக்குரிய மனிதன். "உலகின் மிகக் கெட்ட மனிதன்" என்று அன்றைய ஆங்கிலேயப் பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்டவன். இவர் உருவாக்கிய 'தெலேமா'  கோட்பாடும், அதற்கு அவன் பயன்படுத்திய பாலியல் தந்திர முறைகளும் இன்றளவும் அமானுஷ்ய வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்.

1904 ஆம் ஆண்டு, கெய்ரோ நகரில் உள்ள ஒரு ஹோட்டல் அறை. வெளியே எகிப்தியக் காற்று வீசிக்கொண்டிருக்க, உள்ளே தீவிரமான தியான நிலையில் உட்கார்ந்திருந்த அலெஸ்டர் குரோலி அமானுஷ்யக் குரலில் சொன்ன விஷயங்கள்தான் பின்னாளில் 'தி புக் ஆப் தி லா'  என்ற உலகப் புகழ்பெற்ற நூலானது. அங்கிருந்துதான் பிறந்தது 'தெலேமா'.

கிரேக்க மொழியில் 'தெலேமா' என்றால் விருப்பம் என்று பொருள். குரோலி சொன்ன ஒரே தர்மம் இதுதான், "உனக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்! அதுவே உனக்கான விதி."

கேட்பதற்கு மிக எளிமையாகவும், கொஞ்சம் ஆபத்தான சுதந்திரமாகவும் இருக்கிறதல்லவா? அதுதான் குரோலியின் ஸ்டைல்.

ஆன்மீகத்தையும் அமானுஷ்யத்தையும் அடைவதற்குப் பழங்காலத்தில் பல வழிகள் இருந்தன. தவம், தியானம், சடங்குகள், ரசாயனப் பரிசோதனைகள். ஆனால் குரோலி யோசித்தது வேறு வழி.

மனித உடலின் உச்சகட்ட ஆற்றல் மற்றும் உணர்ச்சிப் பெருக்கு எப்போது நிகழ்கிறது? என்று யோசித்த குரோலி அது பாலியல் உறவின் போது மட்டுமே எனக் கருதிக் கொண்டான்.

பாலியல் உறவின் போது உருவாகும் அந்த மகத்தான மனக் குவியலையும், ஆற்றலையும், சாதாரணமான உடல் விருப்பங்களுக்குப் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட இலக்கை அல்லது அமானுஷ்ய சக்தியை நோக்கித் திருப்ப முடியும் என்பதுதான் குரோலியின் வாதம். அதுதான் அவன் குறிப்பிடும் பாலியல் தந்திரம்.

இது தந்திர சாஸ்திரமா என்றால், 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். எகிப்திய சடங்குகள், மேலைநாட்டு அமானுஷ்ய முறைகள் மற்றும் இந்தியாவின் 'தந்திரா'  கோட்பாடுகள் ஆகியவற்றின் கலவைதான் இது.

இதன் நோக்கம் என்று பார்த்தால், மனிதனின் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் சுய விருப்பத்தை விழிப்படையச் செய்து, பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்புகொள்ளச் செய்வது. நீங்கள் அமானுஷ்யத்தின் அட்ரஸ் தொடரைத் தொடர்ந்து படிப்பவராக இருந்தால், இதெல்லாம் சுத்த ஹம்பக் என்பது இந்நேரம் உங்களுக்குச் சொல்லாமலே புரிந்திருக்கும்.

அது சரி, குரோலி ஏன் இப்படி மாறினான்?

இங்கிலாந்தின் பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த குரோலி, சாதாரண வாழ்க்கையை வெறுத்தான். போதைப்பொருள் பயன்பாடும், இரகசிய அமைப்புகளில் பங்கேற்பும் குரோலியைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தன.  அதன் பிறகு இத்தாலியில் அவன் அமைத்த செபாலு அபே ஆசிரமம் என அவன் தொட்டதெல்லாம் சர்ச்சையானது.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், குரோலி செய்தது உளவியல் சார்ந்த ஓர் அமானுஷ்ய விளையாட்டு. மனிதனின் ஆழ்மன ஆற்றலை வெளிக்கொண்டுவர அவன் பாலியல் மற்றும் சடங்குகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினான்.

சுருக்கமாகச் சொன்னால், அலெஸ்டர் குரோலி என்பவன் தன் காலத்திற்கு மிகவும் முந்திய, கட்டற்ற சுதந்திரத்தை விரும்பிய, சற்று அதித விலகல் கொண்ட ஓர் அமானுஷ்ய மனிதன்.

நவீன உளவியல் ரீதியாகப் பார்த்தால், குரோலி செய்தது என்பது, மனிதனின் ஆழ்மன உந்துதலை ஒரு குறிப்பிட்ட எண்ணத்தின் மீது தீவிரமாகக் குவித்து, அதை நிறைவேற்ற முயன்ற ஒரு மைண்ட் கேம். ஆனால், அன்றைய 1900களின் சமூகத்திற்கு இது பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் தந்ததால் அவன் "சாத்தானின் அடியாள்" என்றும் முத்திரை குத்தப்பட்டான்.

ஒரு தனிமனிதன் நினைத்தாலும் அயோக்கியத்தனங்களை அமானுஷ்யங்கள் என்ற பெயரில் அரங்கேற்ற முடியும் என்பதற்கு அலெஸ்டர் குரோலி ஒரு மகத்தான வரலாற்று உதாரணம்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment