அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 43
தாத்தாவின் ஆவியும் ஐந்து பவுன் சங்கிலியும்!
இரவு
9:30.
மன்னார்குடி.
வடக்கு
கோபுர வாசல்.
அய்யனார்
கோயில் சந்து.
வீட்டு
எண் 100/108.
அந்தக்
காலத்து மச்சு வீட்டின் பெரிய ஹால்.
நடுவில்
ஒரு பெரிய தேக்குமர ரவுண்ட் டேபிள். அதைச் சுற்றி நான்கு நாற்காலிகள். தமிழரசன், அவன்
மனைவி ஜெயந்தி, அவனது ஆசிரியர் நண்பர் ஜூலியஸ். அப்புறம் மாந்திரீக ரத்னா ராகவன்.
மேஜை
நடுவில் இரண்டு சிம்னி விளக்குகள்.
"தம்பி
தமிழரசன், பேன் ஆப் பண்ணிடு," என்றார் ராகவன்.
"லைட்
ஆப் பண்றது சரி. மன்னார்குடி கத்தரி வெயிலுக்கு மின்விசிறியையும் நிறுத்தினால் ஆவி
வருதோ இல்லையோ, எனக்கு வேர்க்குரு கண்டிப்பாக வந்துடும் ஐயா," என்றான் தமிழரசன்,
ஸ்விட்சை ஆப் செய்தபடி.
"சீரியஸா
இருங்க. காமெடி பண்ணாதீங்க." ஜெயந்தி தமிழரசனைப் பார்த்து முறைத்தாள். "நம்ம
தாத்தா கடைசியா அந்த அஞ்சு பவுன் நகையை எங்கே வச்சார்னு தெரிஞ்சாகணும்."
தமிழரசனுக்கு
இந்த இந்த மந்திரம், மாந்த்ரீகம், பேய், பிசாசு மேட்டரில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை
கிடையாது. ஜெயந்தியின் பிடிவாதத்தால் வேறு வழியின்றி சம்மதித்திருந்தான்.
"சரி.
எல்லாரும் கைகளைக் கோத்துக்கோங்க. கட்டைவிரல் தொட்டுக்கிட்டு இருக்கணும்," ராகவன்
குரலைத் தணித்து, "ஆவியே வருக.. மறைந்த மாரியப்பனாரே வருக." என்று முணுமுணுத்தார்.
அறை
கொஞ்சம் இருட்டானது போலத் தோன்றியது.
சிம்னி
விளக்கின் சுடர் காற்றில்லாமல் நிலையாக எரிந்தது.
அமைதி.
தெருவில்
ஒரு நாய் குரைத்தது.
தூரத்தில்
ராஜகோபாலசுவாமி கோயில் யானை செங்கமலம் பிளிறும் சத்தம் லேசாகக் கேட்டது.
"மாரியப்பனாரே
நீங்க இங்க வந்திருந்தா இந்த மேஜையை ஒரு தடவை தட்டுங்க.." என்றார் ராகவன்.
திடீரென்று,
டக்!
ஜெயந்தி
திடுக்கிட்டாள். "என்னங்க கேட்டதா?"
"மாரியப்பனாரே,
அந்த நகை மருதவனத்துல பழைய வீட்டுல இருக்கா?"
டக்!
டக்!
இரண்டு
தட்டு. அப்படியென்றால். இல்லை.
"அப்போ
இந்த அய்யனார் கோயில் சந்து வீட்டுலதான் இருக்கா?"
டக்!
ஒரு
தட்டு. அப்படியென்றால் ஆம்!.
"விடை
கிடைச்சிருச்சு!" ராகவன் பரவசமானார்.
தமிழரசன்
சடாரென்று எழுந்து போய் ஹால் லைட்டைப் போட்டான். ஒளி பளிச்சென்று அடித்தது. மேஜைக்கு
அடியில் குனிந்து பார்த்தான். அங்கே அவனுடைய மகன் கபிலன், கையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்கேலுடன்
உட்கார்ந்திருந்தான்.
"டேய்
கபிலா! அங்கே என்னடா பண்ற?" என்றாள் ஜெயந்தி.
"அம்மா.
நீங்க கொள்ளு தாத்தாகிட்ட கேள்வி கேட்கும் போதெல்லாம், அங்கிள் ராகவன் தன் காலால் மேஜையை
முட்டுறாரு. எனக்குப் போர் அடிச்சுது, அதான் நான் ஸ்கேலால கீழ தட்டுனேன்," என்றான்
கபிலன் வெகுளித்தனமாக.
ராகவன்
திருதிருவென விழித்தார். "அது அறியாமலேயே தசை இயங்குற எபெக்ட்."
தமிழரசன்
சிரித்தான். "போலியான ஆவி ஆட்டத்தைக் கண்டுபிடிச்சாச்சு. ராகவன் ஐயா! நீங்க கிளம்புங்க.
ஜெயந்தி! தாத்தா நகை எங்கேன்னு தெரியலன்னாலும் பரவாயில்லை, இந்தச் சாமிடியாருக்குக்
கொடுக்க வேண்டிய ஐயாயிரம் தப்பித்தது!"
ராகவன்
அவசர அவசரமாகப் பையை எடுத்துக்கொண்டு ஓடாத குறையாக வெளியேறினார். "இந்த ராத்திரியில
போட்டு இப்படிப் பாடாய்ப் படுத்திட்டீங்களப்பா" என்றபடி ஆசிரியர் ஜூலியசும் சிரித்தபடி
விடைபெற்றார்.
*
நள்ளிரவு
12:00 மணி.
கபிலன்
நன்றாகத் தூங்கி விட்டான். ஜெயந்தி அரைத் தூக்கத்தில்.
திடீரென
விழித்து எழுந்த தமிழரசன் ஹாலில் இருந்த மேஜையை ஓரமாகத் தள்ள முயன்றான்.
"ஜெயந்தி!
இந்த மேஜை ரொம்ப எடை அதிகமாக இருக்கு." என்றபடி மேஜையின் அடியில் இருந்த பிளாஸ்டிக்
ஸ்கேலை எடுத்தான்.
திடீரென்று,
டக்! டக்! டக்!
தமிழரசன்
உறைந்துபோனான். சட்டென்று பாய்ந்து ஹால் லைட்டைப் போட்டான். ஜெயந்தியின் அரைத் தூக்கம்
கலைந்து முழு விழிப்புக்கு வந்து விட்டாள்.
ஆனால்,
காலியான அந்தத் தேக்குமர மேஜை தானாக மூன்று முறை பலமாகத் தட்டியது.
ஜெயந்தி
பயத்தில் தமிழரசனைப் பிடித்துக் கொண்டாள். "என்னங்க இது?"
மேஜையின்
நடுவில் இருந்த மரப் பலகை லேசாக விலகி, உள்ளே இருந்து ஒரு பழைய டைரியும், அதனுடன் ஒரு
சிறிய தங்கச் சங்கிலியும் வெளியே வந்தன.
அதே
நேரம். அந்தத் தேக்கு மர மேசையின் ஓரத்தில் பெட்டி போன்ற அமைப்பில் வைக்கப்பட்டு இருந்த
பழைய நேஷனல் பேனாசோனிக் ரேடியோ, ஸ்விட்ச் போடப்படாமலேயே லேசான கிர்ர்ர் சத்தத்துடன்
இயங்கத் தொடங்கியது. அதிலிருந்து தெளிவாக மாரியப்பன் தாத்தாவின் குரல் ஒலித்தது.
"டேய்
பேராண்டி தமிழரசா! அந்தச் சாமியார் ஏமாற்றுக்காரன்தான். ஆனா, என் பேத்தி மேல எனக்கு
ஆசை இல்லாம போயிடுமா? நகை இந்த மேஜையோட ரகசிய டிராயர்ல இருந்து இந்நேரம் வெளிவந்திருக்கும்.
எடுத்துக்கடா!"
சத்தம்
நின்றது.
ரேடியோ
அமைதியானது.
தமிழரசனும்
ஜெயந்தியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
தமிழரசன்
மெதுவாகச் சொன்னான். "ஜெயந்தி! என்னோட நண்பன் விஜயராமன் தன்னோட பிளாக்ஸ்பாட்டுல
ஆவி, கீவி அப்படியெல்லாம் எதுவும் கிடையாதுன்னு எழுதிருக்கான். ஆனா, இது தாத்தாவோட
குரல் அப்படியே அச்சுப்பிசகாம. எப்படின்னுதான் தெரியல?"
"போயி
உங்க பிரெண்டுகிட்ட சொல்லுங்க. நம்ம முன்னோர்கள் ஆவியா நம்மைச் சுற்றித்தான் இருக்காங்க.
இனிமேலாவது ஆவி இல்லை, அதிசயம் இல்லைன்னு எழுதாம ஆவி உண்டுன்னு உண்மையை எழுதச் சொல்லுங்க!
நீங்களும் உங்க பிரெண்டுக்குச் சேர்ந்துகிட்டு ஜால்ரா தட்டாதீங்க!" என்றாள் ஜெயந்தி
கோபமாக.
தமிழரசன்
தலையில் கையை வைத்துக் கொண்டு அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து விட்டான்.
உலகில்
அறிவியலால் விளக்க முடியாத ஆவி அதிசயங்களும் நடக்குமோ என்னவோ என்ற கேள்வி அவன் மண்டையைக்
குடைய ஆரம்பித்து விட்டது.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****
