Showing posts with label ஆன்மா உண்மையா?. Show all posts
Showing posts with label ஆன்மா உண்மையா?. Show all posts

Sunday, 2 August 2026

ஆன்மாக்கள் அழைப்பாளர்களா, காப்பாற்றுபவர்களா?

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 40

ஆன்மாக்கள் அழைப்பாளர்களா, காப்பாற்றுபவர்களா?

கார்த்திக் – ரமேஷ் – பிரகாஷ் கதைகளை விஞ்சும் கதைகள் நம் நாட்டை விட வெளிநாடுகளில் அதிகம்.

வில் பேர்ட் என்ற கனடிய வீரர் சொல்லும் கதை இது. அவர் சொல்கிறார், "போர்க்களத்தில் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்த என் அண்ணன் ஸ்டீவ் ஆவியாக வந்து என் கையைப் பிடித்து இழுத்தான். எழுந்திருடா! என்றான். நான் வெளியே ஓடி வந்த அடுத்த நிமிடம், நான் தூங்கிய இடத்தை ஒரு குண்டு தரைமட்டமாக்கியது!"

அடடா, என்ன ஒரு அண்ணன் தம்பி பாசம்! கூகுள் மேப் கூடக் கண்டுபிடிக்க முடியாத ஓர் ஆபத்தை, பரலோகத்திலிருந்து வந்து எச்சரித்திருக்கிறார் அண்ணன் ஸ்டீவ்.

அதே நேரத்தில், இன்னொரு பிரிட்டிஷ் வீரரின் கதை இப்படி இருக்கிறது, "அதோ என் அம்மா நிற்கிறாள். என்னை அழைக்க வந்துவிட்டாள்!" சொல்லி முடித்த அடுத்த விநாடி அவர் உயிர் பிரிகிறது.

இங்கேதான் ஒரு பெரிய கேள்வி பிறக்கிறது. பேய்கள் அல்லது ஆவிகள் என்பவை உயிரைக் காக்கும் லைப் ஜாக்கெட்டா? அல்லது உயிரைக் குடிக்கும் எமதர்மன்களா?

நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். போர்க்களம் என்பது சாதாரண இடம் அல்ல. அங்கே மரண பயம், தூக்கமின்மை, பசி, அட்ரினலின் ரஷ், ரத்த அழுத்தம் என எல்லாமே உச்சத்தில் இருக்கும்.

நமது மூளை ஒரு பயங்கரமான கம்ப்யூட்டர். மிகக் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும்போது, மூளை சில சமயம் ஹாலுசினேஷன் எனப்படும் மாயத்தோற்றங்களை உருவாக்கும்.

அப்படியானால் வில் பேர்டின் விசயத்தில் நடந்து என்ன?

வில் பேர்டின் ஆழ்மனம் தூக்கத்தில் ஏதோ ஓர் ஆபத்தை அதாவது, குண்டு வரும் சத்தத்தையோ அல்லது அதிர்வையோ உணர்ந்திருக்கலாம். மூளை உடனடியாக அவரை விழித்தெழச் செய்ய, அவருக்கு மிகவும் பிடித்த, நம்பிக்கையான அண்ணன் ஸ்டீவின் உருவத்தை ஓர் அலாரம் போலப் பயன்படுத்தியிருக்கலாம்.

அடுத்து அந்தப் பிரிட்டிஷ் வீரரின் விசயத்தில் என்ன நடந்திருக்கும்?

மரணத்தின் விளிம்பில், இதயத்தின் இயக்கம் குறையும்போது, மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அந்த நேரத்தில் அமைதியைத் தேடும் மனம், உலகிலேயே பாதுகாப்பான இடமான அம்மாவின் நினைவை வரைந்து காட்டுகிறது.

மனித மனம் ரொம்பவே சுவாரசியமானது. நமக்கு அசாதாரணமான ஒரு விஷயம் நடக்கும்போது, அதற்கு ஓர் அற்புதச் சாயம் பூசவே நாம் விரும்புவோம்.

"என் ஆழ்மனதின் அதிர்வு எச்சரித்தது" என்று சொல்வதை விட, "என் இறந்த அண்ணன் வந்து காப்பாற்றினான்" என்று சொல்வதில் ஒரு கவித்துவமும், ஆறுதலும் இருக்கிறது அல்லவா?

அதேபோல, "என் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மயக்கமடைந்தேன்" என்பதை விட, "அம்மா கூப்பிட வந்துட்டா" என்று சொல்வது மரணத்தின் பயத்தைக் குறைக்கிறது.

ஆவிகள் உண்மையிலேயே வந்து காப்பாற்றுகின்றனவா அல்லது எமனாக மாறுகின்றனவா?

உண்மையில், அங்கே வருவது அண்ணனோ, அம்மாவோ அல்ல. நமது சொந்த மூளைதான்! ஆபத்து காலத்தில் அது நம்மை ஓட வைக்கும் தேவதையாகவும் மாறுகிறது; மரணத்தின் தருணத்தில் வலியைக் குறைக்க அமைதியைத் தரும் அன்னையாகவும் மாறுகிறது.

இயற்கையின் இந்த கெமிஸ்ட்ரி மாயாஜாலம், எந்தப் பேய்க் கதையை விடவும் சுவாரசியமானதுதானே?

இப்போது கார்த்திக் – ரமேஷ் – பிரகாஷ் கதையில் என்ன நடந்திருக்கும்?

அதைச் சரியாகக் கமென்ட் பாக்ஸில் சொல்பவர்களுக்கு, அமானுஷ்யங்களின் அட்ரஸ் புத்தகமாக வெளியாகும் போது அதன் முதல் பிரதி பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****