Friday, 17 January 2020

காலுக்குச் செருப்புமில்லை – ஜீவாவின் பாடல்

காலுக்குச் செருப்புமில்லை – ஜீவாவின் பாடல்
(ஜனவரி 18 - ஜீவாவின் பிறந்த நாள்)

காலுக்குச் செருப்பு மில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே
பசையற்றுப் போனோ மடா. (காலுக்கு)

குண்டிக்கொரு துண்டு மில்லை
கொல்வறுமை தாள வில்லை
ஒண்டக் குடிசை யில்லை – என் தோழனே
உழைத்திளைத்துப் போனோ மடா. (காலுக்கு)

நோய்நொடிகள் வெம்புலி போல்
நூறுவிதம் சீறு வதால்
தாய்தந்தையர் பெண்டு பிள்ளை –என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா. (காலுக்கு)

பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாய ழுவாள்
வேலையின்றி நாம ழுவோம் – என் தோழனே
வீடுமுச் சூடும் அழும். (காலுக்கு)

கையிலொரு காசு மில்லை
கடன் கொடுப்பாரு மில்லை
செய்யும் தொழில் கிட்ட வில்லை – என் தோழனே
திட்டாட்டம் கொல்லுதடா. (காலுக்கு)

வாங்கிய கடன் தீர்க்க
வக்கில்லை யானாலும்
ஏங்கி யிரந்துண்ண வோ – என் தோழனே
எங்கள் மனம் கூசுதடா. (காலுக்கு)

கொச்சைப் பிழைப்பறி யோம்
கொலை திருட்டும் அறியோம்
இச்சகப் பேச்சறி யோம் – என் தோழனே
எத்தும் புரட்டறி யோம். (காலுக்கு)

கோணல் மாணல் திட்டங்களால்
கோடி கோடி யாய்க்குவித்தே
வீணா்சிலர் கொழுக்கக் கண்டால் – என் தோழனே
வெஞ்சினம் பொங்கு தடா. (காலுக்கு)

மாடமாளிகைய வர்க்கு
மன்னர் மகுடம வர்க்கு
வாட வறுமை நமக்கு – என் தோழனே
வந்திடல் வாழ்வெதற்கு. (காலுக்கு)

ஒன்றுபட்டுப் போர்புரிந் தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா – என் தோழனே
இம்சை முறைக ளெல்லாம்.

காலுக்குச் செருப்பு மில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோ மடா – என் தோழனே
பசையற்றுப் போனோ மடா.

3 comments:

  1. அருமை வாழ்துக்கள்.

    ReplyDelete
  2. இன்றும் அதே நிலைமை தான் ...தீர்க்கதரிசி ...!

    ReplyDelete
  3. உண்மையான பாட்டாளி வர்க்கம் ஆட்சி வரும் வரையில் இந்த தாங்கொணாத துன்பம் அனுபவித்து தீருமடா

    ReplyDelete