Showing posts with label Fraudulents. Show all posts
Showing posts with label Fraudulents. Show all posts

Friday, 27 December 2024

பண மோசடிகளின் பல வகைகள்!

பண மோசடிகளின் பல வகைகள்!

நம்ப முடியாத லாபம் குறித்த தகவல்கள் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது சமீப காலமாகச் சமூக வலைதளங்களிலும் பகிரப்படுகின்றன. இவற்றின் நோக்கம் ஏமாற்றிப் பணம் பறிப்பதே. பொதுவாக சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்படும் பண மோசடிகளை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.

1. ‘இன்சைடர் டிப்’ மோசடி :

விரைவில் விலை உயரப் போகும் பங்குகள் பற்றிய ரகசிய தகவலை அளிப்பதாக வரும் குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் தகவல்கள் இவ்வகையினவை. அப்படி லாபம் தரப் போகும் பங்கு பற்றி உங்களுக்கு ஏன் அவர் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று யோசியுங்கள். அதைப் பயன்படுத்தி அவரே லாபம் சம்பாதிக்கலாமே. ஆகையால் இது எத்தகைய பெரிய மோசடி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

2. உத்திரவாத வருமான மோசடி :

பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் ஒரு லட்சம் திரும்பப் பெறலாம் என்பன போன்றவை இவ்வகை மோசடிகளைச் சேர்ந்தவை. இது போன்ற நம்ப முடியாத அளவுக்கு லாபம் தரும் திட்டங்கள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி மோசடிகளைச்  சேர்ந்தவையே.

3. போலி நிபுணர் மோசடி :

பங்குச் சந்தைகளில், கிரிப்டோ சந்தைகளில், மியூட்சுவல் பண்டுகளில், ரியல் எஸ்டேட்டுகளில் நிபுணர்கள் என்று கூறிக் கொண்டு உங்களை முதலீடுகளைச் செய்யச் சொல்லி ஏமாற்றுவது இவ்வகை மோசடியாகும். ஆரம்பத்தில் இலவசமாக ஆலோசனைகளைத் தருவது போலத் தந்து துவக்கத்தில் லாபத்தைக் காட்டி, போகப் போக ஆலோசனைக் கட்டணம் என்ற பெயரில் மிகப் பெரிய தொகையை வாங்கிக் கொள்வதுடன் உங்கள் முதலுக்கே மோசம் தரும் ஆலோசனைகளால் உங்களை நிதி இழப்பு அபாயத்தில் தள்ளி விட்டு அடுத்த வாடிக்கையாளரை ஏமாற்றச் செல்வது இவ்வகை மோசடியாளர்களின் உத்தியாகும்.

4. உடனே வாங்கத் தூண்டும் மோசடி :

இந்த அரிய வாய்ப்பு ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே என்று சொல்லி உங்களை வாங்கத் தூண்டுவார்கள். இதன் மூலம் போலியான அழுத்தத்தை உருவாக்கி ஒன்றுக்கும் உபயோகமே இல்லாத பொருட்களை வாங்க வைத்து நிதி இழப்புகளை ஏற்படுத்தி விடுவார்கள். உபயோகமற்ற பொருட்களை உங்கள் தலையில் கட்டுவதே இவ்வகை மோசடியாகும்.

5. பொன்சி மோசடி :

புதிதாக வரும் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைத் திரட்டி முந்தைய முதலீட்டாளர்களுக்கு வருமானமாகத் தந்து மக்களிடையே லாபத்தின் நம்பிக்கையைப் போலியாக உருவாக்குவதுதான் பொன்சி மோசடித் திட்டமாகும். இது போன்ற திட்டங்கள் ஒரு கட்டத்தில் மோசடி என்று அம்பலமாகி நிதி இழப்புகளை ஏற்படுத்தி விடும்.

இது போன்ற மோசடிகளில் சிக்காமல் எப்படித் தப்பிப்பது?

எந்த ஒரு முதலீட்டுத் திட்டத்திலும் நிச்சய வருமானம் 12 சதவீதத்துக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அதைத் தாண்டி 20 சதவீதம், 30 சதவீதம் நிச்சய வருமானம் என்று சொன்னால் நீங்கள் எச்சரிக்கையாக வேண்டும்.

முதலீட்டு விசயத்தில் எப்போதும் அவசரப்படாமல் நிதானமாக இருக்க வேண்டும். உங்களை யாரும் அவசரப்படுத்தினால் நீங்கள் எச்சரிக்கையாக வேண்டும்.

எந்த முதலீட்டுப் பரிந்துரையாக இருந்தாலும் நீங்களே ஒரு முறை மதிப்பாய்வு செய்து கொள்ளுங்கள். விவரங்களின் நம்பகத் தன்மையை ஆராயுங்கள்.

உங்களுடைய வங்கி விவரங்கள், ஆதார் விவரங்கள், PAN விவரங்கள் போன்றவற்றை யாருடனும் தேவையில்லாமல் பகிராதீர்கள்.

முதலீடு செய்யும் போது நம்பகமான இணையதளங்கள், செயலிகளைப் பயன்படுத்துவது முக்கியம்.

சமூக வலைதளங்களில் வரும் தேவையற்ற இணைப்புகளை ஒரு போதும் பின்தொடர வேண்டாம்.

பங்குக் குறிப்புகள் என்று வரும் தகவல்களை ஒரு போதும் நம்ப வேண்டாம்.

முதலீட்டுக் கல்விக்கான வழிமுறைகள் :

இந்திய பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://investor.sevi.gov.in என்பதிலிருந்து உங்களுக்கான முதலீட்டுக் கல்வியைப் பயிலத் துவங்குங்கள்.

பெஞ்சமின் கிரகாம் எழுதிய The Intelligent Investor, பீட்டர் லிஞ்ச் எழுதிய One Up On Wall Street போன்ற புத்தகங்களைப் படியுங்கள்.

பண மோசடிகளிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். மன மகிழ்வோடு வாழுங்கள்.

இத்தகவல்கள் உங்களுக்குப் பயனள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி! வணக்கம்!

*****