Showing posts with label school movies. Show all posts
Showing posts with label school movies. Show all posts

Sunday, 28 January 2024

ஜனவரி 2024க்கான சிறார் திரைப்படம் ‘ஹரிதாஸ்’

ஜனவரி 2024க்கான சிறார் திரைப்படம் ‘ஹரிதாஸ்’

ஜனவரி 2024 மாதத்திக்கான சிறார் திரைப்படமாக ‘ஹரிதாஸ்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நேரடித் தமிழ்த் திரைப்படமாகும்.

ஆட்டிசம் எனும் கற்றல் குறைபாட்டைப் பற்றி பேசும் இத்திரைப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார்.

2013 இல் வெளியான இத்திரைப்படத்தில் கிஷோர், பிரித்விராஜ், சினேகா, சூரி, பிரதிப் ரவட் போன்றோர் நடித்துள்ளனர்.

கிஷோர் காவலராகவும் (என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்) ஆட்டிச பாதிப்புள்ள குழந்தையின் தந்தையாகவும் நடித்துள்ளார்.

பிரித்விராஜ் ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்துள்ளார்.

சினேகா மாநகராட்சிப் பள்ளி ஆசிரியையாகவும் ஆட்டிசம் பாதித்த குழந்தை மேல் உள்ள நேசம் கொண்டவராகவும் நடித்துள்ளார்.

சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

பிரதிப் ரவட் வில்லனாக நடித்துள்ளார்.

காவலராகத் தொழில் வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு இடையே ஆட்டிசம் பாதித்த தன் குழந்தையின் தேவையைக் கிஷோர் எப்படி நிறைவு செய்ய முயற்சிக்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் திரைக்கதையாகும்.

குதிரையைக் கண்டு உற்சாகம் அடைவதைக் கண்டு ஓடுவதில் தனது குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டறியும் கிஷோர் பிரித்விராஜை ஓட்டப்பந்தய வீரனாக்க முயல்கிறார்.

அந்தக் கனவு நிறைவேறும் இடத்தில் நிறைவில் வில்லன்களைத் தீர்த்துக் கட்டி அவரும் இறக்கிறார். சினேகா அக்குழந்தையைத் தாங்கிப் பிடிக்கும் தாயாகக் கிஷோரின் இடத்தை நிறைவு செய்கிறார்.

11வது சென்னை பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் இரண்டாவது சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. குழந்தை நட்சத்திரத்திற்கான சிறப்பு விருதும் இத்திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்தை யூடியூப்பில் காண கீழே உள்ள இணைப்பை இயக்கவும். (ப்ளே செய்யவும்)

*****

Monday, 1 January 2024

2023 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘பன்ட்’!

2023 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘பன்ட்’!

டிசம்பர் 3 மாற்றுத் திறனாளிகள் தினம். இத்தினத்தையொட்டி டிசம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்திய ‘பன்ட்’ என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. இத்திரைப்படம் கொரியன் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2007 இல் திரைக்கு வந்தது.

இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர்கள் பர்க் ஹ்யூ டே மற்றும் சோய் சுக் ஹ்வான். இத்திரைப்படத்தை இயக்கியவர் கதையாசிரியர்களில் ஒருவரான பர்க் ஹ்யூ டே.

டோங்கூ பதினோரு வயது நிரம்பியவன். பள்ளி செல்லும் சிறுவன். கற்றல் குறைபாடு உள்ள மெல்ல மலரும் மாணவன். பள்ளி இடைவேளையின் போது மற்ற மாணவர்களுக்குத் தண்ணீர் எடுத்து வரும் பணியை அவன் விரும்பிச் செய்கிறான். எனினும் மற்ற மாணவர்கள் டோங்கூவைக் கிண்டல் செய்கின்றனர். அவனது கற்றல் குறைபாட்டைக் கருத்தில் கொண்டு தங்கள் அருகில் டோங்கூ அமருவதையும் அவர்கள் விரும்புவதில்லை. அதை டோங்கூ பெரிது படுத்துவதில்லை. கிண்டல் செய்பவர்களைப் புன்னகையோடு எதிர்கொள்கிறான். டோங்கூ தன்னருகில் உட்காருவதை விரும்பாத சக மாணவன் ஒருவன் டோங்கூ கொண்டு வந்த தண்ணீர் பாத்திரத்தில் தவளையைப் போட்டு விடுகிறான். பள்ளியில் அது பெரிய பிரச்சனையாகிறது. அதைத் தொடர்ந்து வகுப்பறைகள் அனைத்திலும் தண்ணீர் கலங்கள் அமைக்கப்படுகின்றன. அது டோங்கூவுக்குப் பிடிக்காமல் வகுப்பறையில் இருக்கும் தண்ணீர் கலமொன்றைக் கீழே தள்ளி விடுகிறான்.

தொடர்ந்து டோங்கூ பள்ளிக்கு வருவதை அவனது வகுப்பாசிரியையும் பள்ளி நிர்வாகமும் விரும்பவில்லை. கற்றல் குறைபாடுள்ள டோங்கூ தேர்வெழுதினால் அது வகுப்பின் தேர்ச்சி விகிதத்தைப் பாதிக்கும் என்பதால் அவனை வகுப்பாசிரியை வேறு பள்ளியில் சேர்க்க சொல்கிறார். பள்ளி நிர்வாகமும் டோங்கூவைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்குமாறு பரிந்துரைக்கிறது. டோங்கூவின் தந்தைக்கு அந்த யோசனை பிடிக்கவில்லை. அவர் தன்னுடைய மகன் அதே பள்ளியில்தான் படிப்பான் என்று பிடிவாதமாகக் கூறுகிறார். அவர் தற்போது நடத்தி வரும் உணவகம் மற்றும் வீட்டிலிருந்து டோங்கூ வருவதற்கு அந்தப் பள்ளிதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார். டோங்கூவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவும் அந்த உள்ளூர் பள்ளிதான் வசதியாக இருக்கும் என்றும் நினைக்கிறார்.

இந்நிலையில் பள்ளியின் பேஸ்பால் அணியில் விளையாடும் மாணவன் ஒருவன் தண்ணீர் கொண்டு வருவதை இழுக்காகக் கருதி அந்த அணியிலிருந்தும் பள்ளியிலிருந்தும் வெளியேறப் போவதாகக் கூறி வெளியேறுகிறான். தண்ணீர் கொண்டு கொடுக்கும் பணியில் ஆர்வமாக உள்ள டோங்கூ அந்தப் பணியை விரும்பிச் செய்கிறான். இதனால் அவன் பள்ளியின் பேஸ்பால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறான்.

டோங்கூக்குப் பேஸ்பால் விளையாட்டு விதிகளைப் புரிந்து கொள்வதும், விதிகளுக்கு ஏற்ப விளையாடுவதும் சவாலாக இருக்கின்றன. பேஸ்பால் பயிற்சி ஆசிரியரும் டோங்குவிற்குப் பேஸ்பால் விளையாட்டை எவ்வளவோ ஆர்வமாகச் சொல்லிக் கொடுத்தும் அது முடியாமல் அலுத்துப் போகிறார். ஆனாலும் டோங்கூ பேஸ்பால் மைதானத்தையும், தண்ணீர் கொண்டு கொடுக்கும் பணியையும் நேசித்துச் செய்கிறான். பேஸ்பால் அணியில் இருப்பதால் டோங்கூ பள்ளியில் தொடர்ந்து பயில அனுமதிக்கப்படுகிறான்.

இதற்கிடையில் டோங்கூ தன்னருகில் அமரக் கூடாது என நினைத்து அவன் கொண்டு வந்த தண்ணீர் பாத்திரத்தில் தவளையைப் போட்ட மாணவன் டோங்கூவைப் புரிந்து கொள்கிறான். அவன் டோங்கூவின் நெருங்கிய நண்பனாகிறான். டோங்கூவிற்குப் பேஸ்பால் விளையாட்டைக் கற்றுத் தர முயல்கிறான். இருப்பினும் டோங்கூவுக்கு நண்பன் அளிக்கும் பயிற்சியைப் புரிந்து கொண்டு விளையாடுவது சிரமமாக இருக்கிறது.

இந்நிலையில் டோங்கூவின் அப்பாவிற்கு ஏற்படும் வயிற்றுவலி புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகத்தை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அத்துடன் டோங்கூவின் அப்பா அவர் நடத்தி வந்த உணவகத்தை அதே இடத்தில் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு இடையேயான பேஸ்பால் போட்டி நடைபெறுகிறது. டோங்கூவின் அப்பா மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை அறிந்து கொள்ள செல்கிறார். டோங்கூ பள்ளியின் பேஸ்பால் அணியோடு விளையாடச் செல்கிறான்.

முடிவில் டோங்கூவின் அப்பாவிற்கு ஏற்பட்ட வயிற்றுவலி புற்றுநோய் இல்லை என்ற முடிவு கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு அவர் டோங்கூ பேஸ்பால் விளையாடும் மைதானத்திற்கு வருகிறார். அங்கே பள்ளி அணியின் வெற்றியானது டோங்கூ விளையாடும் கடைசி ஆட்டத்தின் கையில் இருக்கிறது. டோங்கூ எதிரணியினர் வீசும் பந்தை அவனது நண்பன் சொல்லிக் கொடுத்த முறையின்படி பேஸ்பால் மட்டையால் தடுத்து விட்டு ஓடுகிறான். டோங்கூவின் பள்ளி அணியானது வெற்றி பெறுகிறது. டோங்கூவின் அப்பா, டோங்கூவின் நண்பன், டோங்கூவின் பேஸ்பால் பயிற்சி ஆசிரியர், டோங்கூவின் பேஸ்பால் அணியினர் அனைவரும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கின்றனர்.

படத்தின் நிறைவாக டோங்கூவின் அப்பா உணவகத்தையும் வீட்டையும் வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்கிறார். பேஸ்பால் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு டோங்கூ பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்குச் சரியாக வழியை நினைவில் வைத்துக் கொண்டு வந்து சேர்கிறான். அத்துடன் படம் நிறைவு பெறுகிறது.

கற்றல் குறைபாடு உள்ள சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இத்திரைப்படம் அழகாக எடுத்துக் காட்டுகிறது. சக மாணவர்களின் அக்கறையும் கரிசனமும் கற்றல் குறைபாட்டை மாற்றி அவர்களை இயல்பானவர்களாக மாற்றும் என்பதையும் இப்படம் காட்சிப்படுத்துகிறது. கற்றல் குறைபாட்டை நிவர்த்தி செய்ய விளையாட்டு உதவும் என்பதையும் இத்திரைப்படம் எடுத்துச் சொல்வதாக அமைகிறது.

பேஸ்பால் விளையாட்டோடு தொடர்புடைய ‘பன்ட்’ என்ற இத்திரைப்படத்தின் தலைப்பைக் குறிக்கும் இச்சொல்லானது பேஸ்பால் மட்டையால் வீசப்படும் பந்தை லேசாகத் தொடுதலை அல்லது தடுப்பதைக் குறிக்கிறது. சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளையும் அது போல நாம் லேசாக அரவணைத்தால் அவர்களும் மற்ற மாணவர்களைப் போல சாதிப்பார்கள் என்பதை இத்திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், கண்ணியம், நல்வாழ்வு குறித்து இத்திரைப்படம் பேசுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இத்திரைப்படம் எடுத்துரைக்கிறது. மாற்றுத்திறனாளிகள் குறித்த ஓர் அர்த்தமுள்ள கண்ணோட்டத்தை உருவாக்குவதே இத்திரைப்படத்தின் நோக்கமாகும். அந்நோக்கத்தை இத்திரைப்படம் நன்றாகவே நிறைவு செய்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான திரைப்படம் ‘பன்ட்’.

***** 

Sunday, 19 November 2023

நவம்பர் 2023 ஆம் மாதத்திற்கான சிறார் திரைப்படம் – தி கிட்

நவம்பர் 2023 ஆம் மாதத்திற்கான சிறார் திரைப்படம் – தி கிட்

தி கிட் திரைப்பட விமர்சனம் :

தி கிட் என்ற திரைப்படம் 1921 இல் சார்லி சாப்ளின் நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரும் படத்தொகுப்பாளரும் சார்லி சாப்ளினே ஆவார். இத்திரைப்படத்தில் குழந்தையாக ஜாக்கி கூகன் நடித்துள்ளார். இத்திரைப்படம் அமெரிக்க மௌன நகைச்சுவை நாடக திரைப்படமாகும்.

தி கிட் என்ற இத்திரைப்படம் சார்லி சாப்ளினின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இது அவரது சுயசரிதை படைப்பு ஆகும். இத்திரைப்படத்தை அவர் தனது குழந்தை பருவ அனுபவத்தின் அடிப்படையில் இயக்கியுள்ளார்.

நாடோடியான சாப்ளின் ஒரு தாயால் கைவிடப்பட்ட குழந்தையைத் தயக்கத்துடன் காப்பாற்றுகிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே தி கிட் என்ற திரைப்படத்தின் கதையாகும்.

சாப்ளின் குழந்தையை வளர்க்கிறார். அக்குழந்தையின் தாய் இறுதியில் குழந்தையைக் கேட்கும் போது சாப்ளினும் குழந்தை கூகனும் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் குழந்தை தாயிடம் சேர்கிறது. சாப்ளினும் குழந்தையை வந்து அடைகிறார். இவற்றை சார்லி சாப்ளின் தமக்கே உரிய நகைச்சுவை காட்சிகளுடன் திரைப்படமாக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் தேவையான உரையாடல்கள் படக்காட்சிகளிடையே வாக்கியங்களாக வெளிப்படுகின்றன.

இத்திரைப்படம் குழந்தைகளைக் கவரும் திரைப்படம் எனில் அது மிகையில்லை. சாப்ளின் பிழைப்பிற்காகக் குழந்தை கூகனைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கச் செய்வதும், பிறகு அவர் பழுது பார்ப்பவராகச் சென்று பழுது பார்த்து சம்பாதிப்பதும் குழந்தைகள் ரசிக்கும் வேடிக்கையான காட்சியாகப் படத்தில் இடம் பெற்றுள்ளது.

துவக்கம் முதல் இறுதி வரை குழந்தைகள் உணர்ச்சிகரமாகவும் சிரித்த வண்ணமாகவும் பார்க்கும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளையில் அமைந்த மௌன திரைப்படம் எனினும் இத்திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கமும் உண்டாக்கும் உணர்வுகளும் எக்காலத்திற்கும் பொருந்துவனவாகவே உள்ளன.

இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய மாகாணங்களின் தேசிய திரைப்பட பதிவேட்டில் பாதுகாப்பதற்கான சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விமர்சனத்தைக் காணொளியாகக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி இயக்கவும்.

*****

Wednesday, 1 November 2023

அக்டோபர் மாதத்திற்குரிய சிறார் திரைப்படம் – தி ஜங்கிள் கேங்

அக்டோபர் மாதத்திற்குரிய சிறார் திரைப்படம் – தி ஜங்கிள் கேங்

அக்டோபர் மாதத்திற்குரிய சிறார் திரைப்படமாக தி ஜங்கிள் கேங் என்ற திரைப்படத்தைப் பள்ளிக்கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது. இத்திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பண்ட் பார் நேச்சர் என்ற நிறுவனமும் எர்த் கேர் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இத்திரைப்படம் 2012 இல் வெளியானது. இத்திரைப்படத்தின் மொழி தமிழ் ஆகும்.

கிருஷ்னேண்டு போஸ் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே. இத்திரைப்படம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட வனவிலங்கு தொடர்பான அனிமேஷன் கலந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் நோக்கம் இந்தியாவின் பல்வேறு வன விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்து விளக்குவதாகும். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் பங்கேற்க ஊக்குவிப்பதும் இத்திரைப்படத்தின் நோக்கமாகும்.

இத்திரைப்படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்கள் நடித்துள்ளன. கருப்பு மான் ‘பூரா என்ற பெயரிலும், வாத்து ‘போ என்ற பெயரிலும் தேவாங்கு ‘குட்டு என்ற பெயரிலும் நடித்துள்ளன. இந்த மூன்று பாத்திரங்களும் இந்தியாவின் வடகிழக்கில் தொடங்கி மத்திய இந்தியாவின் வழியாக தெற்கே வந்தடைகின்றன. அப்படி வந்தடையும் வழியில் காண்டாமிருகம், புலி, யானை மற்றும் கரடி போன்ற பல்வேறு விலங்கினங்கள் குறித்த தகவல்களை உரையாடல்கள் வெளியே வெளிப்படுத்துகின்றன. இந்திய வன விலங்கினங்களின் வாழ்விடங்கள் பற்றியும் பேசுகின்றன. இந்திய வன விலங்குகளுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் பேசுகின்றன. வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசுகின்றன.

இத்திரைப்படத் தொடர் ஒவ்வொன்றின் இறுதியிலும் பூமியின் இயற்கை வளங்கள் அழிந்து வருவது சுட்டிக் காட்டப்படுகின்றது. குழந்தைகளும் மாணவர்களுமே அழிந்து வரும் இயற்கை வளங்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது. மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை இத்திரைப்படத் தொடர்கள் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் உணர்த்துகின்றன.

இத்திரைப்படத்திற்கு சின் இந்தியா கிட்ஸ் திரைப்பட விழா விருது வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 7வது சிஎம்எஸ் வடவரன் திரைப்பட திருவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது.

இத்திரைப்படத்தைக் கண்டு, களித்த பிறகு பின்வரும் வினாக்களை எழுப்பி ஆசிரியர் மாணவர்களோடு கலந்துரையாடுவது சிறப்பானது.

1. இத்திரைப்படம் உங்களுக்குப் பிடித்துள்ளதா?

2. இத்திரைப்படத்தின் மையக் கருத்து என்ன?

3. இத்திரைப்படம் எதைப் பற்றியது?

4. இத்திரைப்படத்தின் முக்கியமான சம்பவங்கள் யாவை?

5. இத்திரைப்படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் எது?

6. இத்திரைப்படத்தின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

7. இத்திரைப்படத்தில் உங்களுக்குப் பிடித்த அம்சம் எது?

8. இத்திரைப்படம் குறித்த உங்களது கருத்தைச் சில வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.

9. இத்திரைப்படத்திற்கு ஒரு போஸ்டர் தயாரிக்கச் சொன்னால் எப்படித் தயாரிப்பீர்கள்?

10. இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களில் ஒன்றை வரையச் சொன்னால் நீங்கள் எந்தப் பாத்திரத்தை வரைவீர்கள்?

11. இத்திரைப்படத்தின் முடிவு வேறு எப்படியெல்லாம் அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

12. இத்திரைப்படம் குறித்த உங்கள் விமர்சனத்தை மூன்று நிமிடம் பேசுங்கள்.

13. இது போன்ற விலங்குகள் மற்றும் தாவரங்களைக் காப்பாற்றிப் பராமரிப்பது போன்ற கதைகள் இருந்தால் சொல்லுங்கள்.

14. இத்திரைப்படம் போன்ற ஒரு திரைப்படத்தை உங்கள் கற்பனையில் உருவாக்கி எடுக்கச் சொன்னால் எப்படி எடுப்பீர்கள்?

பின்வரும் வினாக்கள் மூலம் ஆசிரியர் மாணவர்களிடம் ஆர்வமூட்டும் வகையில் கலந்துரையாடி சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நலம் பயக்கும்.

இவ்விவரங்களைக் காணொளியாகக் காண கீழே உள்ள காணொளியை இயக்கிக் காணவும்.

நன்றி!

வணக்கம்!

*****

Tuesday, 19 September 2023

செப்டம்பர் 2023 மாத சிறார் திரைப்படம் – ‘ஹருண் அருண்’

செப்டம்பர் 2023 மாத சிறார் திரைப்படம் – ‘ஹருண் அருண்’

செப்டம்பர் 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படமாக ‘ஹருண் அருண்’ என்ற திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் குஜராத்தி மொழி திரைப்படமாகும்.

‘ஹருண் அருண்’ திரைப்படத்தை இயக்கியவர் வினோத் கணத்ரா. மனிதர்கள் உருவாக்கியிருக்கும் பாகுபாடுகளைக் கடந்து இறுதியில் அன்பே வெல்கிறது என்பதே இச்சிறார் திரைப்படத்தின் மையக்கரு ஆகும்.

இச்சிறார் திரைப்படத்தின் கதை

ஹருண் என்பவன் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியச் சிறுவன் ஆவான். அவன் தாத்தாவுடன் பாகிஸ்தானிலிருந்து ஹட்ச் பாலைவனம் வழியாக இந்தியா வரும் போது தாத்தாவிடமிருந்து வழிதவறி விடுகிறான். வழிதவறிய ஹருண் குழந்தைகள் நிறைந்த ஓர் இந்தியக் குடும்பத்தினரிடம் தஞ்சம் அடைகிறான். ஹருண் என்ற அவனது பெயரை அக்குடும்பத்தினர் அருண் எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இப்படியாக ஹருண் அருணாகிறான். இதையே இயக்குநர் படத்தலைப்பாக வைத்துள்ளார்.

அருணாகி விட்ட ஹருண் தன் அன்பால் அக்குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் மனதில் இடம் பிடிக்கிறான். அவன் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய சிறுவன் என்று கண்டுபிடிக்கப்படும் போது அவனைக் கிராமத்தினர் சந்தேகிக்கின்றனர். அவர்களின் சந்தேகங்களையும் பாகுபாட்டு உணர்வுகளையும் கடந்து அன்பால் ஹருண் அனைவர் மனதையும் வெல்கிறான். இதுவே இத்திரைப்படத்தின் சுருக்கமான கதையாகும்.

குழந்தைகளின் மனம் பாகுபாடு அறியாதது, வேறுபாடுகளை உணராது என்பதை இத்திரைப்படம் உணர்வு ரீதியாகக் காட்சிப்படுத்துகிறது. இக்காட்சிப்படுத்தல் குழந்தைகளும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற உண்மையை நிறுவுகிறது. குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த மதமோ, இனமோ, சாதியோ முக்கியமில்லை, அன்பே முக்கியம் என்பதை இத்திரைப்படம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளிடம் கல்வி முறை கொண்டு சேர்க்க வேண்டிய சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் இத்திரைப்படத்தைக் குழந்தைகள் பார்த்து மகிழ்வது விரும்பத்தக்கதாகும்.

திரைப்படம் பெற்ற விருதுகள்

இத்திரைப்படம் ஆறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. அவையாவன,

1. அமைதிக்கான சிகாகோ சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விருது

2. சிறந்த இளையோருக்கான டாக்கா சர்வதேச திரைப்பட விருது

3. டிரான்ஸ் மீடியா விமர்சகர்கள் விருது

4. மனிதநேய ரிமோஸ்கி சர்வதேச திரைப்பட விழா விருது

5. இலங்கையின் ஆசிய ஒளி புத்த திரைப்பட விழா விருது

6. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஜெர்மனியின் ஆக்பர்க் குழந்தைகள் திரைப்பட விழா விருது

திரையிடலுக்குப் பின் குழந்தைகளோடு கலந்துரையாடுவதற்கான வினாக்கள்

1. இத்திரைப்படம் உங்களுக்குப் பிடித்துள்ளதா?

2. இத்திரைப்படத்தின் மையக்கருத்தாக நீங்கள் அறிவது யாது?

3. இத்திரைப்படத்தில் உங்களைக் கவர்ந்த பாத்திரம் எது?

4. இத்திரைப்படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சி எது?

5. இத்திரைப்படத்தின் கதையைச் சுருக்கமாக உங்கள் நடையில் கூற முடியுமா?

6. இத்திரைப்படத்தில் உங்களை நடிக்கச் சொன்னால் நீங்கள் எந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்புவீர்கள்?

7. இத்திரைப்படத்தின் முடிவு வேறு எப்படி அமைந்திருக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நன்றி!

வணக்கம்!

இத்திரைப்படத்தைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

இத்திரைப்படம் குறித்த மேலதிக விவரங்களைப் பெற கீழே உள்ள காணொளியை இயக்கவும்.

*****

Sunday, 17 September 2023

ஆகஸ்ட் 2023 – சிறார் திரைப்படம் – நிலா

ஆகஸ்ட் 2023 – சிறார் திரைப்படம் – நிலா

ஆகஸ்ட் 2023 ஆம் மாதத்திற்குப் பள்ளிகளில் திரையிடப்பட வேண்டிய சிறார் திரைப்படமாக ‘நிலா’ என்ற சிறார் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் ஞாநி என்ற எழுத்தாளர் எழுதி, இயக்கிய திரைப்படமாகும். அவர் தனது ஞானபாநு என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் வெகுஜனப் பரப்பில் நன்கு அறியப்பட்ட நடிகரான நாசர் அரசராக நடித்துள்ளார். நாடகக் கலையைப் பள்ளிகள் தோறும் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்யும் வேலு சரவணன் கோமாளியாக நடித்துள்ளார். மற்றும் பலர் இளவரசி, மருத்துவர், அமைச்சர், மந்திரவாதி, கணிதர் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிலவைக் கேட்கும் இளவரசியின் ஆசையை அரசர் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதே இத்திரைப்படத்தின் மையம் ஆகும்.

இளவரசி கயல்விழிக்கு உடல்நலம் சரியில்லாமல் போகிறது. மருத்துவர் வருகிறார். இளவரசியைப் பரிசோதித்த மருத்துவர் அவரின் ஆசையை நிறைவேற்றினால் நோய் சரியாகும் என்கிறார். இளவரசியோ தன்னுடைய ஆசையாகத் தனக்கு வானில் இருக்கும் நிலா வேண்டும் என்கிறார்.

இளவரசியின் ஆசையை எப்படி நிறைவேற்றுவது என்று யோசிக்கிறார் அரசர். அவர் அமைச்சர், மந்திரவாதி, கணிதர், கோமாளி ஆகியோரிடம் ஆலோசனை கேட்கிறார். அமைச்சர், மந்திரவாதி, கணிதர் ஆகியோர் சொல்லும் ஆலோசனைகள் அரசருக்கு ஏற்புடையதாக இல்லாமல் போக அவர் கோமாளியின் யோசனையை ஏற்கிறார். கோமாளியின் யோசனையின் படி இளவரசியிடமே அவரது ஆசையை எப்படி நிறைவேற்றுவது எனக் கேட்கலாம் என முடிவாகிறது.

கோமாளி இளவரசியிடம் பேசுகிறார். இளவரசி சொன்னபடி வான் நிலவைத் தங்கத்தில் சிறிய வடிவில் செய்து அதை கழுத்தில் அணியும் ஆபரணத்தில் அமைத்துக் கொண்டு வந்து கொடுத்து ஆசையை நிறைவேற்றுகிறார்.

இளவரசியின் ஆசையை நிறைவேற்றிய பின் அரசருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. வானில் இரவு நிலவு வருவதை இளவரசி பார்த்தால் தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த நிலா எது என்று கேள்வி கேட்பாளோ என்ற அச்சம் அரசரை ஆட்கொள்கிறது.

மீண்டும் இந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள அவர் அமைச்சர், மந்திரவாதி, கணிதர் மற்றும் கோமாளியின் உதவியை நாடுகிறார். வழக்கம் போலவே அரசருக்கு அமைச்சர், மந்திரவாதி, கணிதர் ஆகியோரின் யோசனைகள் சரியாகப் படவில்லை. கோமாளியின் யோசனைப்படி இச்சந்தேகத்திற்கான தீர்வை இளவரசியிடம் பேசி அறிந்து கொள்வது என்ற முடிவை ஏற்றுக் கொள்கிறார்.

ஒரு பல் விழுந்தால் இன்னொரு பல் முளைப்பதைப் போல, ஒரு பூவைப் பறித்தால் இன்னொரு பூ பூப்பதைப் போல வானில் ஒரு நிலவை எடுத்தால் இன்னொரு நிலவு முளைத்து விடும் என்று அரசரின் சந்தேகத்தைத் தீர்ப்பதைப் போல இளவரசி கோமாளியிடம் அதற்கு ஒரு தீர்வைச் சொல்கிறார்.

இப்படியாகக் கோமாளி இந்த முறையும் இளவரசியோடு உரையாடி அரசரின் சந்தேகத்தைப் போக்கும் தீர்வைத் தருகிறார். அரசர் மகிழ்கிறார்.

குழந்தைகளின் பிரச்சனைகளுக்குக் குழந்தைகளின் மனநிலையில் யோசிக்கும் போதுதான் தீர்வுகள் கிடைக்கும் என்பதைச் சொல்லும் இக்கதை, குழந்தைகளின் பிரச்சனைகளுக்குப் பெரியவர்களின் மனநிலையில் யோசித்தால் தீர்வு கிடைக்காது என்பதையும் அழுத்தமாக முன் வைக்கிறது. குழந்தைகளிடம் உரையாடினால் அவர்களது பிரச்சனைகளை எளிதாகத் தீர்த்து வைக்க முடியும் என்பதையும் இச்சிறார் திரைப்படம் எடுத்துச் சொல்லி குழந்தைளுடனான உரையாடல் பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறது.

குழந்தைகள் விரும்பும் வகையில் இக்கதை அமைக்கப்பட்டிருப்பதும், பாடல் மற்றும் பின்னணிகள் அமைந்திருப்பதும் இச்சிறார் திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். இத்திரைப்படத்தைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

இத்திரைப்படம் குறித்த விளக்க காணொளியினைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://youtu.be/m7ladptO4aI?si=4Vd7n8n5zxc21Zml

*****

Tuesday, 25 July 2023

ஜூலை 2023க்கான சிறார் திரைப்படம் - ஈ.டி.

ஜூலை 2023க்கான சிறார் திரைப்படம் - ஈ.டி.

ஜூலை 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படமாக ‘ஈ.டி. தி எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல்’ (E.T. The Extra Terrestrial) என்ற திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் ஓர் அறிவியல் புனைவுத் திரைப்படம் (Science Fiction) ஆகும். 1982 இல் இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ஓர் ஆங்கில மொழி திரைப்படமாகும். புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இத்திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி உள்ளார்.

இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர் மெலிசா மேத்திசன் ஆவார்.

இத்திரைப்படத்தின் கதை என்னவென்பதைத் தெரிந்து கொள்வோமா?

ஒரு வேற்றுக்கிரகவாசி தவறுதலாகப் பூமிக்கு வந்து விட்டால் என்ன நடக்கும் என்ற ஒற்றை வரியிலிருந்து இப்படத்தின் கதை விரிகிறது.

தவறுதலாகப் பூமிக்கு வந்து விட்ட வேற்றுகிரகவாசிக்கும் எலியட் என்ற பத்து வயது சிறுவனுக்கும் நட்பு ஏற்படுகிறது. எலியட் வேற்றுகிரகவாசிக்கு ஈ.டி. என்று பெயர் சூட்டுகிறான். ஈ.டி.யானது எலியட் மற்றும் எலியட்டோடு தொடர்புடையவர்கள் மூலமாக பூமி பற்றியும் பூமியின் வாழ்க்கை முறை பற்றியும் அறிந்து கொள்கிறது. ஈ.டி. மீண்டும் தனது கிரகத்திற்குத் திரும்ப நினைக்கும் போது எலியட் அதற்கு எவ்வாறு உதவி செய்து அனுப்பி வைக்கிறான் என்பதை உணர்வு பூர்வமாகக் காட்சிபடுத்தி இருப்பதே இத்திரைப்படமாகும்.

இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளையும், 2 கோல்டன் குளோப் விருதுகளையும், கிராமி விருதையும் வென்றுள்ளது.

இத்திரைப்படம் குறித்த செய்திகளைக் காட்சிகளோடு தமிழ் பின்னணியில் குரல் வழி (Voice over) தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை Play செய்து பார்க்கவும்.

*****

Thursday, 6 April 2023

ஏப்ரல் 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம்

ஏப்ரல் 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம்

ஏப்ரல் 2023 மாதத்திக்கான சிறார் திரைப்படமாக ‘ஹரிதாஸ்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நேரடித் தமிழ்த் திரைப்படமாகும். இதுவரை பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ‘மல்லி’ என்ற திரைப்படத்திற்கு அடுத்ததாக இத்திரைப்படமே நேரடித் தமிழ்ப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆட்டிசம் எனும் கற்றல் குறைபாட்டைப் பற்றி பேசும் இத்திரைப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கியுள்ளார்.

2013 இல் வெளியான இத்திரைப்படத்தில் கிஷோர், பிரித்விராஜ், சினேகா, சூரி, பிரதிப் ரவட் போன்றோர் நடித்துள்ளனர்.

கிஷோர் காவலராகவும் (என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்) ஆட்டிச பாதிப்புள்ள குழந்தையின் தந்தையாகவும் நடித்துள்ளார்.

பிரித்விராஜ் ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்துள்ளார்.

சினேகா மாநகராட்சிப் பள்ளி ஆசிரியையாகவும் ஆட்டிசம் பாதித்த குழந்தை மேல் உள்ள நேசம் கொண்டவராகவும் நடித்துள்ளார்.

சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

பிரதிப் ரவட் வில்லனாக நடித்துள்ளார்.

காவலராகத் தொழில் வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு இடையே ஆட்டிசம் பாதித்த தன் குழந்தையின் தேவையைக் கிஷோர் எப்படி நிறைவு செய்ய முயற்சிக்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் திரைக்கதையாகும்.

குதிரையைக் கண்டு உற்சாகம் அடைவதைக் கண்டு ஓடுவதில் தனது குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டறியும் கிஷோர் பிரித்விராஜை ஓட்டப்பந்தய வீரனாக்க முயல்கிறார்.

அந்தக் கனவு நிறைவேறும் இடத்தில் நிறைவில் வில்லன்களைத் தீர்த்துக் கட்டி அவரும் இறக்கிறார். சினேகா அக்குழந்தையைத் தாங்கிப் பிடிக்கும் தாயாகக் கிஷோரின் இடத்தை நிறைவு செய்கிறார்.

11வது சென்னை பன்னாட்டுத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் இரண்டாவது சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. குழந்தை நட்சத்திரத்திற்கான சிறப்பு விருதும் இத்திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்தை யூடியூப்பில் காண கீழே உள்ள இணைப்பை இயக்கவும். (ப்ளே செய்யவும்)

*****

Monday, 6 March 2023

101 சோடியங்கள் – மார்ச் 2023க்கான சிறார் திரைப்படம் 101 Chodyangal (101 Questions – 101 கேள்விகள்)

101 சோடியங்கள் – மார்ச் 2023க்கான சிறார் திரைப்படம்

101 Chodyangal (101 Questions – 101 கேள்விகள்)

மார்ச் 2023க்கான சிறார் திரைப்படமாக ‘101 சோடியங்கள்’ என்ற மலையாளத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

101 சோடியங்கள் என்பது 101 கேள்விகளைக் குறிக்கும்.

இத்திரைப்படம் 2013 இல் வெளியானது.

இத்திரைப்படம் ஆசிரியர் மாணவர் உறவை மையமாகக் கொண்ட திரைப்படமாகும் ஆசிரியர் மாணவர் அனில்குமாரை 101 கேள்விகளைத் தயாரித்து வருமாறு ஓர் ஒப்படைப்புப் பணியைக் (Assignment) கொடுக்கிறார். அதை அம்மாணவர் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதை இத்திரைப்படம் காட்சி ஓவியமாகத் தீட்டுகிறது. மாணவரின் தந்தை ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். அவர் வேலையிழப்புக்கு ஆளாகிறார். இச்சூழ்நிலையோடு அம்மாணவரின் கல்வி நிலையையும் ஆசிரியரின் கற்பித்தல் நிலையையும் இத்திரைப்படத்தில் இணைத்துக் காட்சிப்படுத்துகிறார் இத்திரைப்படத்தின் இயக்குநர். மாணவர்களின் கற்றல் தூண்டலை எப்படி கேள்விகள் மூலமாகச் சுவரசியமாகத் தூண்டலாம் என்பதை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதையும் திரைக்கதையும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் 60வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதைப் பெற்றது. அத்துடன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் வென்றது.

18வது கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் Silver Crow Pheasant விருதையும் பெற்றது.

இத்திரைப்படத்தை சித்தார்த் சிவா எழுதி இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை நீங்கள் யூடியூப்பில் கண்டு மகிழலாம். அதற்கான இணைப்புக்குக் கீழே சொடுக்கவும்.

https://www.youtube.com/watch?v=A1eox1-m_34&list=PLPwdRVLBdK_IGrmReooM3tfQ4z9XGGssy

*****

Sunday, 12 February 2023

பிப்ரவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘மல்லி’

பிப்ரவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘மல்லி’

பள்ளிச் சிறார்களுக்கான திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் கல்வித் துறையால் பரிந்துரைக்கப்பட்டு அப்படங்கள் பள்ளிகளில் திரையிடப்படுகின்றன. அத்திரைப்படங்கள் பெரும்பாலும் பிறமொழிப் படங்களாக இருந்த நிலையில் இந்தப் பிப்ரவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படமாக முதன் முதலாகத் தமிழ் மொழியில் அமைந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அத்திரைப்படத்தின் தலைப்பு ‘மல்லி’

‘மல்லி’ என்ற இச்சிறார் திரைப்படம் சந்தோஷ் சிவன் என்பவரால் இயக்கப்பட்ட திரைப்படமாகும். ஸ்வேதா, வனிதா போன்ற குழந்தை நட்சத்திரங்களோடு ஜனகராஜ் போன்ற ஜனரஞ்சக நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

காட்டுச்சூழலில் வளரும் ‘மல்லி’ எனும் பழங்குடியினச் சிறுமியைச் சுற்றி இத்திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்திரைக்கதை நிகழும் காலம் பள்ளி விடுமுறை காலமாகத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குக் காட்டுப் பகுதிக்கு வருகை தரும் வன அலுவலரின் மகள் குக்கூவுக்கும் காட்டிலேயே வளர்ந்து வரும் மல்லிக்கும் நட்பு உண்டாகிறது.

மல்லி கனவுகளில் வாழும் சுட்டிப் பெண். குக்கூ காது கேளாத வாய் பேச முடியாத சிறப்புக் குழந்தை. குக்கூவுக்குக் காடு முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் ஆசை. காட்டில் இருக்கும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு அவள் காட்டைச் சுற்றிப் பார்ப்பதைத் தந்தையும் பாதுகாவலரும் தடுக்கும் நிலையில் மல்லியின் நட்பு குக்கூவிற்குப் பிடித்துப் போகிறது. மல்லிக்கும் குக்கூவைப் பிடித்துப் போகிறது.

மல்லிக்கு வயதான தோழர்களாகக் கதைசொல்லிப் பாட்டியும், லெட்டர் மாமா எனும் தபால்கார மாமாவும் இருக்கிறார்கள். கதைசொல்லிப் பாட்டி மூலமாக மயில் கடவுளின் சக்தி பற்றி அறிந்து கொள்கிறாள் மல்லி. மயில் கடவுள் சக்தியினால் நீலநிற மணி கிடைத்தால் வாய் பேசாத உயிர்களும் பேசும் என்பதை அறிந்ததிலிருந்து அம்மணியை எப்படியாவது அடைந்து அதன் மூலமாக அவளது தோழியான குக்கூவுக்குப் பேசும் திறனைக் கொண்டு வந்து விட வேண்டும் என்று கனவு காண்கிறாள் மல்லி. அத்துடன் அழகான பட்டுப்பாவாடை சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்கிற கனவும் மல்லிக்கு இருக்கிறது. இவ்விரு கனவுகளும் எவ்வாறு நிறைவேறுகின்றன என்பதை அடுத்தடுத்து நிகழும் திரைக்காட்சிகள் காட்டுகின்றன.

அஞ்சலகத்தில் வேலை பார்க்கும் மல்லியின் லெட்டர் மாமா மாறுதலில் சென்று விடுகிறார். அவர் மல்லியின் பட்டுச்சட்டைக் கனவை அன்புப் பரிசாக அனுப்பி வைத்து நிறைவேற்றுகிறார். இப்படியாக மல்லியின் ஒரு கனவு நிறைவேறுகிறது.

அப்பட்டுச் சட்டையை அணிந்து மகிழ்ச்சியாகப் போகும் போது காட்டில் வேட்டைக்காரர்களால் காயம்படும் மானைக் காப்பாற்றுகிறாள் மல்லி. காயம்பட்ட மானுக்காக தன்னுடைய கனவான பட்டுப்பாவாடையைக் கிழித்துக் கட்டுப் போடுகிறாள். மானை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சேர்த்துக் காப்பாற்றியும் விடுகிறாள். அவளது நல்ல மனதுக்கு மயில் கடவுள் மனமிரங்கி நீல மணியைக் காட்டுவது போலக் குளத்து நீரில் ஓர் இலை மேல் நீலமணியைக் கண்டடைகிறாள் மல்லி.

நீல மணியை தான் வைத்திருக்கும் மணிச் சரங்களோடு கோர்த்து விடுமுறை முடிந்து ஜீப்பில் கிளம்பிச் சென்று கொண்டிருக்கும் தோழி குக்கூவிற்கு ஓடிச் சென்று வழிமறித்து மாட்டி விடுகிறாள். ஜீப் கிளம்பிச் செல்கிறது. மல்லி தன்னடைய தோழியான குக்கூ மணியை அணிந்த பிறகு பேசுவதாகக் கனவு காணத் தொடங்குகிறாள். அத்துடன் இத்திரைப்படம் நிறைவு பெறுகிறது.

சக உயிர்கள் பால் அன்பு செலுத்துவதையும் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் மீது நேசம் கொள்வதையும் வலியுறுத்தும் இத்திரைப்படம் பள்ளிச் சிறார்களைக் கவரும் அற்புதமான திரைப்படமாகும்.

பிப்ரவரி 13, 2023 லிருந்து பிப்ரவரி 17, 2023 வரையிலான நாட்களில் இத்திரைப்படத்தை ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டலாம்.

இத்திரைப்படத்தைக் காணவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://drive.google.com/file/d/19hV3KHBlkbi7SUKs75MkXpW9Uu-aYGnn/view

*****

Wednesday, 8 February 2023

ஜனவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம்

ஜனவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம்

ஜனவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படமாக ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய திரைப்படமாகும்.

இயந்திர கதியில் மாறிக் கொண்டிருக்கும் உலகைப் பற்றி நகைச்சுவையுடன் இத்திரைப்படம் பேசுகிறது. இயந்திரங்களைப் பயன்படுத்தும் மனிதர்கள் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருப்பதை இத்திரைப்படம் சுட்டிக் காட்டுகிறது. மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் மனிதர்களை இயந்திரங்களாக மாற்றிக் கொண்டிருப்பதையும் இத்திரைப்படம் சுவாரசியமாகக் காட்சிப்படுத்துகிறது.

இயந்திரங்களைக் கொண்டு மனிதர்களை நிர்வகிக்க முயன்றால் என்ன நிகழும் என்பதையும் இத்திரைப்படம் நகைச்சுவையுடன் இந்த உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.

இத்திரைப்படம் 1936 இல் வெளியானது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படாக இருந்தாலும் இத்திரைப்படம் இக்காலத்துக்கும் பொருந்துவதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://youtu.be/fCkFjlR7-JQ

*****

Saturday, 3 December 2022

ஷ்வாஸ் (SHWAAS) சிறுவர் திரைப்படத்தைக் காண…

ஷ்வாஸ் (SHWAAS) சிறுவர் திரைப்படத்தைக் காண…

திரைப்படம் குறித்த செய்திகள்

Ø ஷ்வாஸ் (Shwaas, மராத்தி : श्वास ) என்பது 2004 இல் வெளியான ஒரு மராத்தி திரைப்படம் ஆகும்.

Ø இது 2004 ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பபட்டது.

Ø அங்கு சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதில் 6 வது இடத்தைப் பிடித்தது.

Ø இதன் கதைக்களம் புனேவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

Ø இப்படம் குறைந்த செலவில் ரூபாய் 30 லட்சம் (3 மில்லியன்) செலவில் தயாரிக்கபட்டது.

Ø ஷ்வான் 2004 ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது.

Ø 50 ஆண்டுகளுக்குப் பிறகு மராத்திய திரைப்படம் பெற்ற தேசிய விருது இதுவாகும்.

Ø அறிமுக இயக்குனர் சந்தீப் சாவந்த் இயக்கிய, இப்படம் 30 நாட்களில் சிந்துதுர்க், கொங்கண், புனே, மும்பையில் உள்ள கே.இ.எம் மருத்துவமனை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.

Ø தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை முடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது. ஷ்வாஸ் "மராத்தி திரையுலகின் குறிப்பிடத்தக்க திருப்பம்" என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

Ø இதன் வெற்றிக்குப் பிறகு, இந்தி, வங்காளி, தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்டது.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள்

Ø அஷ்வின் சித்தலே (பரசுராம் விசாரே, விழித்திரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்)

Ø அருண் நலவாடே (பரசுராமின் தாத்தா அவனை மும்பைக்கு அழைத்துச் செல்கிறார்)

Ø சந்தீப் குல்கர்னி (பரசுராமின் மருத்துவர் மிலிந்த் சானே)

Ø அம்ருதா சுபாஷ் ( அசவரி என்ற மருத்துவ சமூக சேவகர்)

Ø கணேஷ் மஞ்ச்ரேக்கர் ( பரசுராம் மற்றும் தாத்தாவுடன் மும்பைக்கு வரும் பரசுராமின் மாமா திவாகர்)

Ø அஷ்வினி கிரி (கிராமத்தில் தங்குகியுள்ள பரசுராமின் தாய்).

Ø விபாவாரி தேஷ்பாண்டே வரவேற்பாளராக

இப்படத்தின் சுருக்கமான கதை

மிக அரிதான கண் புற்றுநோயால் பாதிக்கபட்ட தன் பேரனை காப்பாற்றப் போராடுகிறார் அவன் தாத்தா. ஆனால் அவன் உயிரோடு வாழவேண்டுமானால் அவன் கண்கள் இரண்டையும் நீக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அவரிடம் கூறுகின்றனர். இந்த உண்மையை எப்படி தன் பேரனிடம் சொல்லி புரியவைப்பது என்று தாத்தா தவிக்கிறார். இறுதியில் இது அவருக்கு எவ்வாறு சாத்தியமானது என்பதே கதையாகும்.

இப்படம் பெற்றுள்ள விருதுகள்

இந்த படம் தேசிய மற்றும் மாநில அளவில் பல விருதுகளை பெற்றது. ஷ்வாஸ் மகாராஷ்டிரா அரசு திரைப்பட விருதையும், பின்னர் இந்தியாவின் மிக உயர்ந்ததான தேசிய திரைப்பட விருதையும் வென்றது. 1954 க்குப் பிறகு முதல் முறையாக மராத்தி திரைப்படத்துக்கு விருதைக் கொண்டுவந்தது. அஸ்வின் சித்தாலே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை வென்றான்.

2003: சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது

2003: சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய திரைப்பட விருது - அஷ்வின் சிடலே

இப்படத்தின் தமிழ் விமர்சனத்தைக் காண…

இப்படத்தைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்யவும்.

 Click Here to Download

*****