ஆகஸ்ட் 2023 – சிறார் திரைப்படம் – நிலா
ஆகஸ்ட் 2023 ஆம் மாதத்திற்குப்
பள்ளிகளில் திரையிடப்பட வேண்டிய சிறார் திரைப்படமாக ‘நிலா’ என்ற சிறார் திரைப்படம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் ஞாநி என்ற
எழுத்தாளர் எழுதி, இயக்கிய திரைப்படமாகும். அவர் தனது ஞானபாநு என்ற தயாரிப்பு நிறுவனம்
மூலமாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் வெகுஜனப் பரப்பில் நன்கு அறியப்பட்ட
நடிகரான நாசர் அரசராக நடித்துள்ளார். நாடகக் கலையைப் பள்ளிகள் தோறும் கொண்டு சேர்க்கும்
பணியைச் செய்யும் வேலு சரவணன் கோமாளியாக நடித்துள்ளார். மற்றும் பலர் இளவரசி, மருத்துவர்,
அமைச்சர், மந்திரவாதி, கணிதர் ஆகிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிலவைக் கேட்கும் இளவரசியின்
ஆசையை அரசர் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதே இத்திரைப்படத்தின் மையம் ஆகும்.
இளவரசி கயல்விழிக்கு உடல்நலம்
சரியில்லாமல் போகிறது. மருத்துவர் வருகிறார். இளவரசியைப் பரிசோதித்த மருத்துவர் அவரின்
ஆசையை நிறைவேற்றினால் நோய் சரியாகும் என்கிறார். இளவரசியோ தன்னுடைய ஆசையாகத் தனக்கு
வானில் இருக்கும் நிலா வேண்டும் என்கிறார்.
இளவரசியின் ஆசையை எப்படி
நிறைவேற்றுவது என்று யோசிக்கிறார் அரசர். அவர் அமைச்சர், மந்திரவாதி, கணிதர், கோமாளி
ஆகியோரிடம் ஆலோசனை கேட்கிறார். அமைச்சர், மந்திரவாதி, கணிதர் ஆகியோர் சொல்லும் ஆலோசனைகள்
அரசருக்கு ஏற்புடையதாக இல்லாமல் போக அவர் கோமாளியின் யோசனையை ஏற்கிறார். கோமாளியின்
யோசனையின் படி இளவரசியிடமே அவரது ஆசையை எப்படி நிறைவேற்றுவது எனக் கேட்கலாம் என முடிவாகிறது.
கோமாளி இளவரசியிடம் பேசுகிறார்.
இளவரசி சொன்னபடி வான் நிலவைத் தங்கத்தில் சிறிய வடிவில் செய்து அதை கழுத்தில் அணியும்
ஆபரணத்தில் அமைத்துக் கொண்டு வந்து கொடுத்து ஆசையை நிறைவேற்றுகிறார்.
இளவரசியின் ஆசையை நிறைவேற்றிய
பின் அரசருக்கு ஒரு சந்தேகம் வருகிறது. வானில் இரவு நிலவு வருவதை இளவரசி பார்த்தால்
தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த நிலா எது என்று கேள்வி கேட்பாளோ என்ற அச்சம் அரசரை ஆட்கொள்கிறது.
மீண்டும் இந்த சந்தேகத்தைப்
போக்கிக் கொள்ள அவர் அமைச்சர், மந்திரவாதி, கணிதர் மற்றும் கோமாளியின் உதவியை நாடுகிறார்.
வழக்கம் போலவே அரசருக்கு அமைச்சர், மந்திரவாதி, கணிதர் ஆகியோரின் யோசனைகள் சரியாகப்
படவில்லை. கோமாளியின் யோசனைப்படி இச்சந்தேகத்திற்கான தீர்வை இளவரசியிடம் பேசி அறிந்து
கொள்வது என்ற முடிவை ஏற்றுக் கொள்கிறார்.
ஒரு பல் விழுந்தால் இன்னொரு
பல் முளைப்பதைப் போல, ஒரு பூவைப் பறித்தால் இன்னொரு பூ பூப்பதைப் போல வானில் ஒரு நிலவை
எடுத்தால் இன்னொரு நிலவு முளைத்து விடும் என்று அரசரின் சந்தேகத்தைத் தீர்ப்பதைப் போல
இளவரசி கோமாளியிடம் அதற்கு ஒரு தீர்வைச் சொல்கிறார்.
இப்படியாகக் கோமாளி இந்த
முறையும் இளவரசியோடு உரையாடி அரசரின் சந்தேகத்தைப் போக்கும் தீர்வைத் தருகிறார். அரசர்
மகிழ்கிறார்.
குழந்தைகளின் பிரச்சனைகளுக்குக்
குழந்தைகளின் மனநிலையில் யோசிக்கும் போதுதான் தீர்வுகள் கிடைக்கும் என்பதைச் சொல்லும்
இக்கதை, குழந்தைகளின் பிரச்சனைகளுக்குப் பெரியவர்களின் மனநிலையில் யோசித்தால் தீர்வு
கிடைக்காது என்பதையும் அழுத்தமாக முன் வைக்கிறது. குழந்தைகளிடம் உரையாடினால் அவர்களது
பிரச்சனைகளை எளிதாகத் தீர்த்து வைக்க முடியும் என்பதையும் இச்சிறார் திரைப்படம் எடுத்துச்
சொல்லி குழந்தைளுடனான உரையாடல் பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறது.
குழந்தைகள் விரும்பும் வகையில்
இக்கதை அமைக்கப்பட்டிருப்பதும், பாடல் மற்றும் பின்னணிகள் அமைந்திருப்பதும் இச்சிறார்
திரைப்படத்தின் சிறப்பம்சமாகும். இத்திரைப்படத்தைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இத்திரைப்படம் குறித்த விளக்க
காணொளியினைக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
No comments:
Post a Comment