செப்டம்பர் 2023 மாத சிறார் திரைப்படம் – ‘ஹருண் அருண்’
செப்டம்பர் 2023 மாதத்திற்கான
சிறார் திரைப்படமாக ‘ஹருண் அருண்’ என்ற திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம்
குஜராத்தி மொழி திரைப்படமாகும்.
‘ஹருண் அருண்’ திரைப்படத்தை
இயக்கியவர் வினோத் கணத்ரா. மனிதர்கள் உருவாக்கியிருக்கும் பாகுபாடுகளைக் கடந்து இறுதியில்
அன்பே வெல்கிறது என்பதே இச்சிறார் திரைப்படத்தின் மையக்கரு ஆகும்.
இச்சிறார் திரைப்படத்தின் கதை
ஹருண் என்பவன் பாகிஸ்தானைச்
சேர்ந்த இஸ்லாமியச் சிறுவன் ஆவான். அவன் தாத்தாவுடன் பாகிஸ்தானிலிருந்து ஹட்ச் பாலைவனம்
வழியாக இந்தியா வரும் போது தாத்தாவிடமிருந்து வழிதவறி விடுகிறான். வழிதவறிய ஹருண் குழந்தைகள்
நிறைந்த ஓர் இந்தியக் குடும்பத்தினரிடம் தஞ்சம் அடைகிறான். ஹருண் என்ற அவனது பெயரை
அக்குடும்பத்தினர் அருண் எனத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். இப்படியாக ஹருண் அருணாகிறான்.
இதையே இயக்குநர் படத்தலைப்பாக வைத்துள்ளார்.
அருணாகி விட்ட ஹருண் தன்
அன்பால் அக்குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் மனதில் இடம் பிடிக்கிறான். அவன் பாகிஸ்தானைச்
சேர்ந்த இஸ்லாமிய சிறுவன் என்று கண்டுபிடிக்கப்படும் போது அவனைக் கிராமத்தினர் சந்தேகிக்கின்றனர்.
அவர்களின் சந்தேகங்களையும் பாகுபாட்டு உணர்வுகளையும் கடந்து அன்பால் ஹருண் அனைவர் மனதையும்
வெல்கிறான். இதுவே இத்திரைப்படத்தின் சுருக்கமான கதையாகும்.
குழந்தைகளின் மனம் பாகுபாடு
அறியாதது, வேறுபாடுகளை உணராது என்பதை இத்திரைப்படம் உணர்வு ரீதியாகக் காட்சிப்படுத்துகிறது.
இக்காட்சிப்படுத்தல் குழந்தைகளும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற உண்மையை நிறுவுகிறது.
குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த மதமோ, இனமோ, சாதியோ முக்கியமில்லை, அன்பே முக்கியம்
என்பதை இத்திரைப்படம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளிடம்
கல்வி முறை கொண்டு சேர்க்க வேண்டிய சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும்
இத்திரைப்படத்தைக் குழந்தைகள் பார்த்து மகிழ்வது விரும்பத்தக்கதாகும்.
திரைப்படம் பெற்ற விருதுகள்
இத்திரைப்படம் ஆறு சர்வதேச
விருதுகளைப் பெற்றுள்ளது. அவையாவன,
1. அமைதிக்கான சிகாகோ சர்வதேசக்
குழந்தைகள் திரைப்பட விருது
2. சிறந்த இளையோருக்கான டாக்கா
சர்வதேச திரைப்பட விருது
3. டிரான்ஸ் மீடியா விமர்சகர்கள்
விருது
4. மனிதநேய ரிமோஸ்கி சர்வதேச
திரைப்பட விழா விருது
5. இலங்கையின் ஆசிய ஒளி புத்த
திரைப்பட விழா விருது
6. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான
ஜெர்மனியின் ஆக்பர்க் குழந்தைகள் திரைப்பட விழா விருது
திரையிடலுக்குப் பின் குழந்தைகளோடு கலந்துரையாடுவதற்கான வினாக்கள்
1. இத்திரைப்படம் உங்களுக்குப்
பிடித்துள்ளதா?
2. இத்திரைப்படத்தின் மையக்கருத்தாக
நீங்கள் அறிவது யாது?
3. இத்திரைப்படத்தில் உங்களைக்
கவர்ந்த பாத்திரம் எது?
4. இத்திரைப்படத்தில் உங்களுக்குப்
பிடித்த காட்சி எது?
5. இத்திரைப்படத்தின் கதையைச்
சுருக்கமாக உங்கள் நடையில் கூற முடியுமா?
6. இத்திரைப்படத்தில் உங்களை
நடிக்கச் சொன்னால் நீங்கள் எந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க விரும்புவீர்கள்?
7. இத்திரைப்படத்தின் முடிவு
வேறு எப்படி அமைந்திருக்கலாம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
நன்றி!
வணக்கம்!
இத்திரைப்படத்தைக் காண கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
இத்திரைப்படம் குறித்த மேலதிக விவரங்களைப் பெற கீழே உள்ள காணொளியை இயக்கவும்.
*****
No comments:
Post a Comment