மெய்ப்பொருள் கண்டு பொய்ப்பொருளை விலக்குங்கள்!
(குறள் கதைகள் – 4)
உலை வாயை மூட முடியும். ஊர்
வாயை மூட முடியுமா? எவ்வளவு அர்த்தம் பொதிந்த மொழி இது. ஒவ்வொரு சம்பவம் குறித்தும்
ஊருக்கு ஒரு கருத்து உண்டாகி விடுகிறது. அதை அவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஓர் ஊருக்கு முனிவர் ஒருவர்
வந்தார். அவருக்கு அந்த ஊரில் இருந்த ஒருவர் தினமும் பால் கொண்டு போய்க் கொடுத்தார்.
முனிவரைக் கண்டதும் அவருக்குள் ஊற்றெடுத்த அன்பின் காரணமாக அவர் அந்தக் காரியத்தைச்
செய்தார். முனிவரும் அதைச் சந்தோஷமாக வாங்கிக் குடித்தார்.
ஒரு நாள் திடீரென அடித்த
சூறைக் காற்றில் முனிவருக்குப் பால் கொடுத்தவரின் வீடு விழுந்து விட்டது. ஊரில் வேறு
யாருடைய வீடும் விழவில்லை. பால் கொடுத்தவரின் வீடு மட்டும் விழுந்து விட்டது. முனிவருக்குப்
பால் கொடுத்ததால்தான் அவருடைய வீடு விழுந்து விட்டதாக ஊரில் எல்லாரும் பேச ஆரம்பித்து
விட்டார்கள். அவரோ அதை பெரிதுபடுத்தவில்லை. முனிவர் மேல் இருந்த அன்பின் காரணமாகத் தான் பால் கொடுத்ததாகவும் அதற்கும் வீடு இடிந்து
விழுந்ததற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று அவர் சொல்லிப் பார்த்தார். அதை யாரும்
கேட்பதாகத் தெரியவில்லை.
அவருடைய வீடு இடிந்து விட்டதே.
இடிந்த வீட்டை மீண்டும் கட்ட வேண்டுமே. சரி காரியத்தைப் பார்ப்போம் என்று புதிய வீடு
கட்டுவதற்காக அஸ்திவாரங்களைப் போட குழிகளைத் தோண்டினார். அப்போது அவருக்கு ஒரு தங்கப்
புதையல் கிடைத்தது. அந்தப் புதையலைக் கொண்டு அவர் முன்பிருந்ததை விட வீட்டைப் பெரிதாக
அழகாகக் கட்டிக் கொண்டு விட்டார்.
இதைப் பார்த்த ஊர்க்காரர்கள்
முனிவருக்குப் பால் கொடுத்ததால்தான் அவருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்ததாகப் பேசிக்
கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் எதேச்சையாகத்தான் நடந்தது என்று அவர் சொல்லிப்
பார்த்தார். அதையும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.
மக்கள் தாங்களும் அந்த அதிர்ஷடத்தைப்
பெற ஒவ்வொருவரும் முனிவருக்குப் பால் கொடுப்பதெனவும் விரைவில் சூறாவளி வந்து தங்கள்
வீடும் விழுந்து தங்களுக்கும் புதையல் கிடைக்க வேண்டும் எனவும் ஆசைப்பட ஆரம்பித்தனர்.
விளைவு, ஒவ்வொருவரும் பால் சொம்போடு முனிவரை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஊர் மக்களே திரண்டு வந்து
பாலைக் கொடுத்தால், முனிவர் எவ்வளவு பாலைக் குடிப்பார்? அவரால் பாலைக் குடிக்க முடியாவிட்டாலும்
குடியுங்கள் என்று மல்லுகட்ட ஆரம்பித்தார்கள். முனிவர் பார்த்தார் இது ஏது பிரச்சனையாக
இருக்கிறதே, பால் குடித்தே தமக்குப் பால் ஊற்றும் படி ஆகி விடும் போலிருக்கிறதே என்று
அந்த ஊரை விட்டே ஓடி விட்டார்.
இப்படித்தான் ஊர் வாய் இருக்கிறது.
ஒரு துரதிர்ஷ்டம் நிகழ்ந்தால் அதற்கு ஒரு காரணம் சொல்கிறது. அதிர்ஷ்டம் நிகழ்ந்தால்
அதற்கு ஒரு காரணம் சொல்கிறது. இரண்டு காரணங்களும் ஆழமான காரணங்களாக இருப்பதில்லை. மேம்போக்கான
காரணங்கள். இந்த மேம்போக்கான காரணங்களை அறிவு கொண்டு யோசிக்காமல் போனால் என்ன ஆகும்?
நாம் காண்பது பொய்ப்பொருளாக இருக்கும், மெய்ப்பொருளாக இருக்காது.
இதற்கு திருவள்ளுவர் ஒரு
தீர்வைச் சொல்கிறார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்
காண வேண்டும் என்கிறார். திருவள்ளுவர் என்ன அழகாகச் சொல்கிறார் பாருங்கள்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள், 423)
ஊர் ஆயிரம் சொல்லட்டுமே.
உலகம் அதற்கு ஒத்து ஊதட்டுமே. அதனால் என்ன? நீங்கள் மெய்ப்பொருள் என்ன என்பதை வள்ளுவர்
வழி நின்று காணுங்கள்.
*****
No comments:
Post a Comment