Sunday, 10 September 2023

பணம் தொடர்பான ஆறு பழக்க வழக்கங்கள்

பணம் தொடர்பான ஆறு பழக்க வழக்கங்கள்

பணம் தொடர்பான ஆறு பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பவர்கள் விரைவில் பணக்காரர்கள் ஆகிறார்கள். அந்த ஆறு பழக்க வழக்கங்கள் பற்றி இந்தப் பத்தியில் காண்போம்.

1. முதல் செலவு முதலீடு

பணம் கைக்கு வந்ததும் நாம் செய்யும் முதல் வேலை செலவு. இதை பணம் தொடர்பான நல்ல பழக்க வழக்கமாகச் சொல்ல முடியாது. பணம் தொடர்பான நல்ல பழக்கவழக்கம் என்றால் பணம் கைக்கு வந்ததும் அதை முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டிற்கே முதலிடம் கொடுக்க வேண்டும். செலவுக்கு அடுத்த இடம்தான் கொடுக்க வேண்டும்.

2. வரவுக்குள் செலவு

கைக்கு வரும் பணத்தில் 30 சதவீதத்தை முதலீட்டிற்காக ஒதுக்க வேண்டும். எஞ்சிய 70 சதவீதத்தைச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டும். அதிலும் சிக்கனமாக இருந்து சேமித்துச் சேமித்த தொகையை முதலீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இதைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கைக்கு வரும் பணத்தில் 30 சதவீதம் முதலீடாகவும், 50 சதவீதம் வீட்டுச் செலவாகவும், 20 சதவீதம் பொழுதுப் போக்குச் செலவாகவும் அமைய வேண்டும். இதில் 50 சதவீத வீட்டுச் செலவைச் சிக்கனமாக்கியும் பொழுதுப்போக்குச் செலவை இல்லாமல் செய்தும் கைக்கு வரும் பணத்தில் 60 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்பவர்கள் விரைவில் பணக்காரர்களாகி விடுகிறார்கள்.

3. முதலீட்டு அறிவு

முதலீட்டு அறிவு என்பது சரியான முதலீடுகளைச் செய்வதும், நிதி மோசடிகளில் சிக்கிக் கொள்ளாததும் ஆகும். இதற்கு முதலீடு குறித்த அறிவு அவசியம் தேவை. இதற்கு உலகின் தலைசிறந்த முதலீட்டாளர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் முதலீடு குறித்த சிறந்த நூல்களைப் படிப்பதும் நல்ல வழியாகும்.

இதற்காக வாரன் பப்பெட், பீட்டர் லிஞ்ச் போன்றோர் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். பெஞ்சமின் கிரகாம் எழுதிய ‘இன்டலிஜென்ட் இன்வெஸ்டர்’ போன்ற நூல்களைப் படிக்கலாம்.

4. கடன் மேலாண்மை

தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய, முதலீட்டைப் பெருக்க நீங்கள் கடன் வாங்கலாம். அந்தக் கடனும் குறைந்த வட்டியில் வாங்குவதாக இருக்க வேண்டும். மற்றபடி வீடு வாங்கவோ, மகிழுந்து வாங்கவோ, அலைபேசி, தொலைக்காட்சி போன்ற போழுதுபோக்குச் சாதனங்கள் வாங்கவோ கடன் வாங்குவது என்பது வளர்ச்சிக்காக வாங்கும் கடன் வகையில் வராது. இது போன்ற கடன்கள் உங்கள் செல்வ வளத்தை நீங்களே அழித்துக் கொள்வதற்காக வாங்கும் கடன்களாக அமையும்.

5. விரைவாக முதலீட்டை ஆரம்பித்தல்

முதலீட்டை எப்போது ஆரம்பிப்பது? உங்களுக்கு எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போதே உங்கள் முதலீட்டை ஆரம்பித்து விடுங்கள். உங்களுக்கு ஐந்து வயதாக இருக்கும் போது உங்கள் மாமாவோ அத்தையோ அல்லது உங்கள் பெற்றோரோ உறவினரோ பத்து ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தால் அந்த வயதிலேயே உங்கள் முதலீட்டை நீங்கள் ஆரம்பித்து விடலாம். எவ்வளவு விரைவாக உங்கள் முதலீட்டை ஆரம்பிக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் உங்கள் முதலீட்டிலிருந்து சம்பாதிக்கத் தொடங்கலாம்.

6. அறிவுப் பூர்வமாகச் செயல்படுதல்

முதலீட்டில் அறிவுப் பூர்வமாகச் செயல்படுதல் என்றால் உணர்வுப் பூர்வமாகச் செயல்படக் கூடாது என்பது பொருள். பணம் இருக்கிறது என்பதற்காக உச்சபட்ச விலையில் விற்பனையாகும் ஒன்றில் முதலீட்டைச் செய்து விடக் கூடாது. விலை இறங்கி மலிவு விலைக்கோ அல்லது அடிமாட்டு விலைக்கோ ஒரு சம்பாதிக்கும் சொத்து விற்பனையாகும் வரை காத்திருக்க வேண்டும். பணத்தோடு எப்போதும் தயார் நிலையில் இருந்து எப்போது முதலீடு செய்ய வேண்டுமோ அப்போது முதலீடு செய்வதே அறிவுப்பூர்வமாகச் செயல்படுதல் ஆகும். கத்திரிக்காய் விலை வீழ்ச்சி அடையும் போது வற்றல் போடுவதைப் போலவே விலை வீழ்ச்சி அடையும் காலமே முதலீட்டைச் செய்ய அருமையான தருணமாகும். பணம் இருக்கிறது என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு எதிலாவது முதலீட்டைச் செய்வதை எப்போதும் தவிர்க்க வேண்டும். அதுவே முதலீட்டு ஒழுங்கு எனப்படுகிறது.

இந்த ஆறு பணம் சார்ந்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றினால் நீங்கள் விரைவில் பணக்காரர் ஆவது உறுதி.

இத்தகவல்கள் / விவரங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு பயனுள்ள தகவலோடு / விவரங்களோடு இதே வலைப்பூவில் (www.teachervijayaraman.blogspot.com) சந்திப்போம்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment