Showing posts with label surrealism. Show all posts
Showing posts with label surrealism. Show all posts

Friday, 12 July 2024

ஏன் சர்ரியலிச ஓவிய பாணி உருவானது?

முதல் உலகப் போரின் முடிவில் மரணம், சோகம், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகியவற்றால் மனித இனம் புறக்கணிப்பைச் சந்தித்த போது அதிலிருந்து விடைபெற யதார்த்தத்தைக் கேள்வி கேட்கும் மாய உலகங்களை உருவாக்கி எழுச்சியைத் தர சர்ரியலிசம் என்கிற ஓவிய பாணி உருவானது.

சர்ரியலிசம் என்பது தமிழில் மிகை எதார்த்தவாதம் என்றும் அடிமன வெளிப்பாட்டியம் என்றும் மீமெய்மையியல் என்றும் குறிப்பிடப்படுகிறது.

மன விடுதலை மூலம் தனிமனித விடுதலையும் சமூக விடுதலையும் சாத்தியம் என்பது இக்கோட்பாட்டின் முக்கிய நம்பிக்கையாகும். இக்கோட்பாட்டை உருவாக்கிய முன்னோடி ஆன்ட்ரே பிரெட்டன் ஆவார். ஓவியத்தில் சர்ரியலிச பாணியைக் கையாண்ட இணையற்றவராகக் கருதப்படுபவர் சால்வடார் டாலி ஆவார்.

எதார்த்தத்தோடு மனித சிந்தனை மற்றும் கற்பனை ஒன்றிணையும் போது சர்ரியலிசப் பாணி ஓவியங்களும் இலக்கியங்களும் பிறக்கின்றன.

மனதின் சிக்கலான நிலைகளையும் போக்குகளையும் சர்ரியலிச இலக்கியங்களும் ஓவியங்களும் பிரதிபலிக்கின்றன. ஆழ்மனதை அதன் போக்கில் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துகின்றன. கனவுகள், ஆழ்மன பிரக்ஞைகள், மனச்சிதைவுகள் மற்றும் மனமும் மனம் சார்ந்த அனைத்து வித வெளிப்பாடுகளும் இதன் கருப்பொருளாகின்றன.