Showing posts with label Learning Techniques. Show all posts
Showing posts with label Learning Techniques. Show all posts

Thursday, 29 May 2025

இப்படிப் படித்துப் பாருங்கள்!

இப்படிப் படித்துப் பாருங்கள்! எப்படி இருக்கிறது என்ற கூறுங்கள்!

எப்படி படிக்க வேண்டுமோ அப்படிப் படித்தால் படிக்கும் அனுபவம் இனிமையாகவும் மதிப்பெண்களை அள்ளித் தருவதாகவும் இருக்கும். அதற்கு எப்படிப் படிக்க வேண்டும்? இப்படிப் படித்தால் நீங்கள் ஒருமுறை படித்தாலும் பலமுறைப் படித்ததற்குச் சமம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால்,

1. சத்தமிட்டுப் படியுங்கள்

சத்தமிட்டுப் படிக்கும் போது உங்கள் வாய், கண், காது ஆகிய மூன்று புலன்களும் இயங்குகின்றன. மனதுக்குள் படிக்கும் போது உங்கள் கண் என்கிற ஒரு புலன் மட்டுமே இயங்குகிறது. அதிகப் புலன்கள் இயங்கும் போது உங்கள் கவனம் கூடுதலாகிறது. மனமும் ஒருநிலைப்படுகிறது. சத்தமிட்டுப் படிப்பது உங்கள் நினைவில் பதிய ஏதுவாகிறது. மேலும் சத்தமிட்டுப் படிப்பது உங்கள் நீண்ட கால நினைவில் சேகரமாகிறது. மனதுக்குள் படிப்பது குறுகிய கால நினைவில் சேகரமாகிறது.

2. பாடங்களைப் படங்கள் ஆக்குங்கள்

நீங்கள் படிப்பது எழுத்துகளாக உள்ளன. எழுத்துகளாக நீங்கள் படிப்பதைப் படங்களாக மாற்றுங்கள். மூளையானது நினைவுகளைப் படங்களாகவே பதிவு செய்து கொள்கிறது. எழுத்துகளை நினைவில் கொள்வதை விட படங்களை நினைவில் கொள்வது எளிது. ஒரு சிறுநீரகத்தைப் பற்றிப் படிப்பதை விட, அதை நீங்கள் படம் வரைந்து பாகங்கள் குறித்துப் பார்த்து விட்டால் உங்களால் சிறுநீரகத்தை எப்போதும் மறக்க முடியாது.

3. மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள்

நீங்கள் அரை மணி நேரம் படித்தால் ஐந்து நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஐந்து நிமிட ஓய்வில் அரை மணி நேரத்தில் என்ன படித்தீர்கள் என்பதை மனதில் ஓட்டிப் பாருங்கள். இப்படிச் செய்தால் நீங்கள் படித்தது எப்போதும் மறக்காது.

4. விளக்கிச் சொல்லிப் பாருங்கள்

நீங்கள் படித்ததை மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்ல முடிகிறதா எனப் பாருங்கள். அப்படிச் சொல்ல முடிந்தால் நீங்கள் கற்றது உங்களுக்கு எப்போதும் மறக்காது. ஒருவேளை அப்படி விளக்கிச் சொல்ல யாரும் கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு நீங்களே விளக்கிச் சொல்லிப் பாருங்கள்.

5. குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள்

பல பக்கங்களில் நீங்கள் படித்ததைச் சில பக்கங்களில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுகளுக்கு நீங்கள் தயாராகும் போது பல பக்கங்களைச் சில மணி நேரங்களில் படித்து விட முடியாது. அப்போது சில பக்கங்களில் நீங்கள் எழுதிய குறிப்புகளைப் பார்ப்பது பல பக்கங்களைப் படித்துப் பார்த்தற்கான நினைவையும் நிறைவையும் தரும். இது தேர்வைத் தன்னம்பிக்கையோடும் படித்தவற்றை நினைவில் கொண்டு வந்து  திறம்பட எழுதவும் உங்களுக்கு உதவும்.

இந்த ஐந்து முறைகளில் படித்துப் பாருங்கள். படிப்பில் நீங்கள் முதலிடத்தில் இருப்பீர்கள். படிப்பில் எப்போதும் நீங்கள் முதலிடத்தில் இருக்க வாழ்த்துகள்!

*****