Monday, 1 January 2024

2023 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘பன்ட்’!

2023 டிசம்பர் மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘பன்ட்’!

டிசம்பர் 3 மாற்றுத் திறனாளிகள் தினம். இத்தினத்தையொட்டி டிசம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்திய ‘பன்ட்’ என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. இத்திரைப்படம் கொரியன் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2007 இல் திரைக்கு வந்தது.

இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர்கள் பர்க் ஹ்யூ டே மற்றும் சோய் சுக் ஹ்வான். இத்திரைப்படத்தை இயக்கியவர் கதையாசிரியர்களில் ஒருவரான பர்க் ஹ்யூ டே.

டோங்கூ பதினோரு வயது நிரம்பியவன். பள்ளி செல்லும் சிறுவன். கற்றல் குறைபாடு உள்ள மெல்ல மலரும் மாணவன். பள்ளி இடைவேளையின் போது மற்ற மாணவர்களுக்குத் தண்ணீர் எடுத்து வரும் பணியை அவன் விரும்பிச் செய்கிறான். எனினும் மற்ற மாணவர்கள் டோங்கூவைக் கிண்டல் செய்கின்றனர். அவனது கற்றல் குறைபாட்டைக் கருத்தில் கொண்டு தங்கள் அருகில் டோங்கூ அமருவதையும் அவர்கள் விரும்புவதில்லை. அதை டோங்கூ பெரிது படுத்துவதில்லை. கிண்டல் செய்பவர்களைப் புன்னகையோடு எதிர்கொள்கிறான். டோங்கூ தன்னருகில் உட்காருவதை விரும்பாத சக மாணவன் ஒருவன் டோங்கூ கொண்டு வந்த தண்ணீர் பாத்திரத்தில் தவளையைப் போட்டு விடுகிறான். பள்ளியில் அது பெரிய பிரச்சனையாகிறது. அதைத் தொடர்ந்து வகுப்பறைகள் அனைத்திலும் தண்ணீர் கலங்கள் அமைக்கப்படுகின்றன. அது டோங்கூவுக்குப் பிடிக்காமல் வகுப்பறையில் இருக்கும் தண்ணீர் கலமொன்றைக் கீழே தள்ளி விடுகிறான்.

தொடர்ந்து டோங்கூ பள்ளிக்கு வருவதை அவனது வகுப்பாசிரியையும் பள்ளி நிர்வாகமும் விரும்பவில்லை. கற்றல் குறைபாடுள்ள டோங்கூ தேர்வெழுதினால் அது வகுப்பின் தேர்ச்சி விகிதத்தைப் பாதிக்கும் என்பதால் அவனை வகுப்பாசிரியை வேறு பள்ளியில் சேர்க்க சொல்கிறார். பள்ளி நிர்வாகமும் டோங்கூவைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்குமாறு பரிந்துரைக்கிறது. டோங்கூவின் தந்தைக்கு அந்த யோசனை பிடிக்கவில்லை. அவர் தன்னுடைய மகன் அதே பள்ளியில்தான் படிப்பான் என்று பிடிவாதமாகக் கூறுகிறார். அவர் தற்போது நடத்தி வரும் உணவகம் மற்றும் வீட்டிலிருந்து டோங்கூ வருவதற்கு அந்தப் பள்ளிதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார். டோங்கூவை அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவும் அந்த உள்ளூர் பள்ளிதான் வசதியாக இருக்கும் என்றும் நினைக்கிறார்.

இந்நிலையில் பள்ளியின் பேஸ்பால் அணியில் விளையாடும் மாணவன் ஒருவன் தண்ணீர் கொண்டு வருவதை இழுக்காகக் கருதி அந்த அணியிலிருந்தும் பள்ளியிலிருந்தும் வெளியேறப் போவதாகக் கூறி வெளியேறுகிறான். தண்ணீர் கொண்டு கொடுக்கும் பணியில் ஆர்வமாக உள்ள டோங்கூ அந்தப் பணியை விரும்பிச் செய்கிறான். இதனால் அவன் பள்ளியின் பேஸ்பால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறான்.

டோங்கூக்குப் பேஸ்பால் விளையாட்டு விதிகளைப் புரிந்து கொள்வதும், விதிகளுக்கு ஏற்ப விளையாடுவதும் சவாலாக இருக்கின்றன. பேஸ்பால் பயிற்சி ஆசிரியரும் டோங்குவிற்குப் பேஸ்பால் விளையாட்டை எவ்வளவோ ஆர்வமாகச் சொல்லிக் கொடுத்தும் அது முடியாமல் அலுத்துப் போகிறார். ஆனாலும் டோங்கூ பேஸ்பால் மைதானத்தையும், தண்ணீர் கொண்டு கொடுக்கும் பணியையும் நேசித்துச் செய்கிறான். பேஸ்பால் அணியில் இருப்பதால் டோங்கூ பள்ளியில் தொடர்ந்து பயில அனுமதிக்கப்படுகிறான்.

இதற்கிடையில் டோங்கூ தன்னருகில் அமரக் கூடாது என நினைத்து அவன் கொண்டு வந்த தண்ணீர் பாத்திரத்தில் தவளையைப் போட்ட மாணவன் டோங்கூவைப் புரிந்து கொள்கிறான். அவன் டோங்கூவின் நெருங்கிய நண்பனாகிறான். டோங்கூவிற்குப் பேஸ்பால் விளையாட்டைக் கற்றுத் தர முயல்கிறான். இருப்பினும் டோங்கூவுக்கு நண்பன் அளிக்கும் பயிற்சியைப் புரிந்து கொண்டு விளையாடுவது சிரமமாக இருக்கிறது.

இந்நிலையில் டோங்கூவின் அப்பாவிற்கு ஏற்படும் வயிற்றுவலி புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகத்தை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அத்துடன் டோங்கூவின் அப்பா அவர் நடத்தி வந்த உணவகத்தை அதே இடத்தில் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு இடையேயான பேஸ்பால் போட்டி நடைபெறுகிறது. டோங்கூவின் அப்பா மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை அறிந்து கொள்ள செல்கிறார். டோங்கூ பள்ளியின் பேஸ்பால் அணியோடு விளையாடச் செல்கிறான்.

முடிவில் டோங்கூவின் அப்பாவிற்கு ஏற்பட்ட வயிற்றுவலி புற்றுநோய் இல்லை என்ற முடிவு கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு அவர் டோங்கூ பேஸ்பால் விளையாடும் மைதானத்திற்கு வருகிறார். அங்கே பள்ளி அணியின் வெற்றியானது டோங்கூ விளையாடும் கடைசி ஆட்டத்தின் கையில் இருக்கிறது. டோங்கூ எதிரணியினர் வீசும் பந்தை அவனது நண்பன் சொல்லிக் கொடுத்த முறையின்படி பேஸ்பால் மட்டையால் தடுத்து விட்டு ஓடுகிறான். டோங்கூவின் பள்ளி அணியானது வெற்றி பெறுகிறது. டோங்கூவின் அப்பா, டோங்கூவின் நண்பன், டோங்கூவின் பேஸ்பால் பயிற்சி ஆசிரியர், டோங்கூவின் பேஸ்பால் அணியினர் அனைவரும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கின்றனர்.

படத்தின் நிறைவாக டோங்கூவின் அப்பா உணவகத்தையும் வீட்டையும் வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்கிறார். பேஸ்பால் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு டோங்கூ பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்குச் சரியாக வழியை நினைவில் வைத்துக் கொண்டு வந்து சேர்கிறான். அத்துடன் படம் நிறைவு பெறுகிறது.

கற்றல் குறைபாடு உள்ள சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இத்திரைப்படம் அழகாக எடுத்துக் காட்டுகிறது. சக மாணவர்களின் அக்கறையும் கரிசனமும் கற்றல் குறைபாட்டை மாற்றி அவர்களை இயல்பானவர்களாக மாற்றும் என்பதையும் இப்படம் காட்சிப்படுத்துகிறது. கற்றல் குறைபாட்டை நிவர்த்தி செய்ய விளையாட்டு உதவும் என்பதையும் இத்திரைப்படம் எடுத்துச் சொல்வதாக அமைகிறது.

பேஸ்பால் விளையாட்டோடு தொடர்புடைய ‘பன்ட்’ என்ற இத்திரைப்படத்தின் தலைப்பைக் குறிக்கும் இச்சொல்லானது பேஸ்பால் மட்டையால் வீசப்படும் பந்தை லேசாகத் தொடுதலை அல்லது தடுப்பதைக் குறிக்கிறது. சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளையும் அது போல நாம் லேசாக அரவணைத்தால் அவர்களும் மற்ற மாணவர்களைப் போல சாதிப்பார்கள் என்பதை இத்திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், கண்ணியம், நல்வாழ்வு குறித்து இத்திரைப்படம் பேசுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இத்திரைப்படம் எடுத்துரைக்கிறது. மாற்றுத்திறனாளிகள் குறித்த ஓர் அர்த்தமுள்ள கண்ணோட்டத்தை உருவாக்குவதே இத்திரைப்படத்தின் நோக்கமாகும். அந்நோக்கத்தை இத்திரைப்படம் நன்றாகவே நிறைவு செய்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி ஆர்வலர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான திரைப்படம் ‘பன்ட்’.

***** 

No comments:

Post a Comment