Sunday 19 November 2023

நவம்பர் 2023 ஆம் மாதத்திற்கான சிறார் திரைப்படம் – தி கிட்

நவம்பர் 2023 ஆம் மாதத்திற்கான சிறார் திரைப்படம் – தி கிட்

தி கிட் திரைப்பட விமர்சனம் :

தி கிட் என்ற திரைப்படம் 1921 இல் சார்லி சாப்ளின் நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரும் படத்தொகுப்பாளரும் சார்லி சாப்ளினே ஆவார். இத்திரைப்படத்தில் குழந்தையாக ஜாக்கி கூகன் நடித்துள்ளார். இத்திரைப்படம் அமெரிக்க மௌன நகைச்சுவை நாடக திரைப்படமாகும்.

தி கிட் என்ற இத்திரைப்படம் சார்லி சாப்ளினின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். இது அவரது சுயசரிதை படைப்பு ஆகும். இத்திரைப்படத்தை அவர் தனது குழந்தை பருவ அனுபவத்தின் அடிப்படையில் இயக்கியுள்ளார்.

நாடோடியான சாப்ளின் ஒரு தாயால் கைவிடப்பட்ட குழந்தையைத் தயக்கத்துடன் காப்பாற்றுகிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே தி கிட் என்ற திரைப்படத்தின் கதையாகும்.

சாப்ளின் குழந்தையை வளர்க்கிறார். அக்குழந்தையின் தாய் இறுதியில் குழந்தையைக் கேட்கும் போது சாப்ளினும் குழந்தை கூகனும் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இறுதியில் குழந்தை தாயிடம் சேர்கிறது. சாப்ளினும் குழந்தையை வந்து அடைகிறார். இவற்றை சார்லி சாப்ளின் தமக்கே உரிய நகைச்சுவை காட்சிகளுடன் திரைப்படமாக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் தேவையான உரையாடல்கள் படக்காட்சிகளிடையே வாக்கியங்களாக வெளிப்படுகின்றன.

இத்திரைப்படம் குழந்தைகளைக் கவரும் திரைப்படம் எனில் அது மிகையில்லை. சாப்ளின் பிழைப்பிற்காகக் குழந்தை கூகனைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கச் செய்வதும், பிறகு அவர் பழுது பார்ப்பவராகச் சென்று பழுது பார்த்து சம்பாதிப்பதும் குழந்தைகள் ரசிக்கும் வேடிக்கையான காட்சியாகப் படத்தில் இடம் பெற்றுள்ளது.

துவக்கம் முதல் இறுதி வரை குழந்தைகள் உணர்ச்சிகரமாகவும் சிரித்த வண்ணமாகவும் பார்க்கும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளையில் அமைந்த மௌன திரைப்படம் எனினும் இத்திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கமும் உண்டாக்கும் உணர்வுகளும் எக்காலத்திற்கும் பொருந்துவனவாகவே உள்ளன.

இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய மாகாணங்களின் தேசிய திரைப்பட பதிவேட்டில் பாதுகாப்பதற்கான சிறந்த திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விமர்சனத்தைக் காணொளியாகக் காண கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி இயக்கவும்.

*****

No comments:

Post a Comment