Wednesday, 1 November 2023

அக்டோபர் மாதத்திற்குரிய சிறார் திரைப்படம் – தி ஜங்கிள் கேங்

அக்டோபர் மாதத்திற்குரிய சிறார் திரைப்படம் – தி ஜங்கிள் கேங்

அக்டோபர் மாதத்திற்குரிய சிறார் திரைப்படமாக தி ஜங்கிள் கேங் என்ற திரைப்படத்தைப் பள்ளிக்கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது. இத்திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பண்ட் பார் நேச்சர் என்ற நிறுவனமும் எர்த் கேர் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இத்திரைப்படம் 2012 இல் வெளியானது. இத்திரைப்படத்தின் மொழி தமிழ் ஆகும்.

கிருஷ்னேண்டு போஸ் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே. இத்திரைப்படம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட வனவிலங்கு தொடர்பான அனிமேஷன் கலந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் நோக்கம் இந்தியாவின் பல்வேறு வன விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் குறித்து விளக்குவதாகும். அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் பங்கேற்க ஊக்குவிப்பதும் இத்திரைப்படத்தின் நோக்கமாகும்.

இத்திரைப்படத்தில் அனிமேஷன் கதாபாத்திரங்கள் நடித்துள்ளன. கருப்பு மான் ‘பூரா என்ற பெயரிலும், வாத்து ‘போ என்ற பெயரிலும் தேவாங்கு ‘குட்டு என்ற பெயரிலும் நடித்துள்ளன. இந்த மூன்று பாத்திரங்களும் இந்தியாவின் வடகிழக்கில் தொடங்கி மத்திய இந்தியாவின் வழியாக தெற்கே வந்தடைகின்றன. அப்படி வந்தடையும் வழியில் காண்டாமிருகம், புலி, யானை மற்றும் கரடி போன்ற பல்வேறு விலங்கினங்கள் குறித்த தகவல்களை உரையாடல்கள் வெளியே வெளிப்படுத்துகின்றன. இந்திய வன விலங்கினங்களின் வாழ்விடங்கள் பற்றியும் பேசுகின்றன. இந்திய வன விலங்குகளுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் பேசுகின்றன. வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசுகின்றன.

இத்திரைப்படத் தொடர் ஒவ்வொன்றின் இறுதியிலும் பூமியின் இயற்கை வளங்கள் அழிந்து வருவது சுட்டிக் காட்டப்படுகின்றது. குழந்தைகளும் மாணவர்களுமே அழிந்து வரும் இயற்கை வளங்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது. மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டியதன் அவசியத்தை இத்திரைப்படத் தொடர்கள் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் உணர்த்துகின்றன.

இத்திரைப்படத்திற்கு சின் இந்தியா கிட்ஸ் திரைப்பட விழா விருது வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 7வது சிஎம்எஸ் வடவரன் திரைப்பட திருவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது.

இத்திரைப்படத்தைக் கண்டு, களித்த பிறகு பின்வரும் வினாக்களை எழுப்பி ஆசிரியர் மாணவர்களோடு கலந்துரையாடுவது சிறப்பானது.

1. இத்திரைப்படம் உங்களுக்குப் பிடித்துள்ளதா?

2. இத்திரைப்படத்தின் மையக் கருத்து என்ன?

3. இத்திரைப்படம் எதைப் பற்றியது?

4. இத்திரைப்படத்தின் முக்கியமான சம்பவங்கள் யாவை?

5. இத்திரைப்படத்தில் உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் எது?

6. இத்திரைப்படத்தின் மூலம் நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

7. இத்திரைப்படத்தில் உங்களுக்குப் பிடித்த அம்சம் எது?

8. இத்திரைப்படம் குறித்த உங்களது கருத்தைச் சில வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.

9. இத்திரைப்படத்திற்கு ஒரு போஸ்டர் தயாரிக்கச் சொன்னால் எப்படித் தயாரிப்பீர்கள்?

10. இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களில் ஒன்றை வரையச் சொன்னால் நீங்கள் எந்தப் பாத்திரத்தை வரைவீர்கள்?

11. இத்திரைப்படத்தின் முடிவு வேறு எப்படியெல்லாம் அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

12. இத்திரைப்படம் குறித்த உங்கள் விமர்சனத்தை மூன்று நிமிடம் பேசுங்கள்.

13. இது போன்ற விலங்குகள் மற்றும் தாவரங்களைக் காப்பாற்றிப் பராமரிப்பது போன்ற கதைகள் இருந்தால் சொல்லுங்கள்.

14. இத்திரைப்படம் போன்ற ஒரு திரைப்படத்தை உங்கள் கற்பனையில் உருவாக்கி எடுக்கச் சொன்னால் எப்படி எடுப்பீர்கள்?

பின்வரும் வினாக்கள் மூலம் ஆசிரியர் மாணவர்களிடம் ஆர்வமூட்டும் வகையில் கலந்துரையாடி சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நலம் பயக்கும்.

இவ்விவரங்களைக் காணொளியாகக் காண கீழே உள்ள காணொளியை இயக்கிக் காணவும்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment