Sunday 26 January 2020

பள்ளிப் பார்வை & ஆண்டாய்வு நெறிமுறைகள்

பள்ளிப் பார்வை & ஆண்டாய்வு நெறிமுறைகள்

வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO) பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், நலத்திட்டங்கள் செயல்படுத்துதல், பள்ளி சுற்றுப்புறச் சூழல் ஆகியவை சிறந்து விளங்கிடப் பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் (Surprise Visit) மற்றும் ஆண்டாய்வு செய்தல் (Annual Inspection) மிகவும் அவசியமாகும். எனவே பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல், ஆண்டாய்வு மேற்கொள்ளும் போது கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பள்ளிக்கல்வி துறையால் அறிவுறுத்தப்படுகிறது.
1. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வையின் போது காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியக் கொடி ஏற்றுதல், கொடிப் பாட்டு, உறுதிமொழி, திருக்குறள் வாசித்தல், தலைப்புச் செய்திகள் வாசித்தல், பொது அறிவுச்செய்தி தெரிவித்தல், ஆசிரியர் அறநெறி உரை மற்றும் நாட்டுப்பண் பாடுதல் போன்றவை இடம்பெறுதலை உறுதி செய்தல் வேண்டும்.
2. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை முன் அறிவிப்பின்றி பார்வையிடும்போது ஒரு பள்ளியில் குறைந்தது 2 மணி நேரம் இருத்தல் வேண்டும்.
3. ஒரு மாதத்திற்குக் குறைந்தது 20 பள்ளிகள் முன் அறிவிப்பின்றி பார்வையும், 5 பள்ளிகள் ஆண்டாய்வும் மேற்கொள்ள வேண்டும்.
4. வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை மற்றும் ஆண்டாய்வின் போது அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன் மற்றும் கையெழுத்துப் பயிற்சியேடு, கட்டுரைப் பயிற்சியேடு திருத்தம், Graph பயிற்சியேடு, Geometry பயிற்சியேடு திருத்தம், Map drawing பயிற்சியேடு திருத்தம், மதிப்பெண் பதிவேடு (Progress Report) மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவேடு போன்றவற்றை ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் Achievement Register இல் மாணவர்களின் கற்றல் அடைவுகள் சார்ந்த பதிவுகள் அனைத்தும் முறையாக பதியப்பட்டுள்ளதா என்பதை ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும் .
5.யோகா, பாட இணை செயல்பாடுகள் பள்ளியில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தல் வேண்டும்.
6. அனைத்து நலத்திட்டங்களும் மாணவர்களுக்குச் சரியாக சென்றடைந்துள்ளதா என்பதை வழங்கல் பதிவேட்டின் (Issue Register) அடிப்படையில் ஆய்வு செய்து உறுதி செய்தல் வேண்டும்.
7. பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வையின் போது சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவித்தல் வேண்டும்.
8.பள்ளி முன்னறிவிப்பின்றி பார்வையின் போது தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, மடிக்கணினி, குறுந்தகடுகள் பயன்பாடு, விரைவு துலங்கள் குறியீட்டு பயன்பாடு, ஆங்கில அகராதி (Dictionary) பயன்பாடு, அறிவியல் மற்றும் கணித உபகரணப்பெட்டி பயன்பாடு, ஆகியன சார்ந்தும் ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் மாணவர்களுக்கு Mass Drill நடத்தப்படுகிறதா என்பதையும் உறுதி செய்தல் வேண்டும்.
9.மாணவர்களின் ஆங்கில பேச்சுத் திறனை அதிகரிக்க உதவும் Spoken English பயிற்சி கட்டகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், அந்தப் பயிற்சி கட்டகங்களைக் கொண்டு வாரம் ஒரு பாடவேளை மாணவர்களுக்கு Spoken English பயிற்சி ஆசிரியர்களால் அளிக்கப்படுவதையும் ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும்.
10. நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்ட LKG, UKG வகுப்புகளில் கல்வி செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

11 . பள்ளி முன்னறிவிப்பின்றி பார்வை / ஆண்டாய்வு மேற்கொள்ளும் பள்ளியில் SLAS தேர்வில் மாணவர்கள் பெற்ற கற்றல் அடைவு குறித்து ஆய்வு மேற்கொள்ளல் வேண்டும். NAS தேர்வு அப்பள்ளியில் நடத்தப்பட்டிருப்பின் NAS தேர்வில் மாணவர்களின் கற்றல் அடைவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
12 வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்தில் நடத்தப்பட்ட SLAS / NAS தேர்வுகள் சார்ந்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து பெற்று தங்களது குறிப்பேட்டில் (Diary) குறித்து வைத்திருத்தல் வேண்டும்.
13 . அரசாணை (நிலை) எண். 145 , பள்ளிக் கல்வித் (தொக 3(2)) துறை,நாள். 20.08.2019 மற்றும் அரசாணை (நிலை) எண். 202 , பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை, நாள்.11.11.2019 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள் தவறாமல் பின்பற்றப்படுகிறதா என்பதை பள்ளிப் பார்வை மற்றும் ஆண்டாய்வின் போது உறுதி செய்தல் வேண்டும்.
14. ஒவ்வொரு மாதமும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடத்துதல் வேண்டும். அக்கூட்டத்தில் பள்ளி ஆண்டாய்விலும், பள்ளி பார்வையிலும் கண்டறியப்பட்ட சிறப்பம்சங்கள் குறித்து விவாதித்தல் வேண்டும். மேலும் மாதவாரியான பாடத்திட்டம் முடித்தல், மாணவர்களின் பயிற்சியேடுகள் திருத்தம் செய்தல், பள்ளியின் சுற்றுப்புறத் தூய்மை குறித்தும் விவாதித்தல் வேண்டும். மேலும் மாணவர் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து விவாதித்து அவர்கள் பள்ளிக்கு வருகை தராத காரணங்களை தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, அம்மாணவர்களை மீளப் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
15. பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை / ஆண்டாய்வு செய்யும் போது பள்ளிகளில் பராமரிக்கப்படும் மாணவர் சேர்க்கை - நீக்கல் பதிவேடு, ஆசிரியர் வருகைப்பதிவேடு, மாணவர் வருகைப் பதிவேடு, அரசு வழங்கும் நலத்திட்டப்பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதை பதிவு செய்யும் வழங்கல் பதிவேடு மற்றும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் பள்ளி மானியம், பராமரிப்பு மானியம் குறித்த பதிவேடுகள் ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துதல் வேண்டும். அனைத்து நலத்திட்டங்களும் மாணவர்களுக்குச் சென்றடைந்துள்ளதா என்பதை துல்லியமாக ஆய்வு செய்தல் வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு உண்ணும் அனைத்து மாணவர்களுக்கும் 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும். ஆதிதிராவிட / மிகவும் பின்தங்கிய / பின்தங்கிய / சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் துறைகளின் வாயிலாக வழங்கப்படும் கல்வி உதவித் தொகை உரிய மாணவர்களுக்குப் பெற்று வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வின் போது உறுதி செய்தல் வேண்டும்.
16. பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை மற்றும் ஆண்டாய்வு செய்யும் பள்ளிகளில் ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியம், வருடாந்திர ஊதிய உயர்வு, தேர்வுநிலை, சிறப்பு நிலை மற்றும் ஆசிரியர் சேமநல நிதி ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தல் வேண்டும்.
17. கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர் விவரம் (Student Profile), ஆசிரியர் விவரம் (Teachers Profile), பள்ளிவிவரம் (School Profile) போன்றவை சரியாக உள்ளதா என்பதையும் இவ்விவரங்கள் பள்ளிகளில் உள்ள பதிவேடுகளுடன் ஒத்து உள்ளதா என்பதையும் ஆய்வில் உறுதி செய்தல் வேண்டும்.
18. பள்ளி கட்டட வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் தளவாடப் பொருட்கள் சார்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
19. பள்ளி முன் அறிவிப்பின்றி பார்வை / ஆண்டாய்வின் போது மராமத்து செய்ய வேண்டிய பள்ளிக் கட்டடங்கள், பள்ளி வளாகத்தில் பயன்படுத்த முடியாத பழுதடைந்த கட்டடங்கள், பழுதடைந்த சுற்றுச்சுவர், உயர் அழுத்த மின்கம்பங்கள் மற்றும் திறந்த வெளிக் கிணறுகள், முட்புதர்கள் போன்றவை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பின் அவை சார்ந்து உயர் அலுவலர்களுக்கும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கும் தெரிவித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வி இயக்ககத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் / அறிவுரைகள் சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றதா என்பதை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை / ஆண்டாய்வின்போது உறுதி செய்தல் வேண்டும்.
20. குழந்தைகள் தின விழாப் பேருரையில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் - அறிவுரைகள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை ஆய்வின் போது உறுதிசெய்தல் வேண்டும்.

21. மாணவ மாணவியர்கள் ஒவ்வொரு நாளும் உடல்சார்ந்த பயிற்சிகள் Physical activities - ஐ காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்ன ர் 15 நிமிடங்களும், மாலை 45 நிமிடங்களும் செய்வதனை ஆய்வின்போது உறுதிசெய்தல் வேண்டும். (மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் உடல் நலமில்லாத குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்துதல் வேண்டும்).
22. உதவி பெறும் பள்ளிகளின் மேலாண்மைப் புதுப்பித்தல், பதிவு செய்தல் , நான்கு வகைச் சான்றிதழ்கள் பெறுதல், ஆண்டுவாரியான ஆசிரியர் போன்றவை ஆய்வு செய்யப்பட வேண்டும்.
23. பணியிட நிர்ணயம், கற்பித்தல் மானியம் மற்றும் மாணவர் வருகைப்பதிவேடு, ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு, சம்பளப்பதிவேடு, அளவைப் பதிவேடு ஆகியவற்றை துல்லியமாக ஆய்வு செய்திடல் வேண்டும். மேலும் தங்கள் ஒன்றியத்தில் உள்ள அனைத்து உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் , சுயநிதி தொடக்க நடுநிலை மற்றும் நர்சரி பிரைமரிப் பள்ளிகளும் துவக்க அனுமதியும் , தொடர் அங்கீகாரமும் பெற்றிருத்தலை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்  - 2009 இன் படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் படி நுழைவுநிலை வகுப்பில் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர் சார்ந்த விவரங்கள் உரிய பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்படுகின்றதா என்பதை ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும்.
24. பள்ளி முன்னறிவிப்பின்றி பார்வை / ஆண்டாய்வின் போது மேற்கண்ட அனைத்து அறிவுரைகள் சார்ந்தும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தவறாது ஆய்வு செய்திடல் வேண்டும். மேலும் SMC கூட்டத் தீர்மானப் பதிவேட்டையும் ஆய்வு செய்திடல் வேண்டும்.
25. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்களைக் குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது முன் அறிவிப்பின்றி பார்வையிடுதல் வேண்டும் . மேலும் ஆண்டிற்கு ஒரு முறை ஆண்டாய்வு செய்தல் வேண்டும். மேலும் ஆசிரியர் சேமநலநிதி அனுமதிக்கும் கோப்புகள், ஆசிரியர் சேமநலநிதி சார்ந்த பதிவேடுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் அறிவிப்பின்றி பார்வையிடும்பொழுது, ஆண்டாய்வின்போதும் இச்செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அனைத்து அறிவுரைகள் சார்ந்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்து தொடர் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
26. முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் தவறாமல் ஆய்வுக்கூட்டம் நடத்துதல் வேண்டும். மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்களின் பள்ளிப் பார்வை, பள்ளி ஆண்டாய்வு மற்றும் இச்செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அனைத்து அறிவுரைகள் சார்ந்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் வேண்டும். மேலும் தொடர்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவைகளுக்குத் தவறாமல் தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் அடுத்து வருகின்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களில் தொடர் நடவடிக்கை எடுத்த விவரத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.
27. முதன்மைக் கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாதம் ஒருமுறை ஆய்வுக்கூட்டம் நடத்திய பின்னர் கீழ்க்கண்ட மூன்று படிவங்களில் விவரங்களைப் பெற்று தொகுத்து தொடக்கக் கல்வி இயக்குநருக்கு ஒவ்வொரு மாதமும் 10 - ம் தேதிக்குள் தவறாமல் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment