Showing posts with label கடைசி டாக் டைம். Show all posts
Showing posts with label கடைசி டாக் டைம். Show all posts

Tuesday, 28 July 2026

கடைசி டாக் டைம்!

அமானுஷ்யங்களின் முகவரி

அட்ரஸ் – 35

கடைசி டாக் டைம்!

அன்று வடபாதிமங்கலம் வி.எஸ்.டி. காலனியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

சுந்தராம்பாள் அம்மாளின் கணவர் சுந்தரேசன் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. ஆனால், சுந்தராம்பாள் அணிந்திருந்த சுங்கடிப் புடவையிலிருந்து மனது வரை துக்கத்தின் கருமை நிறம் இன்னும் மாறவில்லை. சுந்தரேசன் மறைந்ததிலிருந்து அவர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

காலையில் அஞ்சப்பர் அசல் அக்மார்க் சாம்பிராணி வாசம், மாலையில் ஸ்பிரிச்சுவலிசம் எனப்படும் ஆவிகளோடு தொடர்பு கொள்ளும் பயிற்சி என சுந்தராம்பாள் வாழ்க்கை மாறி விட்டது.

அந்தக் காலத்தில் வடபாதிமங்கலம் பகுதியில் ஜோதிடம், ஆவி உலகம், கர்ம மோட்சம் எனப் பெரிய வியாபாரமே நடந்து வந்தது.

சுந்தராம்பாளின் துக்கம் எந்த அளவுக்கு உச்சக்கட்டத்தில் இருந்ததென்றால், அவர் எப்போதும் ஆவிகளோடு பேசிக்கொண்டுதான் இருப்பார்.

"ஏண்டி வசந்தா, அந்த டீத்தூள் டப்பாவைக் கொஞ்சம் நகர்த்தி வை," என்று யாருடனும் சொல்ல மாட்டார்.

"சுந்தரேசா. அந்தத் தேயிலைத் தூள் டப்பா உங்கள் கைக்கு அருகில் தானே இருக்கும், கொஞ்சம் அசைத்து வையுங்களேன்," என்று காலியான காற்றைப் பார்த்துத்தான் பேசுவார்.

இந்தக் கூத்துகளையெல்லாம் பக்கத்து வீட்டு பஞ்சாபகேசன் வெகுநாட்களாகக் கவனித்துக் கொண்டே இருந்தார்.

பஞ்சாபகேசனுக்கு உடல்நலம் குன்றியது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கூடவே முதிய வயதில் வரும் அனைத்து நோய்களும் சேர்ந்து, "இனிமேல் ஆளை விடுங்கள்" என்ற அளவிற்குப் போக, பஞ்சு திருவாரூர் டிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அனைவரும் கைவிரித்து விட்டார்கள்.

இன்னும் இரண்டு மணி நேரம்தான் என இறுதி நேரம் கணிக்கப்பட்டது.

ஊர் மக்கள் அனைவரும் பஞ்சாபகேசனைப் பார்க்க மருத்துவமனையில் வரிசை கட்டி நின்றார்கள்.

இந்தச் செய்தி சுந்தராம்பாள் அம்மாளின் காதுக்கும் எட்டியது. உடனே அவரும் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாரானார்.

செய்தி பஞ்சாபகேசனின் காதுக்கு எட்டியது. ஆக்சிஜன் முகமூடி அணிந்திருந்தவர், அருகில் நின்ற தன் மகன் செந்திலின் கையைப் பிடித்து இழுத்தார்.

"டேய் செந்தில்!"  அவர் குரல் த தடுமாறியது.

"சொல்லுங்கப்பா. சுந்தராம்பாள் அத்தெ உங்களப் பார்க்க வருகிறாராம். கடைசி நேரத்தில ஆசீர்வாதம் வாங்கணுமாம்."

பஞ்சாபகேசன் பதறிப்போய்க் கண்களை உருட்டினார். ஆக்சிஜன் முகமூடியைக் கழற்றிப் போட்டுவிட்டு, "வேண்டாம்டா சாமி! அவளை உள்ளே விட்டுடாதீங்க!" என்று கத்த முயன்றார்.

"ஏன்ப்பா? அத்தெ உங்களப் பார்த்து நாலு நல்ல வார்த்தைகள் சொல்லிட்டுப் போகட்டுமே?"

"அடேய் அவள் உள்ளே வந்து என்னைப் பார்த்து ஆறுதல் சொல்ல மாட்டாள்டா! பஞ்சு, நீ எப்படியும் இன்னும் அரை மணி நேரத்தில மேலோகத்திற்குப் போயிடுவே. அங்கெ சுந்தரேசனைப் பார்த்தா, அவரிடம் இந்தத் தாம்பூலப் பையையும், போறப்ப மறந்துட்டுப்போன இந்த மியாமி குஷன் செப்பலையும் கொடுத்துடு. அப்புறம் நான் இன்னைக்குச் செய்த வத்தக்குழம்பு நல்லா இருந்துச்சான்னு கேட்டு எனக்குக் கனவில வந்து சொல்லுன்னு எங்கிட்டெ பார்சல் கொடுத்து அனுப்புவாள்டா! நான் அங்கப் போய் நிம்மதியா இருக்க முடியாது. அங்கேயும் என்னை அவ புருஷனுக்குக் கூரியர் பாயா மாத்திடுவாள்டா. எனக்கு அந்தக் கூரியர் பாய் வேலை வேண்டாம்டா. கதவைப் பூட்டுங்கடா முதலில்!" என்று கூறிவிட்டு, பஞ்சாபகேசன் தன் கடைசி மூச்சை விட்டு உயிர் நீத்தார்.

மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த சுந்தராம்பாள் அம்மாள், "அடடா பஞ்சு போய்ட்டானா? இரு, உடனே சுந்தரேசனை ஓய்ஜா போர்டு வெச்சு கூப்புட்டு, பஞ்சு அங்க நல்ல விதமா போய்ச் சேர்ந்துட்டானான்னு கேட்போம்." எனக் கூற, பஞ்சாபகேசனின் ஆவி அந்த இடத்திலிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது!

சுந்தராம்பாள் சாதாரண மனுஷிதானே. அதில் ஒன்றும் தப்பில்லை என்கிறீர்களா? சாதாரண மனுஷி, அசாதாரண அரசி என்றெல்லாம் இந்த விசயத்தில் எந்த வேறுபாடும் இல்லை. பிரிட்டனின் ராணியே இந்த ஆவி மேட்டரில் அப்படித்தான் நடந்திருக்கிறார். அது என்ன என்கிறீர்களா? அதுவும் ஒரு சுவாரசியமான கதை மட்டுமல்ல, உண்மையில் நடந்த வரலாறு. அது நாளைக்கு.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****