Sunday, 19 July 2026

டுபாக்கூர் பேயின் மரண வாக்குமூலம்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 26

டுபாக்கூர் பேயின் மரண வாக்குமூலம்!

அந்தக் காக் லேன் தெருவில் பத்தாயிரம் பேர் கூடியிருந்தார்கள். விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஏன், புகழ்பெற்ற எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன் வரை எல்லாரும் அந்த வீட்டு வாசலில் தவம் கிடந்தார்கள்.

லண்டன் நகரமே ஸ்தம்பித்தது.

சீப் இன்ஸ்பெக்டர் தாமஸ், புகழ்பெற்ற புலனாய்வளார் ஜான் எலியட்டின் தற்காலிக அலுவலக அறைக்குள் நுழைந்தார்.

"ஜான், லண்டன் மாநகரமே நடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவனைக் கைது செய்யச் சொல்லி மேயர் வரை அழுத்தம் கொடுக்கிறார்கள். என்ன செய்யப் போகிறாய்?"

ஜான் தன் பைப் புகையை மெதுவாக ஊதினார். சிறு புன்னகையை உதிர்த்தார்.

"தாமஸ், ஆவிகள் கிரிமினல் கேஸ் போடுவதை நான் நம்ப மாட்டேன். ஆத்மாவுக்கு ஆர்சனிக் வேதியியல் தெரியாது. இங்கே ஏதோ ஹியூமன் எரர் நடக்கிறது."

"அப்படின்னா?" என்றார் தாமஸ் புரியாமல்.

"இன்று இரவு இறுதி ஆட்டம். வாருங்கள்." என்றார் ஜான்.

அதே அறை.

நள்ளிரவு.

இம்முறை எலிசபெத்தின் கைகள் படுக்கையோடு சேர்த்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தன. வாயில் துணி அடைக்கப்பட்டிருந்தது. அவள் அசையக் கூட முடியாது.

"இப்போது சத்தம் வரட்டும், பார்ப்போம்," என்றார் இன்ஸ்பெக்டர் ஜான்.

நேரம் நகரத் தொடங்கியது.

12:00...

12.05…

12:10...

12.15…

12.20…

12.25…

12:30…

… … …

… … …

அறையில் நிசப்தம்.

எந்தச் சத்தமும் இல்லை.

"பார்த்தீர்களா இன்ஸ்பெக்டர்? எலிசபெத் அசையவில்லை என்றால் பேயும் வராது. பிகாஸ், த கேர்ள் இஸ் எலிசபெத்!" ஜான் புன்னகைத்தார்.

"ஆனால் ஜான், அவள் கைகள் கட்டப்பட்டிருந்த போது கூட கடந்த வாரம் சத்தம் வந்ததே?" எமிலி கேட்டாள்.

"அங்குதான் அந்தத் தவறு நடந்தது எமிலி. தாமஸ், அந்தப் பெண்ணின் படுக்கையைத் தூக்குங்கள்."

தாமஸ் படுக்கையைத் தூக்கினார். மெத்தைக்கு அடியில், எலிசபெத் உடுத்தியிருந்த மேலங்கியின் உள்பகுதியில் ஒரு தடிமனான, ஆறு இன்ச் மரக்கட்டை கயிற்றால் கட்டப்பட்டிருந்தது.

ஜான் அதைத் கையில் எடுத்தார். "சிம்பிள் மெக்கானிக்ஸ் எமிலி. கைகள் கட்டப்பட்டிருந்தாலும், அவள் தன் கால்களாலும் இடுப்பாலும் இந்த மரக்கட்டையைக் கட்டிலில் உரசி, தட்டி சத்தம் எழுப்பியிருக்கிறாள். ஒரு தேர்ந்த தட்டச்சு செய்பவள் போல. இதைத் துல்லியமாகச் செய்திருக்கிறாள்."

"எதற்காக?" தாமஸ் கேட்டார்.

இப்போது அறையின் மூலையில் நின்றுகொண்டிருந்த எலிசபெத்தின் தந்தை ரிச்சர்ட் பார்சன்ஸ் நடுங்கத் தொடங்கினான்.

"அவள் அப்பாவுக்காக!" ஜான் பார்சன்ஸை முறைத்தார்.

"பிரான்சிஸ் லின்க்ஸுக்கும் இவனுக்கும் பணத் தகராறு. அவனைப் பழிவாங்க, தன் மகளையே பேயாக மாற்றியிருக்கிறான் இந்த அயோக்கியன்."

பார்சன்ஸ் கைகளில் விலங்கு பூட்டப்பட்டு நியூகேட் சிறைக்குக் கூட்டிக்கொண்டு போகப்பட்டான்.

எமிலி ஜானைப் பார்த்துக் கேட்டாள். "ஜான், ஒரு நிமிடம் நான் நிஜமாகவே பேய் என்று பயந்துவிட்டேன். பேய்களுக்குக் கூட எவ்வளவு கிரிமினல் மூளை பார்த்தீர்களா?"

ஜான் லேசாகச் சிரித்தார்.

"பேய்களுக்கு மூளை கிடையாது எமிலி, ஏன்னா அவை இல்லவே இல்லை. ஆனால், பேய்களை உருவாக்கும் மனிதர்களுக்கு இருக்கிறதே. அது அக்மார்க் கிரிமினல் மூளை. விஞ்ஞானம் இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை ஒரு மரக்கட்டையை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த லண்டன் நகரத்தையே மிரட்டும். இனி அது முடியாது. கேஸ் குளோஸ்டு!"

இப்போது அந்தக் காக் லேன் தெருவில் ஈ, காக்கா கூட இல்லை, ஏன்… பேயும் இல்லை.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment