Monday, 27 July 2026

சாம்பார், சாவு மற்றும் பெஸ்ட் செல்லர்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 34

சாம்பார், சாவு மற்றும் பெஸ்ட் செல்லர்!

மறுமலர்ச்சிக் காலம் என்று கூறியதும் நமக்கு என்ன நினைவுக்கு வரும்? மைக்கேல் ஆஞ்சலோவின் சிற்பங்கள், டாவின்சியின் மோனாலிசா புன்னகை, கலிலியோவின் தொலைநோக்கி, அத்துடன் பூமி உருண்டை என்று உலகிற்குச் சொன்ன அறிவியல் அறிஞர்கள்.

"கடவுள் படைத்தார், நாம் வாழ்கிறோம்" என்று அமைதியாக இருந்த மனிதர்கள் அனைவரும், திடீரென்று விழித்துக் கொண்டு "ஏன்?", "எதற்கு?", "எப்படி?" என்று கேள்வி கேட்கத் தொடங்கிய காலம் அது. அறிவியலும் கலையும் சிறந்து விளங்கின.

ஆனால், இவ்வளவு அறிவு வளர்ந்த பிறகும் மனிதனுக்கு ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை. அதுதான் மரண பயம்!

பூமி சூரியனைச் சுற்றுகிறதா அல்லது சூரியன் பூமியைச் சுற்றுகிறதா என்று ஆராய்ச்சி செய்தவன் கூட, "நாம் இறந்த பிறகு அடுத்து என்னவாகும்?" என்று யோசிக்கும்போது லேசாக நடுங்கித்தான் போயிருக்கிறான். அதுதான் மனித இயல்பு. அறிவு வளர வளர பயமும் புதிது புதிதாக வடிவம் எடுக்கும்.

அப்போதுதான் அந்த ஐரோப்பியப் புத்தக வியாபாரிகளுக்கு ஒரு விசித்திரமான யோசனை தோன்றியிருக்கிறது.

"கேள்வி கேட்கும் மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது. சரி, இவர்களுக்கு மரண பயத்தைக் காட்டி ஒரு வணிகம் செய்தால் என்ன?"

அப்படி உருவானதுதான்  "எப்படிச் சாவது?" என்பதை ஒரு கலையைப் போல எடுத்துச் சொன்ன புத்தகங்கள். அதில் ஒன்றுதான் "Ars Moriendi" புத்தகம்.

மற்றபடி நீடாமங்கலத்தில் நீங்கள் தேடிப் பார்த்தாலும் டிமான்டி காலனியும் இருக்காது, அந்தப் பதின்மூன்றாம் குறுக்குத் தெருவையும் காண முடியாது. எனக்கு நீடாமங்கலத்தில் மார்த்தாண்டம் என்ற பெயரில் நண்பரும் யாரும் இல்லை.

யோசித்துப் பாருங்கள், இன்றைக்குக் கடைகளுக்குச் சென்றால் "எப்படிப் பணக்காரன் ஆவது?", "எப்படி வெற்றி பெறுவது?" என்று சுயமுன்னேற்றப் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அதேபோல பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் பெஸ்ட் செல்லராக இருந்தது இந்த "எப்படிச் சாவது?" ரகப் புத்தகங்கள்தான்!

அப்போது அச்சுக்கூடம் புதிதாக வந்திருந்த நேரம். பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக அச்சிடப்பட்டவை இந்தப் புத்தகங்கள்தான். மக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிப் படித்திருக்கிறார்கள்.

புத்தகத்தில் அப்படி என்னதான் இருந்தது என்கிறீர்களா?

ஒருவர் சாவுப் படுக்கையில் கிடக்கும்போது, அவரது ஆத்மாவைப் பிடிக்கப் பிசாசும் தேவதையும் சண்டை போடுமாம். சாவுகின்ற போதும் சண்டையா? என்று கேட்காதீர்கள்.

பிசாசு வந்து, "நீ வாழ்க்கையில் செய்த தவறெல்லாம் நினைவிருக்கிறதா? உனக்கு நரகம்தான்!" என்று பயமுறுத்துமாம்.

உடனே தேவதை வந்து, "பயப்படாதே, கடைசி நிமிடத்தில் கடவுளை நம்பு, சொர்க்கத்திற்குச் சென்றுவிடலாம்" என்று அறிவுரை கூறுமாம்.

இந்தக் கடைசி நேரப் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி? நிதானமாக உயிரை விடுவது எப்படி? அழுது புலம்பாமல், கண்ணியமாக உயிரைத் துறப்பது எப்படி? என்று ஸ்டெப் பை ஸ்டெப் கெயிடன்ஸ் அன்ட் கௌன்சிலிங் மேட்டர்களைத்தான் எப்படிச் சாவது வகையறா புத்தகங்களில் கதை அளந்தார்கள்.

சொல்லப்போனால், அது அக்காலகட்டத்தின் "மரணத்திற்கான பயனர் கையேடு"

மனிதனின் மிகப்பெரிய பலவீனமே அவனது பயம்தான். அந்தப் பயத்தை வைத்து வணிகம் செய்வது இன்று நேற்று வந்த கலை அன்று. மறுமலர்ச்சிக் காலத்திலேயே அது மிக நேர்த்தியாக நடந்திருக்கிறது.

அறிவியல் வளர்ந்து எல்லாவற்றையும் கேள்வி கேட்ட காலத்திலும், மரணம் என்ற அந்த ஒரே ஒரு விடை தெரியாத கேள்விக்கு முன்னால் மனிதன் கை கட்டித்தான் நின்றான். "வாழும்போது எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்தாலும், சாகும்போது ஒழுங்காகச் செத்துவிட வேண்டும்" என்ற மனநிலைக்கு வந்து விட்டான்.

அந்தக் கால கட்டங்களில் ரோஜர் பேக்கனும், டெகார்ட்டும் தத்துவம் பேசியிருக்கலாம். ஆனால், இரவில் தூங்கச் செல்லும்போது "நாளைக் காலை விடியும்போது கண் விழிக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று நினைத்துப் பார்த்து, அந்தப் புத்தகத்தைப் புரட்டிய சராசரி மனிதன்தான் அன்று உலகில் பெரும்பான்மையாக இருந்தான்.

அறிவியல் இவ்வளவு தூரம் வளர்ந்து, செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் இந்த நூற்றாண்டில் நாம் மட்டும் மாறிவிட்டோமா என்ன?

இன்றைக்கும் "100 ஆண்டுகள் வாழ வைக்கும் மாத்திரை", "ஆயுளை நீட்டிக்கும் உணவு முறை" என்று எத்தனையோ புதிய விஷயங்கள் வந்துகொண்டுதானே இருக்கின்றன.

அன்று "எப்படிச் சாவது?" என்று புத்தகம் படித்தான்.

இன்று "எப்படிச் சாகாமல் இருப்பது?" என்று கூகுளில் தேடுகிறான்.

வடிவம் தான் மாறியிருக்கிறது. மனிதனின் அந்தப் பயம்? அது அப்படியேதான் இருக்கிறது! அது இருக்கும் வரை அமானுஷ்யத்திற்குக் குஷியோ குஷிதான்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment