Tuesday, 21 July 2026

மரணத்தின் அட்வான்ஸ் புக்கிங்!

அமானுஷ்யத்தின் அட்ரஸ்

அட்ரஸ் – 28

மரணத்தின் அட்வான்ஸ் புக்கிங்!

மனிதனுக்கு எப்போதுமே இரண்டு விஷயங்கள் மீது அலாதியான ஆசை உண்டு.

ஒன்று, எதிர்காலத்தை முன்னாடியே தெரிந்து கொள்வது.

இன்னொன்று, அடுத்தவனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வது.

இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்தால் வருவதுதான் செயின்ட் மார்க்ஸ் ஈவ் பேண்டஸி!

ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளில் ஒரு விசித்திரமான நம்பிக்கை இருந்தது. வருஷத்துக்கு ஒருமுறை, அதாவது ஏப்ரல் 24 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, கிராமத்தில் இருக்கிற தேவாலய வாசலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். நடு இரவில் சரியாக 'டங்... டங்...' எனப் பன்னிரண்டு மணி அடிக்கும்போது, தேவாலயத்தின் கதவுகள் தானாகத் திறக்குமாம்.

அங்கே ஓர் ஊர்வலம் நடக்கும்.

ஆனால், அது வழக்கமான ஊர்வலம் இல்லை. அதில் செத்துப் போன ஆன்மாக்கள் வரப் போவதில்லை. அடுத்த ஒரு வருஷத்தில் யார் யாரெல்லாம் சாகப் போகிறார்களோ, அவர்களின் பெட்ச் எனப்படும் நிழல் உருவங்கள் வரிசையாக உள்ளே நுழைந்து வெளியே வருமாம்!

யோசித்துப் பாருங்கள். மரணத்தின் அட்வான்ஸ் புக்கிங் சிஸ்டம்!

பெட்ச் என்றால் என்னவென்றால், அது உங்களின் டூப்ளிகேட். தட் மீன்ஸ் ஆவி உலகில் உலவும் உங்களுடைய ஷாடோ காப்பி.

இந்த ஊர்வலத்தில் உங்கள் பக்கத்து வீட்டு ராமசாமியோ, எதிர் வீட்டு ஆண்டணியோ நிழல் உருவமாக நடந்து போனால், கன்பார்மாக அடுத்த 365 நாட்களுக்குள் அவருக்கு டிக்கெட் முடிந்தது என்று அர்த்தம்.

இதில் சில லாஜிக்கல் வெரைட்டிகளும் உண்டு:

அந்தப் பெட்ச் மெதுவாக நடந்து போனால், நோய் வாய்ப்பட்டு, மெல்ல மெல்ல இறக்கும்.

ஒருவேளை வேகமாக ஓடினால் அல்லது தட்டுத்தடுமாறி விழுந்தால், திடீர் விபத்து அல்லது அசம்பாவிதம் நடந்து காலியாகும்!

முழு உருவமாக இல்லாமல் பாதியிலேயே மறைந்தால், அந்த நபருக்கு லேசான கண்டம், ஆனால் தப்பித்துவிடுவார்.

நம்ம ஊரில் "எமனை நேரில் பார்த்தேன்" என்பார்களே, கிட்டத்தட்ட அதே கான்செப்ட். ஆனால், கொஞ்சம் ஐரோப்பிய மேக் அப்!

இப்போது யோசித்துப் பாருங்கள்! நள்ளிரவு 12 மணிக்குக் குளிரில் நடுங்கிக்கொண்டு தேவாலய வாசலில் உட்கார்ந்து, யார் சாகப்போகிறார்கள் என்று பார்ப்பதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்?

ஒருவேளை, அந்த ஊர்வலத்தில் வரிசையாக ஆட்கள் போய்க்கொண்டிருக்கும்போது, கடைசியாக நீங்கள் நடந்து போவதைப் பார்த்தால்?

"ஐயோ. அடுத்தது நாமதானா!" என்று அதிர்ச்சியிலேயே அங்கே பாதிப் பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்தானே?

அந்தக் கதையில் பிரகாசுக்கும் ஸ்டீபனுக்கும் நடந்தது அதுதான்.

ஆனால் அது உண்மையா?

அறிவியல் வளராத காலத்தில் மனிதன் பயத்தை ஆளுமை செய்யக் கண்டுபிடித்த தீர்வுதான் இது போன்ற மூடநம்பிக்கைகள். "யாருக்கு எப்போது மரணம் வரும் என்று யாருக்கும் தெரியாது" என்ற பிரபஞ்ச உண்மையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், "இல்லை இல்லை, எனக்குத் தெரியும். நான் நேற்று இரவு தேவாலய வாசலில் பார்த்தேன்!" என்று மனித மூளை உருவாக்கிய ஒரு க்ரைம் த்ரில்லர்தான் இந்த நம்பிக்கை.

இப்போது டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்துவிட்டது! ஆப்பிள் வாட்ச் இதயத் துடிப்பைப் பார்த்து "டாக்டரைப் பார்" என்கிறது. கூகுள் மேப் டிராபிக்கைக் காட்டுகிறது. ஆனால், 500 வருடங்களுக்கு முன்பே மனிதன் மரணத்துக்கான லைவ் டிராபிக் பார்க்க தேவாலய வாசலில் காத்துக் கிடந்திருக்கிறான் என்பதை நினைத்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

வாழ்க்கையின் அழகு என்னவென்றால், அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று தெரியாமல் இருப்பதுதான். அதை முன்கூட்டியே பார்த்துவிட்டால், அப்புறம் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்கிறது?

ஆனால், அதற்கு அமானுஷ்யத்தை சதா தேடிக் கொண்டிருக்கும் உங்கள் மனம் விட வேண்டுமே! அது எப்போதும் ஒரு பிரிடிக்சனைத் தேடிக் கொண்டேதான் இருக்கும். அதை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே, இங்கே உள்ளே வந்து விட்டால், அப்புறம் நோ எக்சிட்.

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment