Thursday, 23 July 2026

மிஸ்டர் ஆவியின் கால்விரல் குறிப்புகள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 30

மிஸ்டர் ஆவியின் கால்விரல் குறிப்புகள்!

1848 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஹைடேஸ்வில் என்ற சிறிய கிராமத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது.

அது ஒரு பழைய வீடு.

இரவு நேரத்தில் சுவரில் இருந்து டக்... டக்... என்று சத்தம் கேட்டது. சாதாரண மனிதராக இருந்தால், எலியாக இருக்கும் என்று சுவரில் ஒரு தட்டு தட்டிவிட்டுத் தூங்கச் சென்றிருப்பார்கள்.

ஆனால், அங்கு இருந்த கேத்ரின், மார்கரெட் என்ற பாக்ஸ் சகோதரிகள் அதை விட்டுவிடவில்லை.

"வணக்கம் திரு. ஆவி. நான் இரண்டு முறை தட்டுகிறேன், நீ மூன்று முறை தட்டு" என்று அதை வைத்து விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.

அதிசயம்!

அந்தச் சத்தமும் பதில் பேசியது.

அவ்வளவுதான்!

இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

"இறந்தவர்களுடன் பேசலாம், அவர்கள் சுவரில் தட்டிச் செய்தி அனுப்புகிறார்கள்!" என்று அமெரிக்காவே பரபரப்பானது. அமெரிக்கா மட்டும் ஆவிகளுக்கு விதிவிலக்கா என்ன? நம் மன்னார்குடி போன்றுதான் அங்கும் நடந்தது.

இதற்கு அந்தப் பாக்ஸ் சகோதரிகள் ஸ்பிரிச்சுவலிசம் என்று ஒரு பெயர் வைத்தார்கள். பாக்ஸ் சகோதரிகள் ஊர் ஊராகச் சென்று மேடை அமைத்து ஆவிகளை வரவழைத்து, சுவரில் தட்ட வைத்து, பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். பெரிய அறிஞர்களும் எழுத்தாளர்களும் வரிசையில் நின்றார்கள்.

சரி, அந்தச் சத்தம் உண்மையிலேயே ஆவி எழுப்பியதுதானா?

சில காலம் கழித்து, அந்தச் சகோதரிகளே உண்மையை வெளிப்படுத்தினார்கள். "அப்படி எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் கால் விரல் மூட்டுகளை நொடித்துத்தான் அந்தச் சத்தத்தை வரவழைத்தோம்!" என்று மேடையிலேயே செய்து காட்டி உண்மையை உடைத்தார்கள்.

ஆனால், இங்குதான் ஒரு சுவாரசியமான மனித உளவியல் இருக்கிறது!

அவர்களே "நாங்கள் ஏமாற்றினோம்" என்று ஒப்புக்கொண்ட பிறகும், மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. "இல்லை. அவர்கள் ஆவிகளுடன் பேசுவதை மறைப்பதற்காகவே இப்போது பொய் சொல்கிறார்கள்!" என்று மக்கள் வாதிட்டார்கள்.

ஏனென்றால், அந்த காலத்தில் ஒரு சின்னக் காயம் பட்டால் கூடத் தொற்று ஏற்பட்டு மரணம் நிச்சயம். குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம். இறந்தவர்களுடன் எப்படியாவது பேசிவிட மாட்டோமா என்கிற அந்த சென்டிமென்ட்தான் ஆவிகளுக்கான மார்க்கெட்டை அன்று தக்க வைத்தது.

அன்று தொடங்கிய அந்த ஆவி வணிகம், இன்று வரை தட்டச்சுப் பொறி, ஓய்ஜா போர்டு, மீடியம் என்று பல்வேறு வடிவங்களில் வளர்ந்து நிற்கிறது.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு. தனக்கு நெருக்கமானவர்கள் இறந்துவிட்டால், அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவர்கள் எங்கேனும் இருப்பார்கள், நம்மிடம் பேசுவார்கள் என்று நம்பத் தோன்றும். இந்த நம்பிக்கை விருப்பத்தைத்தான் இந்த ஆவி வியாபாரிகள் மூலதனமாக்கிக் கொள்கிறார்கள்.

அமானுஷ்யம் என்பது வெளியில் இல்லை; அது நம் பயத்திலும், ஏமாறத் தயாராக இருக்கும் மனத்திலும்தான் இருக்கிறது. சுவரில் தட்டும் சத்தத்தைக் கேட்டுப் பயப்படுவதை விட, வீட்டிற்குள் எலி இருக்கிறதா என்று விளக்கைப்போட்டுப் பார்ப்பதே எப்பொழுதும் புத்திசாலித்தனம்!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment